தமிழர் இதயபூமியை மகாவலி எல் வலயம் அபகரிக்க முயற்சி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தின் மூலம் கபளீகரம் செய்ய முயற்சிக்கும் மத்திய அரசாங்கத்தின் முயற்சிக்கு வடக்கு மாகாண ஆளுநர் நிர்வாகம் உடன்படக் கூடாது அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களை சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தி தமிழர் தாயக கோட்பாட்டை உடைக்கும் பேரினவாத அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்த தொடர்ந்து தமிழ் மக்கள் போராடி வரும் நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பை நிலத் தொடர்பு ரீதியாக இல்லாது ஒழிக்கும் இந்த மகாவலி எல் வலயம் திட்டமிட்ட ஒரு இனவழிப்பு என்பதை தெட்டத் தெளிவாக காட்டுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் தமிழர்களின் இதய பூமி அதனை அபகரிக்கும் பாரிய திட்டம் முதற்கட்டமாக மணலாறு பிரதேசம் வெலிஓயா என்ற பெயர்மாற்று சிங்கள குடியேற்றத்துடன் ஆரம்பமாகி தென்னமரவடி, கொக்குளாய், கொக்குத் தொடுவாய்,கருநாட்டுக்கேணி,செம்மலை தண்ணீர் ஊற்று  என பெரும் நிலப் பிரதேசங்களை உள்ளடக்கி 16 அதிகமான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கொண்ட ஒரு சிங்கள பிரதேச செயலகப் பிரிவை குறிவைத்து நகர்த்தப்படுகின்றது.

இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் 1984 ஆண்டின் பின்னர் யுத்தத்தினால் இடம்பெயர ஆரம்பித்து 2010 வரை அகதிகளாக அவலங்களை அனுபவித்து மிகுந்த வறுமையில் தற்போது குடியேறி வாழும் போது போதிய உதவிகள் இன்றி துன்படுகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் 75000 இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் பெரும் துயரங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கான சுய தொழில் முயற்சிக்கு காணிகள் வழங்குவதன் மூலம் தொழில் வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு வழங்கலாம் அத்துடன் தற்சார்புப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் இதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நிர்வாகம் அரசாங்கத்திடம் திட்டங்களை முன் மொழிந்து இளைய தலைமுறையின் நல்வாழ்விற்கு உதவி புரிய வேண்டும்.

ஏற்கனவே புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு காணி வழங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பித்தோர் எதிர்பார்த்து காத்திருக்கும் போது அவர்களுக்கான தீர்வையாவது இதன் ஊடாக தீர்க்க நடவடிக்கை எடுங்கள். வடக்கு மாகாண ஆளுநர் நிர்வாகம் நியாயமற்ற குடியேற்ற திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்காது தமிழர்களின் இருப்பை பாதுகாக்க நீதியாக நடந்து கொள்ள வேண்டும்.