Tamil News
Home உலகச் செய்திகள் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விவகாரம்: அவுஸ்திரேலியா தொடர்பில் ஐ.நா கவலை

தஞ்சக் கோரிக்கையாளர்கள் விவகாரம்: அவுஸ்திரேலியா தொடர்பில் ஐ.நா கவலை

அவுஸ்திரேலியாவில் குற்றப் பொறுப்புக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்த வேண்டும் என்றும் குழந்தைகளை தனிமைச் சிறையில் வைக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சித்ரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை குழு வலியுறுத்தியுள்ளது. 

அவுஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள டான் டேல் இளையோர் தடுப்பு மையம், தாஸ்மானியாவில் உள்ள ஆஷ்லே இளையோர் தடுப்பு மையம், மேற்கு அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாங்க்சியா ஹில் இளையோர் தடுப்பு மையம் ஆகியவற்றில் குழந்தைகளை தனிமைச் சிறையில் வைக்கும் முறை உள்ளதாக ஐ.நா. குழு கவலை தெரிவித்துள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலியாவில் அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் நடத்தப்படும் விதம், கட்டாய குடிவரவுத் தடுப்பு காவல், தஞ்சக்கோரிக்கையாளர்களை கடல்கடந்த தடுப்பு மையத்தில் வைத்து பரிசீலிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் ஐ.நா. குழு தனது பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.

1958 புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் குழந்தைகள் உள்பட அங்கீகரிக்கப்படாத படகு வருகைகள் மூலம் வருபவர்களை கால அளவின்றி தடுத்து வைத்திருப்பது குறித்தும் அக்குழு தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

அகதிகளை கையாள்வதில் அவுஸ்திரேலியா சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக வெளியாகியுள்ள ஐ.நா.குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்திரேலியாவின் அகதிகள் கவுன்சில், இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கடல்கடந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல எனும் அவுஸ்திரேலியாவின் கூற்றை ஐ.நா. குழு நிராகரித்திருக்கிறது. அத்துடன் அவுஸ்திரேலியாவின் நிதியுதவியால் செயல்படும் தடுப்பு மையங்களுக்கு இந்த அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்பி உள்ளதாகவும் அதன் மூலம் சட்ட ரீதியாக அவுஸ்திரேலியாவே இந்த அகதிகளுக்கு பொறுப்பு என்றும் அக்குழு கூறியிருக்கிறது. இப்படி கடல்கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு இடமாற்றி கடல்கடந்த தடுப்பு முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி இருக்கிறது.

கடந்த மே மாதம் அவுஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் அகதிகள் தொடர்பாக வெளியாகும் முதல் ஐ.நா. அறிக்கை இதுவாகும்.

Exit mobile version