Tamil News
Home செய்திகள் தமிழர் தாயகப் பிரதேசங்கள் பறிபோகும் அபாயநிலை.

தமிழர் தாயகப் பிரதேசங்கள் பறிபோகும் அபாயநிலை.

தமிழ் கட்சிகள் பிரிந்து வெளியேறிச் செல்கின்றமை எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு ஒரு காரணமாக அமையும். என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களிற்கும், அதன் உறுப்பினர்கள், ஊழியர்களுக்கு ஆற்றிய மகத்தான சேவையினை கௌரவிக்கும் வகையிலும், தரம் 5 புலமைப்பரிசில் சித்தி பெற்ற, பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மன்னார் பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தில் இடம் பெற்றது.

இதன் போது இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தந்தை செல்வநாயகம் அவர்களினால் பிரதமர்களிடையே தமிழ் மக்களின் சுயாட்சி உரிமை சம்மந்தமாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு ஒப்பந்தங்கள் எழுதப்பட்டு அவை கிழித்து எறியப்பட்டது.

அதன் பிற்பாடு தந்தை செல்வநாயகம் அவர்கள் 1973 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தமிழீழ கொள்கையை பிரகடனம் செய்தார். தமிழீழம் தான் தமிழர்களுக்கு ஒரே தீர்வாக அமையும் என்று பிரகடனம் செய்தார்.

அதன் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் அவர்களினால் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழர்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராட்டம் இடம் பெற்றது.

அந்த போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனித்ததன் பிற்பாடு தமிழர்களின் நிலமை, தமிழர்களின் தனித்துவம், தமிழர்களின் இன்றைய சூழ்நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் இதற்கு முற்பாடு 2001 ஆம் ஆண்டு தமிழர்களின் நலன் சார்ந்த முடிவை எடுப்பதற்கும்,தமிழர்களின் அரசியல் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கும் தமிழ் தேசியக்கூட்மைப்பு உருவாக்கப்பட்டது.

உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.இருந்தாலும் தற்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிச் சென்ற ஒரு சில கட்சிகள் தாங்கள் தனித்துவமாக தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாதகத்திற்கு அப்பால் அது தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தமிழர்களினுடைய தனித்துவத்தை தேசியக்கட்சிகள் உடைக்க நினைக்கின்ற இந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிறிந்து சென்ற ஒரு சில கட்சிகள் வன்னி மாவட்டத்தில் மக்களுடைய வாக்குகளை பிறிக்க நினைப்பது அது சிங்கள முஸ்ஸீம் மக்களினுடைய பிரதி நிதித்துவத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

எதிர் காலத்தில் தமிழர்களினுடைய அடையாளம் வன்னியில் அழிவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரையும் வெளியேற்றவில்லை.

அவர்கள் தாங்களாகவே வெளியேறிச் சென்றனர். அவர்கள் வெளியேறிச் செல்கின்ற போது அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு காரணம் தங்களுடைய இருப்பு சம்மந்தமாகவே அமைந்தது.

நாடாளுமன்ற தொகுதிக்கான ஆசன பங்கீடு தொடர்பான பிரச்சினை,தேசிய பட்டியலில் தங்களுக்கான ஆசனம் வழங்கப்படவில்லை என்கின்ற கோரிக்கைகளுக்கு அமைவாக அவர்கள் கட்சியில் இருந்து வெளியேறிச் சென்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்

Exit mobile version