தமிழகத்தில் இரு வார ஊரடங்கு ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், அயல் மாநிலங்கள் போல்,தமிழக அரசும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துகிறது. இந்த 14 நாட்களும் ஊரடங்கு கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால் தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில்,

“நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைப்பெற்று திமுக ஆட்சியை அமைத்துள்ளோம். கட்சியின் மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் அனைத்து மக்களின் அரசாக இயங்கும், அப்படித்தான் செயலபடும்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் கோட்டைக்கு வந்த நான் 5 முக்கியமான அரசாணைகளை பிறப்பித்தேன். தேர்தல் நேரத்தில் என்னால் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டவைதான் அவை. கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்படுகிற கட்டுப்பாடுகள் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்துக்கு 4000 ரூபாய் வழங்குவதுதான் அது. அதில் முதற்கட்டமாக மே மாதத்திலேயே ரூ.2000 வழங்கும் ஆணை எனது முதல் கையெழுத்து.

ஆவின் பாலுக்கு லிட்டருக்கு ரூ.6 குறைப்பு இரண்டாவது கையெழுத்து, மகளிருக்கு அரசு பேருந்தில் இலவசப்பயணம் என்பது மூன்றாவது கையெழுத்து. தேர்தல் நேரத்தில் தொகுதிகள்தோறும் நான் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்று புதிய துறை உருவாவதற்கான நான்காவது கையெழுத்து. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனியில் சிகிச்சைப்பெறுபவர்கள் இன்னலைத் தீர்க்க தமிழக அரசே மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் அதை ஏற்கும் என்பது 5 வது கையெழுத்து.

இது கொரோனா என்கிற பெருந்தொற்று காலமாக இருப்பதால் அதைக்கட்டுப்படுத்தினோம், முழுமையாக ஒழித்தோம், கொரோனா தொற்றே இனி இல்லை என்கிற சூழ்நிலையை உருவாக்க தமிழக அரசு முழு முயற்சியில் இறங்கியுள்ளது.

கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் பரவாமல் தடுப்பது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்கும் இரண்டு குறிக்கோள்களை தமிழக அரசு முழுமையாக முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது.

முதல் அலையைவிட மோசமாக இந்த கிருமி உருமாறியுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர் மற்றும் குழந்தைகளை இந்நோய் கடுமையாக பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. 2 அல்லது 3 நாட்களில் நுரையீரலை பாதிக்கிறது. வேறு ஏதாவது நோய் பாதிப்பு இருந்தவர்கள் மரணம் அதிகரிப்பு என்பது மாறி வேறு நோய் எதுவும் இல்லாதவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

தற்போது நோய்த்தொற்று பாதிப்பது மோசமாக உள்ளது. உடல் வலுவை இந்நோய் பாதிக்கிறது. வடமாநிலங்கள், நமது பக்கத்து மாநிலங்களிலிருந்து வரும் தகவல் அச்சம் தரக்கூடியதாக உள்ளது. அந்த அளவுக்கு நமது மாநிலம் பாதிக்கப்படவில்லை என்பது ஆறுதலை தந்தாலும் குறிப்பாக 10 மாவட்டங்களில் அதிக அளவில் நோய்த்தொற்று உள்ளது.

தினந்தோறும் 25000 க்கும் மேற்பட்டோர் புதிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி அதிகரித்தால் நோயைக்கட்டுப்படுத்துவது மருத்துவத்துறைக்கு மாபெரும் சவாலாக ஆகிவிடும். அவர்கள் உயிரைப்பணையம் வைத்து மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்கள்.

இதுகுறித்து நான் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்னொரு ஊரடங்கு அவசியம் என்று அவர்கள் சொல்கிறார்கள். மருத்துவ நிபுணர்களுடம் கேட்டபோதும் அவர்களும் அதையே சொல்கிறார்கள். ஊரடங்கை அமல்படுத்தாமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ஊரடங்கு காலமாக அறிவிக்கவில்லை என்றால் கரோனாவை கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும். பக்கத்தில் உள்ள மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்கள். தமிழக அரசும் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துகிறது. இந்த 14 நாட்களும் ஊரடங்கு கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால் தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

கரோனா பரவும் சங்கிலியை உடைக்காமல் கொரோனா தொற்றை அழிக்க முடியாது என்பதை மக்கள் உணரவேண்டும். வீட்டிலேயே இருங்கள், முகக்கவசம் அணியுங்கள், கிருமி நாசினியை பயன்படுத்துங்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரியுங்கள். பழங்கள் காய்கரிகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். சிறு அறிகுறி தெரிந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

பயம் வேண்டாம் இது கஷ்டமான காலம் தான். ஆனால் கடக்க முடியாத காலமல்ல. நோய் நாடி அதன் காரணமும் அறிந்துவிட்டால் நிச்சயம் நோயை குணப்படுத்தி விடலாம். ஆலோசனைக்கூட்டத்தில் அதிகாரிகளிடம் கொரோனா குறித்த உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன், கொரோனா குறித்த முழு உண்மையை அறிந்து அதை நேருக்கு நேர் சந்திக்க நான் எண்ணியுள்ளேன்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நமது நடவடிக்கைகள் இன்றுமுதல் வேகம் எடுத்துள்ளது. அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு அவற்றைக் கடைபிடிக்கும்படி பொதுமக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தை மீட்போம்” என்றார்.