தமிழர் தாயக கோட்பாட்டை உடைப்பதே அதிகாரப் பறிப்பின் நோக்கம் -சபா குகதாஸ்

தமிழர் தாயக கோட்பாட்டை உடைப்பதே அதிகாரப் பறிப்பின் நோக்கம் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழ் மக்கள் வாழும் மாகாணங்களின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப் பெறுவதன் நோக்கம், தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைத்து சிங்கள குடியேற்றங்களை நிலைப்படுத்தி கொள்வதற்கு ஆகும்.

சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நிரலை யார் ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தவில்லை மாறாக வேகமாக செயற்படுத்தியே வருகின்றனர். தற்போதைய ஆட்சியாளர்கள் கொரோனா பெருந் தொற்றைக் காரணம் காட்டி பயணத் தடை ஒன்றை வைத்துக் கொண்டு மிக வேகமாக முன்னேடுக்க ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னி மாவட்டத்தை இவர்கள் குறிவைத்துள்ளனர். வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாகாண அதிகாரங்கள் மத்திக்கு செல்வதை அந்த மாகாண மக்கள் ஆச்சரியமாக பார்க்கமாட்டார்கள். காரணம் எல்லாமே ஒரே இனம் தான். ஆனால் வடக்கு கிழக்கு அவ்வாறு அல்ல. அதனால் தமிழர் தாயகம் என்பது முழுமையான தமிழ் பேசும் மக்களைக்  கொண்ட மாவட்டம்.  அதனை இனங்களின் கலப்பு மாவட்டமாக மாற்ற வேண்டும். அதுவே அரசின் நோக்கம்.

இதன் முதற் கட்டமாக  முல்லைத்தீவு மணலாறு, வவுனியா,மன்னார்,கந்தளாய், சேருவில்,புல்மோட்டை ஆகிய இடங்கள் நூறு நவீன நகராக்கத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.  காரணம் குறிப்பிட்ட தமிழர் தாயகப்பகுதியில் தற்போது சிங்கள குடியேற்றங்கள் ஏற்கனவே அமையப் பெற்றுள்ளன. அவற்றை மேலும் விரிவாக்கம் செய்து குடியேற்ற சிங்களவர்களை அதிகரித்தல் தான் நோக்கம். அத்துடன் உருவாகும் நகரங்களில் பாரிய தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகளும் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனைவிட வன்னிமாவட்ட பொது வைத்திய சாலைகள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டமை. மாகாணப் பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக மாற்றப்பட்டமை மாகாண காணிகள் தொல்லியல்,வனவளத் திணைக்களத்தினுள் உள்வாங்கப்படுதல் போன்ற பல அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக அதிகமாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்துக்களின் தொன்மையான இடங்களான குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் போன்ற பல இடங்கள் வன்னியில் பௌத்த மயமாக்கலுக்கு தீவிரமாக உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே மாகாண அதிகாரங்களை பறிப்பதன் மூலம் தமிழர் தாயக கோட்பாட்டை உடைத்து சிங்கள குடியேற்றங்களை விரிவு படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு” என்றார்.