Tamil News
Home செய்திகள் ஜே.வி.பினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது எதிர்க்கட்சி

ஜே.வி.பினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டது எதிர்க்கட்சி

ஜே.வி.பி. இனால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலை பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை ஆவணப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, ஆயிரத்து 300 பெயர்களைக் கொண்ட இந்தப் பட்டியல் பாராளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் 900 இற்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் விபரங்களையும் பாராளுமன்றத்தில் அவர் முன்வைத்துள்ளார்.

‘விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு முன்னதாகவே ஜே.வி.பி இனால் சிறுவர் போராளிகள் உருவாக்கப்பட்டனர்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  ‘இதற்கு சிறந்த உதாரணம், 70 வயதுடைய ஐக்கிய தேசிய கட்சியின் பெண் பாராளுமன்ற உறுப்பினரை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட 13 வயது சிறுமியான ‘கந்தலே போனிக்கி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஜே.வி.பி. இனால் மேலும் பல ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிறுவர்களைப் பயன்படுத்தி கொல்லப்பட்டனர்’ என்று அவர் குற்றம் சாட்டினார்.’தற்போதைய பட்டியலில் சேர்க்கப்படாத பெயர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பட்டலந்த அறிக்கை குறித்த விவாதத்தின் போது சமர்ப்பிக்கப்படும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Exit mobile version