Tamil News
Home செய்திகள் தனது கப்பல்களுக்கான எரிபொருள் நிலையத்தை சிறீலங்காவில் அமைக்கின்றது சீனா

தனது கப்பல்களுக்கான எரிபொருள் நிலையத்தை சிறீலங்காவில் அமைக்கின்றது சீனா

இந்து சமுத்திரக் கடல் பகுதியால் பயணிக்கும் சீனாவின் வழங்கல் கப்பல்களுக்கு எரிபொருள் நிரம்பும் நிலையத்தை சீனாவின் சினோபெக் நிறுவனம் சிறீலங்காவில் அமைக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு வசதியாக சிறீலங்கா எரிபொருள் நிறுவனம் என்ற நிறுவனத்தை சீனா சிறீலங்காவில் பதிவு செய்துள்ளது. கப்பல்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் நிலையத்தையே சீனா சிறீலங்காவில் அமைக்கவுள்ளது. இந்த எரிபொருளை மின்சக்தி நிலையங்களுக்கும் பயன்படுத்த முடியும்.

இந்த நடவடிக்கை சிறீலங்காவில் சீனாவின் அடுத்த மிகப்பெரும் முதலீட்டுத் திட்டமாகும். சுயஸ் கால்வாய் மற்றும்; மலாக்கா நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்கள் அம்பாந்தோட்டையை கடந்த செல்வதால் அங்கு அமைக்கப்படும் கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையம் அதிக பொருளாதாரத்தை ஈட்டவல்லது என சீனாவின் நிறுவனம் தெரிவித்தள்ளது.
உலகின் மூன்றில் இரண்டு விகித எண்ணைக்கப்பல்கள் இந்த பாதையால் தான் செல்வதுண்டு.

இதனிடையே, அம்பாந்தோட்டைக்கு அருகில் 3.85 பில்லியன் டொலர்கள் முதலீடுகளைக் கொண்ட எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கு இந்திய நிறுவனமான இந்தியன் அக்கோட் குழுமம் உடன்பாடு ஒன்றை கடந்த மார்ச் மாதம் மேற்கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் நிறுவனமே முதலீடுகளை மேற்கொண்டு பராமரித்து வருவதுடன், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியன் தொன் கப்பல் எரிபொருளை தயாரிப்பதற்கும் சீனா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version