தமிழர்களும் பிரிக்கமுடியாத அவர்தம் சுயநிர்ணய உரிமையும்: முனைவர் போல் நியூமன் புனித சூசையப்பர்

சிறீலங்காவின் வரலாற்றில் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் பொதுவானதென்று எதுவும் இருக்கவில்லை. 1834ம் ஆண்டு வரைக் கும் தமிழர்கள் சுதந்திரமான யாழ்ப்பாண அரசுக்கு உரியவர்களாக இருந்தார்கள். தமது நிர்வாக நலனுக்காக பிரித்தானியர்கள் தமிழரின் இராச்சியத்தை நாட்டின் ஏனைய பகுதியுடன் இணைத்துக்கொண்டார்கள். 1948ம் ஆண்டில் பிரித்தானியர்கள் சிறீலங்காவை விட்டுச் சென்ற பொழுது, தமிழ் மக்களின் தேசியத்தை மறுத்து, நாட்டின் மேற்கு, தெற்கு, மத்திய பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்த சிங்கள மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கையளித்துச் சென்றார்கள்.

1948ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளாகி வந்ததுடன், 2009ம் ஆண்டில் இந்த இனவழிப்பு ஒரு உச்சக்கட்டத்தை அடைந்தது மட்டுமன்றி, 2009ம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்குத் தொடர்ந்தும் அவர்கள் உள்ளாகி வருகிறார்கள்.

சிறிலங்காவின் வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையாக வாழ்கின்ற தமிழ் மக்கள், தொடர்ச்சியான இனவேற்றுமைக்கு உள் ளாகி வருவதுடன், நான்கில் ஒரு பகுதிக்கும் அதிகமான தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து, பல நாடுகளில் அகதிகளாகவும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். இறந்த தமது உறவுகளை நினைவுகூர்வதற்கான உரிமை கூட அவர்களது தாயகத்தில் அவர்களுக்கு மறுக்கப் படுகிறது.

தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடப் பட்ட இந்த இனவழிப்புப் போரின் காரணமாக, 90,000க்கு மேற்பட்டவர்கள் கணவர்களை இழந்தவர்களாக்கப்பட்டதுடன், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் சமூக, பொருண்மிய மற்றும் உளவியல் வாழ்வு சின்னாபின்னமாக்கப்பட்டது மட்டுமன்றி, 146,679 அப்பாவிப் பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். விலைவாசி உயர்வின் காரணமாகவும்,  அரச உதவி எதுவும் இல்லாத நிலையிலும், சிறீலங்காவில் ஏற்பட்ட பொருண்மிய வீழ்ச்சி காரணமாக தமிழ் மக்கள் இருமடங்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சிறீலங்காவைப் பொறுத்தவரையில், அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி, 2500 நாட்களுக்கும் மேலாக, அவர்களது உறவுகள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இவ்வாறாகத் தமது உறவுகளைத் தேடிப் போராடி வருபவர்கள், படையினரிடமிருந்து அச்சுறுத்தல்களையும், துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகிறார் கள். தமிழர் பிரதேசத்தில் சிங்கள அரசின் ஆக்கிரமிப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது. தமிழரின் இதயபூமியில் ஒவ்வொரு மூன்று தமிழருக்கும் ஒரு இராணுவச்சிப்பாய் என்ற விகிதத்தில் இராணுவப்பிரசன்னம் அங்கே வியாபித்திருக்கிறது.

தமிழரின் உரிமைகளை மறுக்கும் அரசு, சிங்கள மற்றும் பௌத்த சமயம் சார்ந்த மக்களின் நலன்களைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாத்து வருகின்றது. தமிழ் மக்களின் பொருண்மிய வளம் தென் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களால் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. பௌத்த மதத்தைப் பின்பற்றுவர்கள் இல்லாத ஒரு பிரதேசத்தில், பௌத்த வணக்கத் தலங்களை நிறுவுகின்ற செயற்பாடு, ஆளும் சிங்கள வர்க்கத்தினால் தாம் அடிமைப்படுத் தப்பட்டுள்ளதை ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் நினைவூட்டிக்கொண்டிருக்கிறது. எந்தவிதமான பொருண்மிய உதவியும் அரசியல் மற்றும் குடியுரிமைக்காகப் போராடுகின்ற தமிழ்மக்களுக்கு ஈடாகிவிட முடியாது.

உண்மையில் இலங்கைத் தீவில் இப்போது அமைதி உதித்துவிட்டதா? பல்லாண்டு காலமாக துன்பங்களை அனுபவித்து வரும் தமிழ் மக்களுக்கு, எந்தவகையான அரசியல் பொதிகளை 2009க்குப் பின்னர் சிறீலங்காவை ஆட்சிசெய்த அரசுகள் வழங்கியிருக்கின்றன?

இனவழிப்பைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் தமிழ் மக்கள், பூகோள அரசியல் என்ற பெயரில், தமக்கான நீதி தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதன் காரணமாகத் தமக்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும், தாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகவும், உணர் வது மட்டுமன்றி விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.2008ம் ஆண்டில், தமது பொறுப்பில் இருந்து விலகி, போர்ப்பிரதேசமான வடக்குக் கிழக்கில் இருந்து வெளியேறியதன் மூலம், சிறிலங்காவில் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐக்கிய நாடுகள் தோல்வியையே சந்தித்தது. அன்றிலிருந்து, எல்லாவிதமான சான்றுகள் மற்றும் ஆதாரங்கள் இருந்தும், சிறீலங்காவைப் பொறுப்புக்கூற வைப்பதில் வெற்றிகாணாத ஐக்கிய நாடுகள், நடைமுறைப்படுத்தப்படாத தீர்மானங்களை நிறைவேற்றி, நீதிக்காக ஒலித்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் குரலுக்குத் தகுந்த பதில்கொடுக்கத் தவறிவருகிறது.

பன்னாட்டு விசாரணை, தென் ஆபிரிக்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது போன்ற அமைதிக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணையம் உருவாக்கப்படல், இராணுவப் பிரசன்னத்திலிருந்து தமிழ் மக்கள் பிரதேசங்களை விடு வித்தல், பொதுமக்களுக்குச் சொந்தமான காணி களை அவர்களுக்கே வழங்குதல், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல்  போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான தீர்வையே தமிழ் மக்கள் தற்போது நாடிநிற்கிறார்கள்.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்படும் பொழுது மட்டுமே, தமிழ் மக்கள் கோரும் நீதி அவர்களுக்குக் கிட்டும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை இன வழிப்பின் பாதிப்புக்கு உள்ளான எந்தவொரு மக்களினத்துக்கும் உள்ள ஒரு உரிமையாகும். தமது சுயநிர்ணய உரிமை நிலைநிறுத்தப்படும் ஒரு எதிர்காலத்துக்காகவே தமிழ் மக்கள் இன்றும் காத்திருக்கிறார்கள்.

 முனைவர் போல் நியூமன் புனித சூசையப்பர் பல்கலைக்கழகம், பெங்களுரு, இந்தியா