ஜோர்ஜ் பிளெய்ட்டிற்கு மக்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்

அமெரிக்காவில் வெள்ளையின காவலரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளெய்ட் இன் உடல் 13 நாட்களின் பின்னர் இன்று ஹுஸ்டனில் உள்ள தேவாலயத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு தேவாலய பிரார்த்தனையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அமெரிக்காவின் மின்னியா பொலிஸ் நகரில் உள்ள கடை ஒன்றில் 20 டொலர்கள் கள்ள நோட்டை கொடுத்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்ற பொலிசார் கள்ள நோட்டு கொடுத்ததாக கூறப்படும் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளெய்ட்டை அவரது காரில் இருந்து இறங்குமாறு கட்டளையிட்டனர். அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவே, அவரை வலுக்கட்டாயமாக இழுத்து முரட்டுத்தனமாக தள்ளி கீழே விழுத்தினர்.

பின்னர் ஒரு பொலிஸ் அதிகாரி ஜோர்ஜ் இன் கழுத்தில் முழங்காலை வைத்து கழுத்தை நெரித்த போது அவர் மூச்சு விட முடியவில்லை என்று கதறினார். ஆனாலும் காவலர் அவரின் அலறலை பொருட்படுத்தாது தொடர்ந்து அவரின் கழுத்தை நெரித்ததன் காரணமாக ஜோர்ஜ் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை அங்கு நின்ற 17 வயது யுவதி ஒருவர் வீடியோவில் பதிவு செய்ததுடன், அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். இதனால் ஜோர்ஜ் பிளேய்க்கு நீதி கேட்டும், பொலிஸ் சீர்திருத்தம் கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

பிறநாடுகளிலும் இந்த போராட்டம் விரிவடைந்தது. இனவெறிக்கு எதிரான போராட்டம் 13 நாட்களாக இன்றும்  தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இதேவேளை ஜோர்ஜ் பிளெய்ட்டின் உடல் ஹுஸ்டனில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து குதிரைகள் புட்டப்பட்ட வண்டியில் தங்கப் பேழையில் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலானோர் முகக் கவசம் அணிந்திருந்தனர். பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஊர்வலம் செல்லும் சாலையின் ஓரத்தில் சிலர் மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினர்.

பியர்லான்ட் பகுதியிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் ஜோர்ஜ் பிளெய்ட்டின் தாயாரான் கல்லறைக்கு அருகில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஜோர்ஜ் பிளேய்ட்டிற்கு மக்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.