தடுப்பூசி செலுத்திக் கொள்ள  வெளிநாட்டினருக்கு ரஷ்சியா அழைப்பு

வெளிநாட்டினர் ரஷ்யாவுக்கு வந்து தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பொருளாதாரக் கூட்டம் ஒன்றில் ரஷ்ய அதிபர் புதின் பேசும்போது, “ரஷ்யாவில் உள்ள அனைத்து மக்களுக்கும்  கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. வைரஸிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக அனைத்து ரஷ்யர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கொரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்ட எவரும் உயிரிழக்கவில்லை.

ரஷ்யாவின்கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி, 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது” என்றார்.

இந்நிலையில், உலக அளவில் இதுவரை விநியோகிக்கப்பட்ட 200 கோடி கொரோனா தடுப்பூசிகளில் 60% மூன்று நாடுகளுக்கு மட்டுமே சென்றடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 60 சதவீதத் தடுப்பூசிகள் அமெரிக்கா, இந்தியா,  சீனா ஆகிய மூன்று நாடுகளிடமே சென்றடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.