ஜப்பானில் 225கிலோமீற்றர் வேகத்தில் ‘ஹாகிபிஸ்’ புயல்

ஜப்பானில்  ‘ஹாகிபிஸ்’  புயல் கடுமையான வேகத்தோடு தாக்கி வருவதால், பேரழிவுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், 70 இலட்சம் பேரை வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான அளவில் ‘ஹாகிபிஸ்’ புயல் தாக்கி வருகின்றது என்றும், டோக்கியோவின் தென்மேற்கே உள்ள இசு தீபகற்பத்தில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு முன்னதாக மாபெரும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று மாலை ஜப்பானில் சிபா கென் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியது.

ஜப்பானில் கோரத் தாண்டவம் ஆடிவரும் ‘ஹாகிபிஸ்’ சூறாவளி, ஜப்பானின் பிரதான தீவின் கிழக்கு கடற்கரைக்கு 225 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. 270,000இற்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இழந்து விட்டதாக ஜப்பானிய ஊடகமான என்.எச்.கே. தெரிவித்துள்ளது.

டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா மாகாணத்தில் அதிக காற்றுடன் வாகனம் கவிழ்ந்து இரண்டு பேர் இறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர்களது கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.