தமிழீழ மண் மீட்பு மற்றும் நில அபகரிப்புக்கு எதிரான போரில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நாள் (நவம்பர் 27ம்) நெருங்கி வரும் நிலையில், கடந்த 21ம்திகதி முதல் மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ளது. மேலும் தாயகத்தில் துயிலுமில்லங்கள் அமையப் பட்டிருந்த பகுதிகளை மக்கள் சிரமதானம் செய்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந் துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்திலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டுக்கு முன்னர் சில மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் அழித்திருந்தனர். அதைத்தொடர்ந்து 2009 ஆண்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட போர் இன வழிப்பில் முடிவுற்ற பின், தமிழர் தாயகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு அந் நிலத்தில் இராணுவம் தனது முகாம்களை அமைத்துக்கொண்டது. அவ் வேளைகளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் பெரும் சிரமத்தையும் இராணுவத்தினரால் நெருக்கடி களையும் சந்தித்தனர். பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றங் களை அடுத்து இந்த நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு, சில துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர்.
தற்போது அனுர குமார தலைமையில் புதிய அரசு தலைமை ஏற்றுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் எந்த வித அச்ச நிலையையும் சந்திக்காது வாழ்வது போல் ஓர் பார்வை உள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களின் சிரமதானப்பணியின் போது இதுவரையில் இராணுவம் மற்றும் காவல் துறையினரால் மக்கள் எந்த நெருக்கடியையும் சந்திக்கவில்லை. எது எப்படி இருந்தாலும் மாவீரர்களை நினைவு கூருவதற்கு இது வரை யில் தமிழ் மக்கள் இலங்கை அரசினுடைய அனுமதியைக் கோரி நின்றதில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், மாவீரர் நாள் நினைவு கூரல், மாவீரர் குடும்பங்களின் தற்போதைய நிலை தொடர்பில் வடக்கு கிழக்கில் வாழும் சமூக சிவில் செயற்பாட்டாளர்கள் தங்களது கருத்துக்களை இவ்வாறு பகிர்ந்து கொண்டனர்.
கவிஞர் தீபச் செல்வன்
மாவீரர் குடும்பங்களின் நிலை, போராளிகள் எல்லோரும் தற்போது பொருளாதார ரீதியாக நெருக்கடிக்குள் வாழ்ந்து வருகிறார்கள். அதை விடவும் இவர்கள் மீது இராணுவ அழுத்தம், விசாரணை அழுத்தம், கண்காணிப்பு அழுத்தம் என பல்வேறு அழுத்தங்கள் இவர்களினுடைய அன்றாட வாழ்க்கையை ஒரு கொந்தளிப்பு நிலைக் குள் தள்ளுகின்ற விதமாக அமைந்திருக்கிறது. 2009க்கு முன்பு மாவீரர் குடும்ப நலன்களை பாதுகாக்க மாவீரர் குடும்ப நலன் காப்பகம் ஒன்றை தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் உருவாக்கியிருந்தார். அதில் நானும் இருந்திருக் கிறேன். அதன் மூலம் எனது கல்விக்கான உதவிகள் கூட கிடைக்கப் பெற்றதுடன் எனது அண்ணாவும் தேசிய விடுதலை போராட்டுத்துக்காக பாடுபட்ட வர் என்ற வகையில் கரிசனை செலுத்தப் பட்டது.
தற்போது இப்படியான கட்டமைப்புக்கள் இல்லை. இன்றைய இளைஞர்கள் திசை காட்டியை நோக்கி அநுரவின் மயக்கத்தில் உள்ளார்கள். தேச விடுதலைக்காக போராடியவர்களின் குடும்ப நிலை மோசமாக உள்ளது. தமிழர் தேச விடியலுக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களின் குடும் பங்களின் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டு வர வேண்டுமாக தமிழர்களின் வாழ்வில் விடி யலை கொண்டு வர வேண்டும்.
துயிலும் இல்லங்களில் உள்ள இராணு வத்தை அரசாங்கம் வெளியேற்ற வேண்டும் என்பதை இது தொடர்பில் கூறும் போது ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன். இந்த அரசாங் கம் அரசியலுக்காக சிறு பாதைகளை திறந்து விடுவது இராணுவ முகாமை வெளியேற்றுவது என கூறும் போது மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவ முகாம்களை முதலில் வெளியேற்றம் செய்ய வேண்டும் என்பதே உண் மையான அரசியல் மாற்றமாகும் .வடக்கு தெற்கில் பிரிவினை இல்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறுகிறார். ஆனால் தெற்கில் இருந்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என ஜே.வி.பி அப்போதே ஆயுதமேந்தி போராடியது .ஆனாலும் அரசியலுக்காக இன்றி எமது மாவீரர்கள் விதைக்கப்பட்ட துயிலும் இல்லங்களில் நினைவேந்தலை செய்ய வழி விட வேண்டும். அப்போது தான் உண்மையான அர்த்தமுள்ள அரசியல் மாற்றமாக கருதப்படும். கொடிகாமம், கோப்பாய், விசுவமடு, முள்ளியவளை போன்ற தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி விடுவிக்க வேண்டும். வடக்கில் அநுர அரசாங்கத்துக்காக ஒத்துழைத்த நன்றிக் கடனுக்காக ஜனாதிபதி இதனையாவது செய்ய வேண்டும்.
முன்னால் தமிழ் பொது வேட்பாளும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.அரியநேத்திரன்
கடந்த 15 வருடங்களாக மாவீரர் குடும்பங்கள் நிம்மதியிழந்து தான் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். தங்களை மாவீரர் குடும்பம் என கூறி உதவிகள் கூட பெற முடியாமல் அவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். பெரும் அச்சுறுத்தள்களும் அழுத்தங்களும் சுதந்திரமாக வெளியில் வர முடியாத நிலையும் கடந்த காலங்களில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் உதவிகள் இன்றி பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் மாவீரர் குடும்பங்களும், பொருளாதாரத்தில் நலிவுற்றபோராளிகளும் வாழ் கிறார்கள். தொடர்ச்சியான கண்காணிப்பு வட்டத் தின் கீழ் தான் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படுகிறது மாவீரர் குடும்பங்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து பல மாவீரர் குடும்பங்கள் மீள முடியாது ஏக்கத்தில் உள்ளார்கள். எது எவ்வாறாக இருந்தாலும் துயிலும் இல்லக்களில் நினைவேந்தலின் போது ஒற்றுமையாக செயற்படுகிறார்கள் .வன்னி, கிளி நொச்சி, முல்லைத்தீவு , வவுனியா போன்ற மாவட் டங்களில் கிடைக்கும் உதவிகள் போன்று கிழக்கு மாவீரர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது.
துயிலும் இல்லங்களில் உள்ள குறிப்பாக மட்டக்களப்பில் நான்கு துயிலுமில்லங்கள் காணப்படுகிறது. இதில் சிலது முழுமையான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இவைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அநுர குமார அரசாங்கம் போராளிகளின் உணர்வுகளை மதிக்க வேண்டும். மஹிந்த அரசாங்கத்திலும் பல கெடு பிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களை நினைவு கூர்ந்தோம். இந்த அரசாங்கம் துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி சட்ட பூர்வமாக புனித தலங்களாக பிரகடனப்படுத்தி அறிவிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கைகளாக காணப்படுகிறது.
திருமதி தேவிகா சிவில் செயற்பாட்டாளர்
எங்களது உணர்வு பூர்வமான அஞ்சலிகளை செலுத்த மாவீரர் நாளை சுதந்திரமாக செய்ய அனுமதியளிக்க வேண்டும். அச்சுறுத்தலோ கெடுபிடிகள் இன்றி இதனை செய்ய அநுர குமார அரசாங்கம் வழி விட வேண்டும். எங்கள் உயிர் நீத்த உறவுகளுக்கு நாங்கள் தான் அஞ்சலி செய்ய வேண்டும். மாவீரர் துயிலுமில்லங்களில் உள்ள இராணுவ முகாமை அகற்ற இலங்கை அரசாங்கம் உதவ வேண்டும் என்பதுடன் கடந்த காலத்தில் திருகோணமலை சம்பூர் ஆலங்குள பகுதியில் உள்ள துயிலுமில்லங்களில் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நினைவேந்தல் இடம் பெற்றது இம் முறை எந்த வித தடைகளும் இன்றி சுதந்திரமாக செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னதாக தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் தங்களது மாவீரர் நினைவு நாளை நடாத்துவதில் பல சிரமங்களை எதிர் கொண்டனர் இந்த நிலை மாறி வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் (27.11.2024) மாவீரர் நாள் நினைவஞ்சலிகளை இடையூறுகள் இன்றி செய்ய வழிவகைகளை அரசு செய்ய வேண்டும் என்பதே தமிழ் மக்களது பெரும் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.