தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் திட்டம்: அமைச்சர் சந்திரசேகரன்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்து வருகின்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சர்வதேச ஊடகமான பிபிசி தமிழுக்கு தெரிவித்த்துள்ளார்.

மேலும் அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்த்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 123ற்கும் அதிகமான படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைப்பற்றப்பட்ட படகுகள் இருவேறு பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்திய படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் உள்ளுர் மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், குறித்த படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவில் இந்த படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், இந்த படகுகளை உள்ளுர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்த படகுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.