தமிழர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பலம் ஒற்றுமை தான்-TPC

தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பலம் ஒற்றுமை தான் எனக்குறிப்பிட்ட  தமிழ் மக்கள் பேரவை,  அதற்கான செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவை, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான இன்றைய சூழ்நிலையில் தமிழ்த்தேசியத்தின் பேரால் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஓரணியில் செயற்படுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் ஆகும்.

தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பலம் ஒற்றுமை என்பதை தமிழ் மக்கள் பேரவை பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளது. அதற்கான செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ் அரசியல் கட்சிகள் சூழ்நிலை கருதி ஒன்றுபட்டு இருப்பது எங்கள் அரசியல் புலத்தில் ஒரு முக்கியமான விடயம் ஆகும்.

எமது தமிழ் மக்களின் ஒற்றுமை இன்னும் பலம் பெற வேண்டும். இதற்காக அனைத்துத் தரப்புக்களும் பேதங்களை மறந்து தமிழ் இனத்திற்காக ஒன்றுபடுவது அவசியமாகும்.

தமிழ்த்தேசியத்தின்பால் பற்றுறுதி கொண்ட அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு, ஒருமித்து எடுக்கின்ற தீர்மானங்கள் வலிமை மிக்கவையாக இருக்கும்.

இவ்வாறு ஒன்றுபட்டு எடுக்கின்ற தீர்மானங்களுக்கு தமிழ் மக்கள் பேரவையினதும் தமிழ் மக்களினதும் பூரண ஆதரவு எப்போதும் இருக்கும்” என்பதையும் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துக்கொள்கிறது.” என்றுள்ளது.