தனித் தேசமாக கருதப்படுவதற்கு தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களுக்கு உண்டு -விக்னேஸ்வரன் விளக்கம்

ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்குத் தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களான எங்களுக்கு உண்டு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதைய அவலநிலை பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,

தமிழர்கள் ஒரு பண்டைய இனத்தவர். தமிழ் பேசும் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள். முதலில் சைவர்கள் முழுத் தீவையும்  ஆக்கிரமித்து இருந்தனர். வரலாற்றுக்கு முற்பட்ட சிவன் கோவில்களான நகுலேஸ்வரம் (வடக்கில் கீரிமலை), திருக்கேதீஸ்வரம் (மன்னார் மாவட்டம்), திருக்கோணேஸ்வரம் (கிழக்கு திருகோணமலை மாவட்டம்), முன்னேஸ்வரம் (மேற்கு சிலாபம் மாவட்டம்) மற்றும் தொண்டேஸ்வரம் (தெற்கு தேவேந்திர முனை) ஆகியவை இந்தத் தீவு மக்களின் ஆதி சமயம் சைவம் என்பதனைக் காட்டுகின்றன. பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள் மற்றும் வேறு பலரின் வெற்றிகள் இலங்கையில் தமிழரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளன. தொடர்ச்சியாக சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் சிங்களம் பேசுவோருக்குச் சார்பாக வடக்கு கிழக்கில்  மக்கள் தொகையை மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும்,  இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி பேசும் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

அரசியல் யாப்பின் சரத்து 29(2) ஆவது பிரிவை நீக்கியதனூடாக ஆங்கிலேயரையும், தமிழ் பேசும் மக்களையும் ஏமாற்றிய சிங்களத் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களை அடிபணியும் இனமாக ஆக்கும் வகையில் அரசாங்கத்தின் ஆட்சியை முழுத் தீவின் மேல் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்தும் வடக்கு கிழக்கில் இன்னமும் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தை வைத்திருக்கிறார்கள். எங்களது வளங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

தொடர்ந்து நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மொழி பேசுவோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. 60,000 ஏக்கர் அரசாங்க காணிகளையும், 3000 ஏக்கர் தனியார் காணிகளையும் இராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துள்ளது. பலதரப்பட்ட சாக்குப் போக்குகளின் கீழ் அரசாங்க அனுமதியுடன் வடக்கு கிழக்கு பௌத்த பிராந்தியமாக மாற்றப்பட்டு வருகிறது. அரச சேவைகளுக்கு தமிழர்கள் உள்வாங்கப்படுவது மேலும் குறைவடைந்தபடி சென்று கொண்டிருக்கிறது. வேலையின்மை அதிகரித்துள்ளது. தமிழ் பேசத் தெரியாதவர்களே வடக்கு கிழக்கில் காவல் துறையினராக உள்ளனர்.

கொடுக்கப்படும் புகார்கள் சிங்களத்தில் பதியப்பட்டு மொழி பெயர்க்கப்படுகின்றன. முதலமைச்சராக நான் இருந்த போது மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தும் போருக்குப் பின்னரான வடக்கு கிழக்கில் சரியான தேவைகளின் மதிப்பீடோ அன்றி பொருளாதாரத் திட்டமிடலோ மேற் கொள்ளப்படவில்லை. வடக்குக் கிழக்கில் கல்விக்கு மாற்றாந் தாய் மனப்பான்மை காட்டப்படுகிறது. வேறு பல துறைகளிலும் இதே நிலைமை தான். ஒரு தேசம் என்கிற வகையில் தங்களது பாரம்பரிய தாயகத்தின் நிர்வாகம் மற்றும் ஆளுகை மீது எதுவித கட்டுப்பாடும் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இல்லை. நாங்கள் ஒரு அடிமைப் படுத்தப்பட்ட இனம் என்று பதிலளித்தார்.

மேலும் இலங்கையில் முதல் நிறுவப்பட்ட தமிழ் அரசியல் கட்சி ‘அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்’ ஆகும். தற்போது 20இற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. தமிழ் மக்களிடையே காணப்படும் இந்தப் பிளவுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில்,

தமிழர்களாகிய நாங்கள் ஜனநாயகத்தை மிகவும் அக்கறையுடன் பின்பற்றுகிறோம் என்பதையே அது காட்டுகிறது. எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது கட்சிக்கோ ஆதிக்கம் செலுத்தவோ ஆணவப்படுத்தவோ உரிமை வழங்கப்படவில்லை. அது எப்படி இருந்த போதும் கொள்கை மற்றும் நோக்கம் தொடர்பில் அடிப்படையில் பெரும்பான்மையான கட்சிகளிடையே அதிக வேறுபாடுகள் கிடையாது.

ஒட்டுமொத்தமாக சமூகத்தைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனைகளில் இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். உதாரணத்திற்குக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும்.