தடுப்பூசி பெற புலம்பெயர் உறவுகளிடமிருந்து பணம்பெற்று தர கூட்டமைப்பு தயார் – சுமந்திரன்

125 Views

தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு போதிய பணம் இல்லை என்றால் அதனை புலம்பெயர் உறவுகளிடம் பெற்றுக் கொடுக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தடுப்பூசி ஏற்றும் செயல்திட்டத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு அரசாங்கம் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் தனது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய சட்டம் அவசியம்

மேலும், கோவிட் -19 மூன்றாம் அலை நாட்டில் பரவும் நிலையில், அதனை முறையாகக் கையாள அரசாங்கம் தவறியுள்ளது. இதனாலேயே நாடு முழுவதும் பயண தடை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறான விடயங்களை சட்ட ரீதியாகக் கையாள வேண்டும் என்று நாம் பல தடவைகள் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறான அவசரகால நிலைமைகளை கையாளும் சட்டங்கள் நாட்டில் தற்போது நடைமுறையில் இல்லை. எனவே, சட்டம் இயற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து பல மாதங்கள் கடந்தும் அரசாங்கத்தால் அதற்கான முயற்சிகள் கையாளப்படவில்லை.

கடந்த நவம்பர் மாதம் தனிநபர் சட்ட மூலம் ஒன்றை நான் சபையில் சமர்பித்தேன். அதற்கான முதலாம் வாசிப்பும் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஆனால் அதன் பின்னர் எந்தவொரு முயற்சியும் கையாளப்படவில்லை. கோவிட் நிலைமைகளில் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், அதற்கு சட்டத்தில் இடமில்லை. எனவே, சட்டங்களை உடனடியாக இயற்ற வேண்டும் என்பதே எமது கோரிக்கை. நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவ அதிகாரிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி மூன்று, நான்கு மாதங்களின் பின்னரே அரசாங்கம் அதனை கையாண்டு வருகின்றது.

தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் முறையாக செயல்படவில்லை. தொடர்ச்சியாக அரசாங்கம் இந்த விடயத்தில் தவறிழைத்து வருகின்றது. சுகாதார தரப்பினருக்கே இதில் நீண்ட அனுபவம் உள்ளது. ஆனால், அவர்களை கையாள விடாது இராணுவத்தினரும், கோவிட் செயலணிக் குழுவும் இதனை கையாள்கின்ற போது தவறுகள் இடம்பெறுகின்றன.

விளையாட்டாய் நடக்கும் நாமல்

இலங்கை முழுவதும் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் வேளையில், அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு மாத்திரம் எவ்வாறு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது? என்றும் சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “நாட்டில் எவருக்குமே வீதிகளில் செல்ல முடியாது எனக் கூறப்படுகின்ற வேளையில் அமைச்சர் நாமல் ராஜபக்‌சவுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் இல்லையா என்பதை அரசிடம் கேட்கின்றேன்.

நாளாந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கையில் நாமல் ராஜபக்ஷ மாத்திரம் நடமாடுவது அனுமதிக்கப்படக்கூடியதா? விளையாட்டுத்துறை அமைச்சர் அனைத்தையும் விளையாட்டாகவே செய்கின்றார் எனவும் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், யாழ்ப்பாணம் சென்ற விளையாட்டுத்துறை அமைச்சரான நாமலுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? எனவும் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

பொறுப்பின்றி பேசும் டக்ளஸ்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தின் தாக்கமானது இன்னமும் 50 அல்லது 100 வருடங்களுக்கு இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மீன் வளமும் பாதிக்கப்படும் என்கிறார்கள். ஆனால், மக்கள் கடல் உணவுகளை உண்ணலாம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பற்ற வகையில் கூறியிருக்கிறார். இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

பாதிக்கப்பட்ட கடல் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நிபுணர்களின் ஆடைகளை கவனியுங்கள். அதனைப் பார்த்தாலே நிலைமை எவ்வாறானது என்பது தெரிகிறது. இந்த நிலையில் மீனவர்கள் எவ்வாறு கடலுக்கு செல்வது? ஆகவே, அமைச்சர் பொறுப்பில்லாது பேசுகிறார்” என்றும்  சுமந்திரன் சொன்னார்

Leave a Reply