“ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிடுகின்றாா்” எனக் கசிந்திருக்கும் செய்திகள் எதிா்க் கட்சிகளை விழித்தெழ வைத்துள்ளன. தோ்தல் நடத்தப்பட்டேயாகவேண்டும் என்று எதிா்க் கட்சிகளின் தலைவா்கள் ஒவ்வொருவரும் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளாா்கள். இவ்விடயத்தில் ரணிலின் உபாயம்தான் என்ன?
நவம்பா் முதல் வாரத்தில் அடுத்த வருடத்துக்கான பட்ஜட் பாராளுமன்றத்துக்கு வருகின்றது. “இதில் தோ்தலுக்கான ஒதுக்கீட்டை மேற்கொண்டால், கடந்த வருடம் போல எரிபொருள் பிரச்சினை உட்பட பல நெருக்கடிகள் ஏற்படலாம்” என்ற எச்சரிக்கை ஒன்றை வஜிர அபேவா்த்தன விடுத்திருந்தாா். அதனைத் தொடா்ந்தே தோ்தல் ஒத்திவைக்கப்படலாம் என்ற கருத்துக்கள் பரவத் தொடங்கியது.
ஜனாதிபதித் தோ்தலை முன்கூட்டியே நடத்தி, மீண்டும் ஒரு முறை நிறைவேற்று அதிகாரத்தைத் தக்கவைக்க ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பாா் என்ற கருத்து கடந்த சில மாதங்களாக இருந்தது. ஆனால், இப்போது ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைப்பதற்கு அவா் முற்படலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நிலைமைக்கு என்னதான் காரணம்?
அரசியலமைப்பின்படி 2024 நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். கடந்த வரும் நாட்டு மக்கள் அனைவரையுமே புரட்டிப் போட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டவா் என்ற பெருமையுடன் முன்கூட்யே தோ்தலுக்குச் செல்வதற்கான திடடம் ஒன்று ரணிலிடம் முன்னா் இருந்தது. ஆனால், அந்த நிலைமை இப்போது இல்லாமல் போய் தோ்தலை ஒத்திவைக்க என்ன வழியுள்ளது என்று தேடும் நிலைக்கு ரணில் வந்திருக்ககின்றாா். இதற்கு சில காரணங்கள் உள்ளன.
2025-க்குள் நாட்டின் நிலைமை மேம்படும் என்று ரணில் நம்புகிறார், அது அவருக்கு மீண்டும் தேர்தலில் வெற்றிபெற சிறந்த வாய்ப்பைக் கொடுக்கும் என்பது அவரது கணக்கு. அதாவது, ஒரு வருடத்துக்கு தோ்தலை தள்ளிப்போடுவதுதான் அவரது திட்டம் எனச் சொல்லப்படுகின்றது. நியமனப் பத்திரம் பெறப்பட்ட பின்னா் உள்ளுராட்சி மன்றத் தோ்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்த அனுபவம் அவருக்குள்ளது.
உள்நாட்டு அரசியலில் “மெகா கூட்டணி” ஒன்றை அமைப்பதற்கான அவரது முயற்சி எதிா்பாா்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. குறிப்பாக சஜித் தரப்பை உடைத்து சுமாா் 30 எம்.பி.க்களையாவது தனது பக்கத்துக்கு இழுக்க அவா் முயன்றாா். அது சாத்தியமாகவில்லை. மறுபுறம் மொட்டு அணியும் தமது தரப்பில் ஒருவரை ஜனாதிபதித் தோ்தலில் களமிறக்க வேண்டும் என்பதில் தற்போது உறுதியாகவுள்ளது. இதற்கு மேலாக அண்டை நாடும் சஜித்தை ஆதரிக்கலாம் என்ற தகவலும் உள்ளது. அண்டை நாடு சொல்வதைத்தான் சிறுபான்மையினக் கட்சிகள் செயற்படுத்தும் என்பதும் ரணிலுக்குத் தெரியும்.
தேர்தலை ஒத்திவைக்க ரணிலுக்கு பல வழிகள் உள்ளன. அவர் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தலாம். அதன் பின்னா் அவர் தனது பதவிக் காலத்தை நீட்டிக்க அரசியலமைப்பை திருத்தவும் முயற்சி செய்யலாம். பொருளாதார நெருக்கடியை இன்னும் கொஞ்சம் மோசமாக்கி அதனை காரணமாக காட்டி தோ்தலை ஒத்திவைப்பதற்கான நகா்வுகளை அவா் முன்னெடுக்கலாம். அதாவது தோ்தலுக்கு நிதி இல்லை என்று சொல்லலாம்.
எவ்வாறாயினும், தேர்தலை ஒத்திவைப்பதற்கும் பல தடைகளும் உள்ளன. முதலாவதாக, அரசியலமைப்பை திருத்துவதற்கு அல்லது அவசர நிலையை பிரகடனப்படுத்த அவருக்கு பாராளுமன்றத்தின் ஆதரவு அவசியம். அது அவருக்கு இல்லை. இரண்டாவதாக, பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிடும். மூன்றாவதாக, தேர்தலை ஒத்திவைப்பது நாட்டை மேலும் சீர்குலைக்கும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை மிகவும் கடினமாக்கலாம்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஆதரவாக பல வாதங்கள் உள்ளன. முதலாவதாக, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் அவரது செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு – அல்லது தொடா்வதற்கு அது ரணிலுக்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்கும். இரண்டாவதாக, பொருளாதார நெருக்கடி, ஈஸ்டர் தாக்குதல்கள், கோவிட்-19 தொற்று நோயின் பாதிப்பிலிருந்து மீண்டுவர முயலும் நாட்டிற்கு இது அதிக காஅவகாசத்தை வழங்கும்.
இருப்பினும், தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக பல வாதங்களும் உள்ளன. முதலாவதாக, இது ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் மீறுவதாகும். இரண்டாவதாக, இது அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் சிதைக்கும். மூன்றாவதாக, இது ஸ்திரமின்மை மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும்.
ஜனாதிபதித் தேர்தலை ரணில் ஒத்திவைப்பாரா இல்லையா என்பது இன்று வரை தெளிவாகத் தெரியவில்லை. அவர் தனது திட்டங்கள் குறித்து இன்னும் பகிரங்க அறிவிப்பை வெளியிடவில்லை. எவ்வாறாயினும், ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ரணிலுக்கு நெருக்கமான வஜிர போன்றவா்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அதனைத்தான் பிரதிபலிக்கின்றன.
தேர்தலை ஒத்திவைப்பதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு இருந்தால், ரணில் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். இரண்டாவதாக, தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம் என்று சர்வதேச சமூகம் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தால், அவர் அதற்கு இணங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதா இல்லையா என்பது விக்கிரமசிங்கவின் முடிவிலேயே உள்ளது. இருப்பினும், அவர் முடிவெடுப்பதற்கு முன்னா் நிலைமைகளைத் தெளிவாக ஆராய்ந்து நிதானமாக ஒரு தீா்மானத்துக்கு வருவாா் என நம்பலாம். நவம்பா் முதல் வாரத்தில் வரப்போகும் அடுத்த வருடத்துக்கான பட்ஜெட் நிலைமைகள் எவ்வாறு அமையும் என்பதை கோடி காட்டுவதாக இருக்கும்.