இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தினருக்கும் இடையே நேற்றைய தினம் (09) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தங்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையே ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.
இதன்படி, யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் தெரிவின் போது, ஏற்கனவே இணங்கிய அடிப்படையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயற்படுமாயின், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ் மாநகரசபையின் முதல்வர் தெரிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
‘அன்றைய தினம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் உள்ளோம்’.
இதன்படி, எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய செயற்படாவிட்டால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனான சகல இணக்கப்பாடுகளும் நீக்கப்படும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.