ஜனாதிபதித் தேர்தல்- வேட்பாளர்களுக்கு செலவிடப்படும் பொது மக்களின் நிதி!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் மேலதிகமாக 200 மில்லியன் ரூபா நிதியை செலவிட நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, மேலதிகமாக செலவிடுவதற்காக பொது மக்களின் நிதியே பயன்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம்வரை 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 14 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.