Home செய்திகள் தங்களுடைய இருப்புக்காக ஒற்றுமையினை சிலர் தவிர்க்கின்றனர் – உருத்திரகுமாரன்

தங்களுடைய இருப்புக்காக ஒற்றுமையினை சிலர் தவிர்க்கின்றனர் – உருத்திரகுமாரன்

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை என்ற விடயத்தில் சிலர் தங்களுடைய இருப்பினை தக்கவைப்பதற்காக, ஒற்றுமையினை நிராகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

காணொளிவாயிலாக ஜேர்மன் டோர்ட்முன்ட் நகரில், இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, தமிழ்ஊடகங்களுக்கு இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஊடகர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை என்ற விடயத்தில் மக்களின் எதிர்பார்ப்பு என்பது புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. நாம் அதனை நிராகரிக்கவில்லை. எல்லோருடனும் இணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். முனைகின்றோம். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஒற்றுமைக்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.

என்னைப் பொறுத்தவரை, அன்று பல இயக்கங்கள் காணப்பட்டிருந்தன. அப்போதும் இந்த ஒற்றுமை என்ற விடயம் பேசப்பட்டுத்தான் இருந்தது. ஆனால் ஒற்றுமை வரும் என்று காத்திருக்காமல்,  தெளிவானதொரு நிகழ்ச்சி நிரலுடன் தமது செயற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்தனர். மக்கள் அவர்கள் அங்கீகரித்து அவர்களின் பின்னால் நின்றனர்.

அந்த வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில், ஒற்றுமை வரும் வரை காத்திருக்காமல், எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில்,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையினை மையப்படுத்திய நீதிக்கான செயற்பாடாகட்டும், அரசியல் தீர்வுக்கான பொது வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கமாகட்டும், விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கையாகட்டும் நாம் அனைத்து செயற்பாடுகளையும், அனைவரும் இணைந்ததாகவே முன்னெடுக்க விரும்புகின்றோம். இதன் அடிப்படையில் பல அமைப்புக்களுடன் பேசியிருந்தோம். சில விடயங்களில் ஒன்றாக செயற்பட்டிருந்தாலும் அது நீடிப்பதில்லை.

தமிழீழம் என்ற இலக்கிலோ, அதனை அடைவதற்கான வழியிலோ தெளிவான பார்வை அமைப்புகளிடத்தில் காணப்படும் நிலையில், இணைந்து கொள்வதில் எங்கே தடை இருக்கின்றது என்பதில்தான் கேள்வியாக இருக்கின்றது.

என்னைப் பொறுத்தவரை தங்களுடைய இருப்பினை தக்கவைப்பதற்காக, ஏதோவொரு காரணங்களை முன்வைத்து சிலர் ஒற்றுமையினை நிராகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் ஊடகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,

– அபிவிருத்தி என்ற பெயரில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையொன்று தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வருகின்றது. இது தமிழர்களின் அடையாள அரசியலை, பண்பாட்டு உரிமைகளை இல்லாது செய்கின்றது.  அபிவிருத்தி என்ற கவர்ச்சிகரமான சொல் மூலம் சர்வதேசத்தினை கவர்ந்திழுக்கின்ற உத்தியினை சிறிலங்கா கையாளுகின்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தந்திரத்துக்குள் சர்வதேசம் அகப்பட்டு செல்கின்ற நிலைதான் காணப்படுகின்றது. இது நமக்குள்ள பெரும் சவாலான விடயம்.

– சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் செல்லவோ, அதன் செயற்பாட்டுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டோ இருக்க முடியாது. நமக்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே நம்து செயற்பாடுகள் இருக்க முடியும். அதன் அடிப்படையில்தான் எமக்கான வெளிவிவகாரக் கொள்கை ஒன்றினை அமைக்கும் முனைப்பில் நாம் உள்ளோம்.

குறிப்பாக சர்வதேச சக்திகள் கொழும்புடன் மட்டும் தமது தொடர்புகளை பேணுவருகின்றனர். ஆனால் இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்தியப் பெருங்கடல்சார் அரசியலில் தமிழர் தேசம் கேந்திர முக்கியத்துவம் உள்ள ஒன்று என்ற வகையில், சர்வதேச சக்திகள் எம்முடனும் தொடர்புகளை  பேண வேண்டிய நிலையே தேவையானது. அவ்வாறான நிலையினை எட்டுவதற்கான ஒரு முனைப்பாக இந்த நாம் உருவாக்குகின்ற வெளிவிவகாரக் கொள்கை அமையும் என நம்புகின்றோம்.

TGTE Germany 2 PM தங்களுடைய இருப்புக்காக ஒற்றுமையினை சிலர் தவிர்க்கின்றனர் - உருத்திரகுமாரன்தமிழர்களை ஒரு தேசிய இனமாகவோ, சிறுபான்மை இனமாகவோ ஏற்றுக் கொள்கின்ற நிலையில் சிறிலங்கா அரசு இல்லை என்பதனைதான் அதன் செயற்பாடுகள் காண்பிக்கின்றன. குறிப்பாக தமிழர் அரசியலையோ, தமிழர் அரசியல் தவைர்களையோ சிறிலங்கா அரசு நிராகரித்து வருகின்றமை. இது இலங்கைத்தீவில் தமிழர்களுக்கான ஒரு அரசியல் வெளி இல்லை என்பதனையே வெளிக்காட்டுகின்றது.

இந்நிலையில்தான் நாங்கள் இலங்கைத்தீவுக்கு வெளியே சர்வதேச வெளியில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வடிவத்தின் ஊடாக ஈழத்தமிழர்களின் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

Exit mobile version