தமிழகத்திலிருந்து நால்வர் படகில் யாழ் குருநகர் வந்தனர் – பொலிஸாரினால் நேற்று கைது

தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் அரிச்சலூர் முகாமில் வசித்து வந்த தாய், மகள், 2 பேரப்பிள்ளைகள் என 4 பேர் படகு மூலம் தாயகம் வந்து சேர்ந்துள்ளனர்.

பி. சகாயராணி (வயது 60) (அ.அ.எண்1719), இவரது மகள் மேரி லவுரா (வயது 35) (அ.அ.எண் 1917), இவரது பிள்ளைகள் கெளரி யல்றிசாந்த்( வயது 9),டிலான் லியோனட் (வயது7) ஆகியோரே 10 ஆம் திகதி இரவு புறப்பட்டு, நேற்று முன்தினம் அதிகாலை யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை வந்தடைந்துள்ளனர் என்ற தகவல் தமிழகத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேரி லவுராவின் கணவர் அருள் தீபன் பிரான்சிஸ் இந்தியாவிலேயே உள்ளார். மேரி லவுரா ஏற்கனவே பிரான்ஸ் செல்வதற்கு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு தயார் செய்த முறைப்பாட்டில் இவரது கணவரின் தம்பி நிrVந்தன் இன்னும் கொயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ளார்.

இந்த நிலைமையிலேயே இவர்கள் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளனர் எனத்தமிழகத்திலிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன. இத்தகவல்களை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்த யாழ்ப்பாணப் பொலிஸார் சம்பந்தப்பட்டோரைத் தேடி அடையாளம் கண்டு மடக்கியுள்ளனர் என நேற்றிரவு தெரிய வந்தது. இவர்கள் தனிமைப் படுத்தப்படுகின்றமையோடு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.