ஜே.வி.பி அதிகார பகிர்வை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்குமாயின் அதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்: மனோ வலியுறுத்தல்

செம்மணி என்பது அவலக் குரலின் அடையாளம் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரச பயங்கரவாதத்தினாலேயே செம்மணி போன்ற ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்னும் தமிழர்களின் போராட்டம் நீடித்துக்கொண்டே இருப்பதாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
‘உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் அடிப்படை காரணமே அதிகாரபகிர்வு என குறிப்பிட்ட மனோ கணேசன், இந்த விடயத்தை அமைச்சர் சந்திரசேகர் ஜனாதிபதி அனுரவுக்கும், ரில்வின் சில்வாவுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.

யுத்தத்தை நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு உதவியவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினரே எனவும் சிங்கள கிராமங்களுக்கு சென்று யுத்தத்திற்காக இளைஞர்களை சேர்த்துக்கொண்டதும் அவர்களே எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்துடன் அதிகார பகிர்வுக்கு எதிராக போராடிய ஜேவிபி தற்போது அதிகார பகிர்வை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்குமாயின் அதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.அதிகார பகிர்வு குறித்து, அனுரகுமார திசாநாயக்க மற்றும் ரில்வின் சில்வாவே பகிரங்கமாக கூற வேண்டும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகம் மற்றும் சர்வதேச விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும் மனோ கணேசன் கூறியுள்ளார். போர் இடம்பெற்ற போது தமிழ் மக்களை கைவிட்டுச் சென்ற சர்வதேசத்துக்கு தற்போது நீதியை பற்றிப் பேசுவதற்கு என்ன தார்மீக பொறுப்பு உள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த விடயத்தை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடமும் தாம் சுட்டிக் காட்டியதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

போர் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு செல்ல வேண்டாம் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்த போதிலும் மனித உரிமைகள் பேரவை அதனை புறக்கணித்து செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.