Home ஆய்வுகள் தமிழர்களின் அரசியலைக் கையாளநிபுணர் குழுவும் தேசிய சபையும்? – அகிலன்

தமிழர்களின் அரசியலைக் கையாளநிபுணர் குழுவும் தேசிய சபையும்? – அகிலன்

இந்திய இராஜதந்திரிகள் முன்வைத்த யோசனையும், மாவையின் முன்னெடுப்பும் சாத்தியமானவையா?

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் கடந்த ஒருவார காலப் பகுதியில் வெளிவந்திருக்கும் இரண்டு செய்திகள் முக்கியமானவை. இரண்டு செய்திகளையும் பார்க்கும் போது முன்னேற்றகரமானவையாகவும், தமிழ்த் தேசியப் பிரச்சினையை மற்றொரு பரப்புக்குக் கொண்டு செல்வதற்கு உதவப் போவதாகவும் தோன்றலாம். ஆனால், உண்மையில் நடக்கப்போவது என்ன என்பதையிட்டு ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலாவது செய்தி – கடந்த வாரம் கொழும்புப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியது;

தமிழ் மக்களின் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கையாள்வதற்காக துறைசார் நிபுணர் குழு ஒன்றை நியமிக்குமாறு இந்திய இராஜதந்திர தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளதாக முதலாவது செய்தி வெளியாகியிருந்தது. இந்தக் கோரிக்கையையடுத்து, அவ்வாறான குழு ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் கூட்டமைப்பின் தலைமை இறங்கியிருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பால்கே, இரு வாரங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தார். இந்தச் சந்திப்பின்போது பல முக்கியமான விடயங்கள் பேசப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்பட்ட போதிலும், அது குறித்த செய்திகள் எதுவும் உடனடியாக வெளிவந்திருக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் இந்திய இராஜதந்திரிகள் கூட்டமைப்பின் தலைமைக்கு ‘நிபுணர்குழு’ ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனையை வழங்கியதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இது இந்தியத் தூதுவர் வழங்கிய ஆலோசனையாகத்தான் இருக்க வேண்டும்.

2009 இற்குப் பின்னர் தமிழர்களின் தலைமை ஏதோ ஒருவகையில் கூட்டமைப்பிடம் வந்திருந்தாலும், முக்கியமான பிரச்சினைகளைக் கையாள்வதற்கான எந்தவொரு கட்டமைப்பையும் கூட்டமைப்பு உருவாக்கவில்லை. அரசியலுக்கு அப்பால், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உள்ளடக்கிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தாலும், கூட்டமைப்பின் தலைமை அதனைக் கவனத்திற்கொள்ளாத ஒரு நிலை இருந்தது.

mavai vikki 1 தமிழர்களின் அரசியலைக் கையாளநிபுணர் குழுவும் தேசிய சபையும்? - அகிலன்

இப்போது இந்தியா சொல்லியிருப்பதாக வெளிவரும் செய்திகள் இவ்விடயத்தில் ஒரு திருப்புமுனையாக அமையுமா?

ஆனால், அவ்வாறான நிபுணர் குழு எதனையும் அமைப்பதற்கான நகர்வுகள் எதுவும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. அதனைவிட இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் தருணம் வரையில், இந்த யோசனை குறித்து தன்னுடைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சம்பந்தன் பேசவும் இல்லை. கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான எம்.பி.க்கள் வடக்கு கிழக்கில் இருப்பதும் அவர்களிடையே சந்திப்புக்கள் எதுவும் இடம்பெறாதிருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

மாவை வெளியிட்ட அறிவிப்பு

இரண்டாவது செய்தி தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருக்கும் தகவல்கள்.

“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும் துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன் மிக்கதாக பெற்றுக் கொள்வதற்காகவும் தேசிய சபை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என மாவை. சேனாதிராஜா கூறியிருக்கின்றார். மாவையின் இந்த அறிவிப்புக்கும், இந்திய இராஜதந்திரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. மாவையும், சம்பந்தனும் இப்போது தனித்தனியான பாதையில் செல்ல முற்படுவது தெரிகின்றது.

தொலைக் காட்சி நேர்காணலில் மாவை சொன்னது இதுதான்;

“தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஒன்றுபட்டு செயற்படுவதற்காக இப்போது தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளை ஒன்றிணைத்துப் பயணிக்க ஆரம்பித்துள்ளோம். இது தொடர்பில் நான் விடுத்த கோரிக்கைக்கு அனைத்து தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சித் தலைவர்களும் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள். காலத்தின் தேவை அறிந்து ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கூட்டு முயற்சி எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்தப்படவுள்ளது.

அதாவது, எதிர்காலத்தில் தமிழர் தீர்வு விடயத்திலும் ஏனைய விடயங்களிலும் ஒன்றாக சேர்ந்து செயற்படுவதற்காக தேசிய சபை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றோம். இந்தத் தேசிய சபையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஜஸ்மின் சூக்கா, நவநீதம்பிள்ளை போன்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்” என அந்த நேர்காணலில் மாவை கூறியிருக்கின்றார்.

10 கட்சிகள் கூட்டணியின் நிலை

ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான அரசியல் நகர்வுகள் சிலவற்றை மாவை. சேனாதிராஜா முன்னெடுத்து வருகின்றார். இதன் மூலம் தமிழ்த் தரப்பின் கவனத்தை தனது பக்கம் திருப்ப அவர் முயல்கின்றார். அதில் முக்கியமானதுதான் தேசியத்துக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகளை ஒருங்கிணைத்திருப்பது. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உட்பட பல கட்சிகள் இதில் இணைந்திருந்தாலும், பல தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியதாகத்தான் இந்த 10 கட்சிகள் கூட்டணி உள்ளது.

இந்தக் கட்சிகள் தன்னுடைய தலைமையில் ஒன்றிணைகின்றன என்ற நம்பிக்கையில்தான், “தேசிய சபை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்ற அறிவித்தலை மாவை வெளியிட்டுள்ளார். ஆனால், மாவை இரண்டுவிதமான நெருக்கடிகளை எதிர் கொண்டிருக்கின்றார்.

முதலாவது – 10 கட்சிகளை அவர் இணைத்திருந்தாலும், அவை அனைத்தும் மாவையின் தலைமையை ஏற்றுக்கொள்ளுமா என்பது முதலாவது கேள்வி. சுமந்திரனையும் இதற்குள் கொண்டுவர மாவை எடுத்த முயற்சி கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது.

மாவை இறுதியாக அழைத்த கூட்டத்துக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செல்லவில்லை. மாவையின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையில் முன்னணி இல்லை. சுமந்திரன் வந்ததும் அனந்தி சசிதரனும் வெளியேறிவிட்டார். அதனைவிட, விக்னேஸ்வரனும் மாவை அழைத்த கூட்டத்துக்குச் செல்லவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டே தன்னுடைய பிரதிநிதிகளைத்தான் அனுப்பியிருந்தார்.

அதனைவிட மற்றொரு நகர்வையும் விக்னேஸ்வரன் மேற்கொண்டிருக்கின்றார். “இந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்கக்கூடியவர் ஶ்ரீகாந்தா தான்” என விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை நிச்சயமாக மாவையை இலக்கு வைத்த ஒரு தாக்குதல்தான். அதாவது, ‘தலைமைக்கு மாவை பொருத்தமற்றவர்’ என்பதைத்தான் விக்கி மறைமுகமாகச் சொல்லியிருக்கின்றார். மாவை அமைத்துள்ள கூட்டணியே அவருடன் நிற்குமா என்ற கேள்வியை இவை ஏற்படுத்துகின்றன. விக்கி அணியும், கஜன் அணியும் இல்லையென்றால், மாவையுடன் பலம்வாய்ந்த யாரும் இல்லை.

சம்பந்தனின் அணுகுமுறை

மாவை அமைக்கும் கூட்டணியை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ரசிக்கவில்லை எனத் தெரிகின்றது. “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள்தான் இப்போது யாழ்ப்பாணத்தில் மாவை தலைமையில் இணைகின்றன. அவர்கள் கூட்டமாகச் செயற்பட விரும்பினால், கூட்டமைப்புடன்தான் மீண்டும் இணைய வேண்டும். மற்றொரு கூட்டணி தேவையில்லை” என்ற தன்னுடைய நிலைப்பாட்டைத்தான் சம்பந்தன் தனிப்பட்ட சந்திப்புக்களின் போது வெளிப்படுத்தியிருக்கின்றார்.

சுமந்திரனைப் பொறுத்தவரையில் சமயோசிதமாகச் செயற்படுகின்றார். இறுதியாக மாவை அழைத்த கூட்டத்துக்கு அவர் சென்றார். ஆனால், கருத்து வெளியிடவில்லை. மாவையுடன் இணைந்திருந்த அனைவருமே சுமந்திரனை ஏற்க மறுப்பவர்கள். சுமந்திரனின் வருகை மாவையின் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சுமந்திரனையும் சமாளித்து, மற்றவர்களையும் அரவணைப்பது என்பது மாவைக்குப் பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

இந்தக் கூட்டணிக்கு கட்டமைப்புக்கள் எதனையும் அமைக்காமல், பிரச்சினைகள் வரும் போது அதனை இணைந்து எதிர்கொண்டால் மட்டும்தான் கூட்டணியைத் தக்க வைக்கலாம். கட்டமைப்பை உருவாக்க முற்பட்டால், பல பிரச்சினைகள் உருவாகும் என்பது தெரிகின்றது. இந்த நிலையில், மாவை சொல்லும் ‘தேசிய சபை’ போன்ற விடயங்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், சாத்தியமாகுமா?

இந்தியா கொடுத்துள்ள நிபுணர்குழு ஆலோசனையும் நல்லதொரு விடயம்தான். ஆனால், அவ்வாறான குழு ஒன்றை அமைத்து அரசியலமைப்பு விவகாரம் போன்றவற்றைக் கொடுத்தால், கூட்டமைப்பின் சிரேஷ்ட சட்டத்தரணிகளின் கதி என்ன? அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா?

Exit mobile version