தடுப்பு மருந்து தயாரிப்பை நிறுத்திய ஜான்சன் அண்ட் ஜான்சன்!

கொரோனா தடுப்பு மருத்து பரிசோதனையில் பங்கேற்றிருந்த தன்னார்வலர் ஒருவர் சுகவீனம் அடைந்த நிலையில், தனது  தடுப்பு மருந்து தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க மருந்தக நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன், அறிவித்துள்ளது.

அதே நேரம் மூன்றாம் கட்டத்தில் இருந்த என்செம்பிள் பரிசோதனை முயற்சியும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஜான்சன் அண்ட்ஜான்சன் நிறுவனத்தின் பல கட்ட பரிசோதனை நடவடிக்கையில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்களுக்கு முதலாவதாக வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போதைய முடிவால் அனைத்து முயற்சிகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் பரவி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை காவுகொண்டுள்ளது. அதன் தாக்கம் இன்னமும் குறையவில்லை.

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம், கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 இந்நிலையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதிவு செய்யப்படும் என்று உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் மூத்த மருத்துவ நிபுணர் சவுமியா சுவாமிநாதன் கூறும்போது, “தற்போதுவரை சுமார் 40 கொரேனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இதில் 10 மருத்துகள் ஆய்வின் கடைசிக் கட்டத்தில் உள்ளன. எனவே, கிடைத்துள்ள தரவுகளை வைத்துப் பார்த்தால் கொரோனா தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரம் கொரோனாவுக்கு எதிரான சமூக நோய் எதிர்ப்பு தன்மையை நோக்கிய செயற்திட்டங்கள்,  ‘நெறிமுறையற்றது’ என உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.