தமிழக மீனவர்களை ஏமாற்ற மற்றுமொரு ஆணைக்குழு

இதுவரை காலமும் ஈழத்தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு சிறீலங்கா அரசு அமைத்துவந்த ஆணைக்குழுக்களை போல தற்போது தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட படுகொலைகளை மறைப்பதற்கு மற்றுமொரு குழு ஒன்றை அமைப்பதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக மற்றும் ஈழத்தமிழ் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மூவர் கொண்ட குழு ஒன்றை அமைக்கப்போவதாக சிறீலங்காவின் மீன்பிடித்துறை அமைச்சரும், ஈ.பி.டி.பி என்ற துணை இராணுவக்குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் பெருமளவான ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதும் அவை பின்னர் காணாமல்போவதும் உலகம் அறிந்ததே. அதனை போலவே தற்போதும் இரு குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பை ஏமாற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்குழுவையும் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா அமைத்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் பெருமளவான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்ட குழுவின் தலைவரே டக்ளஸ் தேவானந்தா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.