தனித்துவமிழந்த பொறிமுறையும் நீதிக்கான போராட்டமும் – பி.மாணிக்கவாசகம்

562 Views

இலங்கையின் நீதித்துறையும், அதனைச் சார்ந்த ஜனநாயக உரிமை நிலைமையும் தற்போதைய ஆட்சியில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. சாதாரண சமூக மட்டத்தைக் கடந்து நாடாளுமன்றம் என்ற சட்டவாக்கத்திற்கான உயர் சபையில் இந்த விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இது நாட்டின் நீதித்துறையினுடைய நிலைமை குறித்து ஆழமான கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. நீதி இல்லாத இந்த நாட்டில் எதற்காக நீதி அமைச்சர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் நீதி என்பது பெருந்தேசிய வாதத்தின் அடியொட்டிய செயற்பாடுகளைக் கொண்டது என்ற சந்தேகம் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் தொடர்ச்சியாக ஆளாக்கப்பட்டு வந்துள்ள சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழ் மக்கள் மத்தியில் நீண்ட காலமாகவே நிலவி வருகின்றது. முஸ்லிம் மக்களின் மனங்களிலும் இந்தக் கேள்வி வீச்சோடு இப்போது எழுந்திருக்கின்றது.
ஒரு சில நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்தின் ஒரு சில வழக்குகளிலும் நீதியான செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இடம்பெற்றும் வருகின்றன. இதனை எவரும் மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.

தாமதமாகின்ற நீதி என்பது நீதி மறுக்கப்படுவதற்கு ஒப்பானது என்று கூறுவார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் சாதாரண மக்களே நியாயமானது, நீதியானது என உணர்கின்ற விடயங்களில் நீதி இழுத்தடிக்கப்படுவதையே காண முடிகின்றது. ஆயினும் நாட்டில் நீதி நிலவுகின்றது. நீதித்துறையில் எவரும் தலையிடுவதில்லை என்றே அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் கள நிலைமைகள் அவ்வாறில்லை. நீதியைப் பொறுத்தளவில் முரண்பாடான நிலைமையே நிலவுகின்றது. இனத்துவ ரீதியில் சிறுபான்மை இன மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களிலேயே இந்த முரண் நிலைமை காணப்படுகின்றது.

நீதித்துறை சுதந்திரமானது என்பதே ஜனநாயக ஆட்சியின் உறுதியான நிலைப்பாடு. அது ஆட்சியாளர்களின் கைப்பொம்மையாகச் செயற்படக் கூடாது. செயற்படவும் முடியாது. நீதித்துறையை ஜனநாயகத்தின் ஏனைய தூண்களாகிய சட்டவாக்கத்துறையோ அல்லது நிறைவேற்றதிகாரமோ மேவிச் செயற்பட முடியாது. நீதித்துறையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் செயற்படச் செய்யவும் முடியாது.

நீதித்துறை, சட்டவாக்கத்துறை, நிறைவேற்றதிகாரம் என்ற மூன்றும் தனித்துவமாகவும் சுந்திரமாகவும் செயற்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் பண்பு. ஆனால் நீதித்துறையில் அரசியல் கலப்பதுவும், அரசியல் நலன்களுக்காக, அது நசிந்து நெகிழ்வதும் அதன் உண்மையான சுதந்திரமாகவோ அல்லது தனித்துவமாகவோ கொள்ள முடியாது.

நீதிமன்றத்தின் ஊடாகத் தனக்கு நீதி கிடைக்கும் நியாயமான நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நீதிமன்றத்திடம் நியாயம் கேட்டு முறையிடுகின்றார்கள். வழக்குத் தாக்கல் செய்கின்றார்கள்.

பொதுமக்களுடைய நம்பிக்கையைத் தக்க வைத்து, அவர்களின் நியாயமான எதிர்பார்ப்பை பக்கச்சார்பின்றி, நடுநிலையில் நின்று நிறைவேற்ற வேண்டியது நீதிமன்றங்களின் தலையாய கடமையாகும். அது நீதித்துறையின் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்புமாகும்.

ஆனால் இத்தகைய கடமையும், பொறுப்பும் நாட்டின் நீதிப்பொறிமுறை ஊடாக நிறைவேற்றப்படுகின்றதா என்பது குறித்து இப்போது பகிரங்கமாகக் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் அதே சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது அரசியல் ரீதியான உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை நசுக்கும் நோக்கத்துடன் தமிழ் இளைஞர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது.

இதனைத் தற்காலிக சட்டம் என்று அந்த சட்ட ஏற்பாட்டின் தலைப்பில் குறிப்பிட்டுள்ள போதிலும், நான்கு தசாப்தங்களுக்கு மேலாக அந்தச் சட்டம் நிரந்தரமாக நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட சிலர் அரசியல் காரணங்களுக்காக, சுய அரசியல் இலாபங்களுக்காக அதிகாரத் தரப்பினரால் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அதேவேளை, நியாயமான காரணங்களுக்காக நீதியான முறையில் நீதிமன்றங்கள் இத்தகைய வழக்குகளில் எதிராளிகளை விடுதலை செய்திருக்கின்றன. ஆனால் பல சந்தர்ப்பங்களில் அதிகார பின்புலம் கொண்ட சுய அரசியல் இலாபங்களுக்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இத்தகைய நெகிழ் தன்மையிலான நீதிப்பொறிமுறையே நாட்டில் செயற்பட்டு வருகின்றது.

இதனை நாடாளுமன்றத்தில் விலாவாரியாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நீதியே இல்லாத இலங்கைக்கு எதற்காக நீதி அமைச்சர் என அரச தரப்பினரை நோக்கி ஆவேசமாக வினவியிருக்கின்றார்.

மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பிலான விடயங்களில் நீதி வழங்கப்படவில்லை. நீண்ட காலமாக இழுத்தடிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது. நீதி மறுக்கப்பட்டிருக்கின்றது என்பதை அவர் நாடாளுமன்றத்தில் பட்டியலிட்டு எடுத்துரைத்திருக்கின்றார்.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, கொழும்பில் 11 மாணவர்கள் கடத்தப்பட்டமை, நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய ஜோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என்ன நடந்தது, ஏன் நீதி வழங்கப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

raviraj 2 தனித்துவமிழந்த பொறிமுறையும் நீதிக்கான போராட்டமும் -	பி.மாணிக்கவாசகம்

ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய பாரதூரமான விடயங்களில் எல்லாம் இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்பதும் அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் நாலரை ஆண்டுகள் அரசியல் கைதியாகவே விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சபாநாயகர் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட சுமந்திரன், உண்மையான அரசியல் கைதிகளின் நிலை என்ன? இருபது முப்பது ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்மையான அரசியல் கைதிகளின் கதி என்ன என்றும் வினாக்களை அடுக்கியுள்ளார்.

download தனித்துவமிழந்த பொறிமுறையும் நீதிக்கான போராட்டமும் -	பி.மாணிக்கவாசகம்

அதேவேளை பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நாட்டின் வழுவிய நீதி முறை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.  விஜித ஹேரத் என்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத் தீர்ப்புக்களில் சுயாதீனத் தன்மை இல்லாமல் போவது பாரிய ஆபத்துக்கே வழிவகுக்கும் என எச்சரித்திருக்கின்றார்.

நாட்டில் நீதித்துறை தனது சுயாதீனத்தை – சுதந்திரமான செயற்பாட்டை இழந்துள்ளது என உரைத்திருப்பதன் மூலம் நாட்டில் நீதி இல்லையே என்ற சுமந்திரனின் கூற்றை அவர் உறுதி செய்திருக்கின்றார்.

நீதிமன்றத் தீர்ப்புக்களில் சுயாதீனத்தன்மை இல்லாமல் போவதென்பது, நீதித்துறை அரசியல் கலப்படத்துக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதாகும். சிறுபான்மை இன மக்களுடைய விடயங்களிலும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான விடயங்களிலும் நீதி வழங்கப்படவில்லை என்பது ஒரு புறமிருக்க, ஏனையவர்களுக்கு வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களும் சுயாதீனமற்றது என்பதை அவருடைய கூற்று உறுதி செய்திருக்கின்றது.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நீண்ட காலமாகவே ஆட்சியாளர்கள் பாராமுகமாகவே செயற்பட்டு வருகின்றனர். அரசியல் நோக்கத்திற்காகவே விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கையில் எடுத்திருந்தார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளாகிய முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 12 ஆயிரம் பேரை புனர்வாழ்வளித்து, பொதுமன்னிப்பு வழங்கி மகிந்த ராஜபக்ச அரசு சமூகத்தில் இணைத்திருக்கின்றது.

ஆனால் சூழ்நிலை காரணங்களினால் விடுதலைப்புலிகளுக்கும் அந்த அமைப்புக்கும் உதவி புரிந்தார்கள் என்ற காரணத்திற்காகக் கைது செய்து சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நீதி விசாரணைகள் தடையாக இருப்பதாக அரச தரப்பில் காரணம் கூறப்படுகின்றது.

உண்மையான நீதிப்பொறிமுறை நடைமுறையில் இருக்குமேயானால் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களாகிய பிள்ளையான் மற்றும் கருணா அம்மான் போன்றவர்கள் எவ்வாறு சட்ட நடைமுறைகளில் இருந்து விலக்கு பெற்று வெளியில் உலவ முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

அதேபோன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்து வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராகிய சிவராஜா ஜெனிபன் என்பவரை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார்.

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவருக்கு எதிராக பொலிசார் யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மற்றுமொரு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்கு விசாரணையில் அப்போதைய அங்கு பணியாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பு வழங்குகின்ற கட்டத்தை நெருங்கி இருந்தார். அந்தத் தருணத்தில் மிக அவசர அவசரமாக அந்த வழக்கு விசாரணை தடுத்து நிறுத்தப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜெனிபன் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன முக்கிய அமைச்சராக இருந்தபோது 2006 ஆம் ஆண்டு அவரைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜெனிபன் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தார். தனனைக் கொலை செய்ய முயற்சித்த முன்னாள் போராளியாகிய விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஓராண்டு கால ஜனாதிபதி பதவிக்கால நிறைவின்போது, மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ததாக அப்போது அரசியல் ரீதியாப் பிரசாரம் செய்யப்பட்டது.

அதேவேளை, சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றி பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக திகதி குறித்து அளித்திருநத உறுதிமொழியை அவர் நிறைவேற்றவே இல்லை. இத்தகைய லட்சணத்தில்தான் ஆட்சியாளர்கள் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான தமது நீதி நியாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராகிய ஜி.எல்.பீரிஸ் அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பில் நீதித்துறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். நடைமுறையில் உள்ள நாட்டின் நீதிப் பொறிமுறையானது பொருத்தமில்லாதது அல்லது மிகுந்த குறைபாடுடையது என்பதை அரச தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையே காட்டுகின்றது.

மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மத ரீதியில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள் தொடர்பில் இந்த நாட்டின் நீதிப்பொறிமுறை நியாயமான செயற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன், பேரின மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கான வாக்குமூலங்களாகவே நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரின் பாராளுமன்ற உரைகள் அமைந்திருக்கின்றன.

இத்தகைய நிலைமையில்தான் சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்கள், நடைமுறையில் உள்ள நாட்டின் நீதிப்பொறிமுறையின் ஊடாகத் தங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்பதை ஏற்கனவே எடுத்துரைத்து சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரி வருகின்றனர்.

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து போராடி வருகின்ற அவர்களின் உறவினர்கள் சர்வதேச நீதி விசாரணையே தேவை. அதன் ஊடாகத்தான்  தங்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும் என்பதை வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

 

Leave a Reply