டெல்லி வன்முறை -6 பத்திரிகையாளர் மீது தேசத்துரோக வழக்கு

195 Views

விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடத்தப்பட்ட வன்முறையையடுத்து, தேசத் துரோகம், குற்றச் சதி, மக்களிடம் மோதலைத் தூண்டும் வகையில் விரோதத்தை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளில்  6 பத்திரிகையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ம் திகதி  நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் டிப்டிபா கிராமத்தைச் சேர்ந்த நவ்ரீத் சிங் என்ற விவசாயி ஓட்டி வந்த டிராக்டர் இரும்பு தடுப்பு வேலி மீது மோதி கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.

ஆனால், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நவ்ரீத் சிங் இறந்ததாக வதந்தி பரவியது. இதை டெல்லி பொலிஸார் மறுத்ததுடன், நவ்ரீத் சிங் வேகமாக ஓட்டிவந்த டிராக்டர் கவிழ்ந்த காட்சிகளை வெளியிட்டனர்.

இந்நிலையில், நவ்ரீத் சிங்கின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. நவ்ரீத் சிங் தலை மற்றும் உடலில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டிருப்பதும், அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் ஏதுமில்லை என்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி மற்றும் காயங்களில் இருந்து ஏற்பட்ட இரத்தப்போக்கே இறப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து  குறித்த  விவசாயி  உயிரிழந்தது குறித்து வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியதாக,  காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், மற்றும் பத்திரிகையாளர்கள் மிரினல் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் அகா, பரேஷ் நாத், ஆனந்த் நாத் ஆகியோர் மீது உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில்  தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இ்நிலையில், பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு ‘எடிட்டர்ஸ் கில்ட்’ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் தவறான செய்தியை சமூக ஊடகத்தில் வெளியிட்டதற்காக ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது இந்தியா டுடே குழுமம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply