“உங்கள் இராணுவத்தை நம்பிகையில் ஒப் படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணா மல் ஆக்கப்பட்டார்கள்? காணாமல் போனவர் களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச் சுறுத்துவதையும் நிறுத்துங்கள். நாங்கள் கேட்பது இழப்பீடுகளையோ மரணச் சான்றிதழ்களையோ அல்ல. முறையான நீதி விசாரணையே”
திருகோணமலை மாவட்ட வலிந்து காணா மல் ஆக்கப்பட்டோர்களின் சங்கம் கடந்தவாரம் நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்த வாசகங்களே இவை. வடக்கு கிழக்கில் ஜுலை 24,2024 தொடக்கம் ஆகஸ்ட் 01,2024 வரை எட்டு மாவட்டங்களில் இவ்வாறான பல போராட்டங்கள் நடந்தன.
இந்த நாட்டில் யுத்தம் முடிவுற்று 16 வருடங்கள் கடந்து விட்ட போதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தினமும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காக வீதியில் இறங்கி போராடியே வருகின்றனர்.
இவ்வாறு தனது மூன்று சகோதரர்களை இழந்து தவிப்பவர்தான் தம்பலகாமம் கோயில டியை சேர்ந்த எஸ்.விக்னேஸ்வரி வயது (54) காணாமல் ஆக்கப்பட்ட தனது சகோதரன் கந்தசாமி முரளிதரன் தொடர்பில் அவர் கூறு கையில்,“எனது சகோதரன் 2008.05.05 ஆம் திகதியன்று சைக்கிளில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை தேடிப் பார்த்தோம் மூன்றாம் நாள் சைக்கிள் மாத்திரம் பட்டிமேட்டில் கிடந்தது அதன் பிறகு CID யினர் வீட்டுக்கு வந்து உடுப்பு கேட்டார்கள் வழங்கினோம் தொலைபேசியில் மாத்திரம் உரையாடுவார், எங்கிருந்து கதைக்கிறார் என்பதை சொல்ல மாட்டார் . மூன்று மாதங்கள் தொலைபேசியில் பேசியவர் பின்னர் பேசவில்லை. இது விடயமாக போகாத இடமில்லை . ஜனாதிபதி செயலகம், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தோம் மனித உரிமைகள் ஆணைக்குழு ஐசீஆர்சி போன்றவற்றிலும் முறையிட்டோம் சகோதர் திரும்பி வரவில்லை” என்றார்
வடக்கு கிழக்கில் காணாமல் போன ஆயிரக்கணக்கானோரின் உரிமைகளுக்காக ‘வலிந்து கடத்தப்பட்டு காணாமலாக்கப் பட்டோ ருக்கான சங்கம்’ போராடி வருகிறது. அது மாத்திரமன்றி இலங்கை அரசாங்கம் காணாமல் போனோர்களுக்கான ஆணைக்குழுவையும் உருவாக்கியுள்ளதுடன் அதற்கென அலுவலகம் ஒன்றையும் நிறுவி உள்ளது.
இந்த அலுவலகம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடத்தில் தொடர்ச்சியாக வாக்கு மூலங் களை பெற்று வருகிறது. இவ்வாறு வாக்கு மூலம் வழங்கியவர் ஒருவர் தான் தம்பலகாமத்தை சேர்ந்த கமலினி.
“பல வாக்கு மூலங்களை ஆணைக்குழு முன்னிலையில் வழங்கியுள்ள போதிலும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை உளரீதியான பாதிப்புக்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்து வருகிறோம்” என தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் மொத்த மாக 1349 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டுள்ள அலுவலக தகவல் அதிகாரி டபிள்யூ.ஜீ.எஸ்.சீ.சம்பத் தெரிவிக்கிறார்.
இது தொடர்பில் 585 சாட்சியமளிக்கும் அமர்வுகள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில ளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“எனது கணவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில்தான் வாழ்கிறேன். 2008.07.10 அன்று சுங்கான் குழிக்கு பட்டியனூர் பட்டிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை. கணவர் காணாமல் போகும் போது நான் நான்கு மாத கர்ப்பிணி. இப்போது எனது மகளுக்கு 15 வயதாகிறது. இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தேன்.
காணாமல் போன ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தேன். எந்தவித பலனும் கிட்டவில்லை” என கிண்ணியா ஆலங்கேணியை சேர்ந்த நித்தியானந்தம் சுஜாதா வயது (54) எனும் மற்றொரு தாய் தனது கவலையை எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
பலர் இவ்வாறாக குடும்ப உறவுகளை இழந்து பெரும் கவலையுடன் நாட்களை கடத்தி வருகின்றனர். தமக்கான நிரந்தர நீதியின்றி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினம், காணாமல் போனோர் தினம், சுதந்திர தினம் என எல்லா விசேட தினங்களில் கவனயீர்ப்பு போராட் டங்களை நடாத்துகின்றனர். எனினும் நீதி மட்டும் கிட்டுவதாகத் தெரியவில்லை.
காணாமல் போன உறவுகள் பெரும்பாலான வர்கள் கணவனை இழந்த நிலையில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக மாறியுள்ளனர். இவ்வாறு குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் தனது கணவன் காணாமல் போனமை தொடர்பில் எல்.தேவிகா வயது (54) தனது ஆதங்கத்தை இவ் வாறு வெளிப்படுத்துறார்.
“எனது கணவராகிய லிங்கேஸ்வரன் 2008.05.20 அன்று சலப்பையாறு என்ற குடியிருப்பு பகுதியில் இருந்து திருகோணமலை நகரில் உள்ள தங்க ஆபரண கடையில் வேலை செய்து வந்தார். வேலைக்கு சென்றவர் திரும்பிவரவில்லை. மூன்று நாட்களாக தேடினேன் காணவில்லை. இவர் காணாமல் போகும் போது மூத்த மகளின் வயது ஆறு, இளைய மகளின் வயது ஒன்றரை ஆகும். இது தொடர்பில் குச்சவெளி பொலிஸில் முறைப்பாடு செய்தேன். அதனைத் தொடர்ந்து ஐசிஆர்சி,மனித உரிமைகள் ஆணைக்குழு என பல முறைப்பாடுகளை செய்தும் இன்னும் என் கணவர் கிடைக்கவில்லை. பெரும் கஷ்டத்தின் மத்தியில் பிள்ளைகளை கல்வியில் முன்னேற்றமடைய செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய கிழக்கு நாட்டுக்கு புலம்பெயர்ந்து தொழிலுக்காக சென்று இரு பிள்ளைகளையும் படிக்க வைத்து தற்போது ஒருவர் பல்கலைக்கழக கல்வியை தொடர்வதுடன் மற்றொருவர் உயர்தரத்தில் கற்று வருகிறார். தற்போது கோழி வளர்ப்பு மூலம் அன்றாட ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது” என்றார்.
இது போன்றுதான் ஏனைய குடும்பங்களும் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்காக தினம் தினம் போராடி வருகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தமது குடும்பத்தின் வயிற்றுப் பசியைப் பார்க்கின்ற அதேநேரம், தமது உறவுகளுக்காக போராட்டத்திலும் ஈடு படவேண்டியுள்ளது.
2700 நாட்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செபஸ்டியன் தேவி தெரிவிக்கையில், “16 வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இலங்கை அரசாங்கம் தீர்வினை தரவில்லை எத்தனையோ ஆணைக்குழு வந்தும் நீதியை தரவில்லை. சர்வதேசம் ஊடாக எங்களுக்கான உரிமை நீதியை கோரி நிற்கிறோம். நீதி தான் தேவை நிதி தேவையில்லை. ஐக்கிய நாடுகள் சபை இதற்கான எந்தவித விசாரணையை முன்னெடுத்தும் நீதியை தரவில்லை. எனது மகன் 2008.03.19 அன்று அரச படையால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார் . எட்டு மாவட்டங்களில் எங்களுக்கான நீதி தேவை என்ற அடிப்படையில் போராட்டங்களை மேற்கொள்கிறோம். காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் (OMP) போன்றன வெறும் கண் துடைப்பே. இதனால் சர்வதேச விசாரணை தேவை என்பதே எனது கோரிக்கை” என்றார்.
சர்வதேச நீதிப் பொறிமுறை, ஆணைக்குழு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் தெரிவிக்கையில், “இலங்கை அர சாங்கத்தால் காணாமல் ஆக்கப்பட்ட சமவாயம் பின்னர்தான் உருவாக்கப்பட்டது . இதனால் உள்ளூர் பொறிமுறையின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதில் எந்த பலனும் இல்லை. சர்வதேச பொறி முறையானது பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் பணிக் குழு ( working Group ) வில் சாட்சியங்களை முன்வைத்தாலும் அவர்களால் இலங்கை அரசாங்கத்துக்கு வெறும் பரிந்துரைகளை மாத்
திரமே வழங்கலாம். பரிந்துரைகளை அர சாங்கம் அமுல்படுத்தாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து. இதே போன்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணைக்குழு என்பதும் நீதி வழங்குவதற்கான அதிகாரம் கொண்ட தல்ல. உண்மைகளை கண்டறிவதற்காக உருவாக் கப்பட்டதே இதன் மூலம் எந்தவித பலனும் இல்லை” என்றார்.
2022 இல் ரணில் விக்ரமசிங்க ஜனாதி பதியான பின்னர் காணாமலாக்கப்பட்ட மக்க ளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் துளிர்விட்டது. எனினும் கடந்த இரண்டு வருடங்களில் அவர் எந்த வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. வடக்கு கிழக்கிற்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ள அவர் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதற்கு முயற்சிக்கவுமில்லை. தற்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகி றது. தமிழ் அரசியல்வாதிகள் தாம் ஆதரிக்கும் வேட்பாளர்களிடம் இந்த விவகாரத்தை பிரதான கோரிக்கையாக முன்வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இது தொடர்பில் தெரிவிக்கையில் “ முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதி மற்றும் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகள் உட்பட பல மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டுள்ளார்கள். இதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். இதனையே எமது கட்சியான தமிழ் தேசிய மக்கள் முண்ணனியும் வலியுறுத்தி நிற்கிறது” என்றார்.
ஒட்டுமொத்தமாக சர்வதேச சமூகத்தின் சுதந்திரமான பொறி முறையை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரி நிற்கின்றனர். இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சர்வதேச சமூகம் புதிய பொறிமுறைகள் ஊடாக நீதியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையிலேயே இந்த மக்கள் போராடி வருகின்றனர். நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சலுகைகளுக்காக தாரை வார்க்காது காணாமல்போனார் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்து நீதியைப் பெறுவதற்கான அழுத் தங்களை வழங்க பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் வேணவாவாகும்.