ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த அரசு மீண்டும் முயல்கிறதா? – மட்டு.நகரான்

இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையினைப்பொறுத்த வரையில் என்றைக்கும் ஒரு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட தலைவர்கள் இல்லாத தலைவர்கள் இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக தேர்தல் கள் மோசடிகள் நிறைந்ததாகவும் இனங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச் சியாக இருந்துவருகின்றது.
குறிப்பாக ஒவ்வொரு தேர்தல் காலங்க ளிலும் சிறுபான்மை மக்களிடையேயும் சிறு பான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இடையேயும் குழப்பங்களை ஏற்படுத்தி தமது அரசியல் காய்களை நகர்த்தும் தென்னி லங்கை சிங்கள பேரினவாத சக்திகளின் செயற்பாடுகள் என்பது தற்போதும் முன்னெடுக்கப் பட்டுவருகின்றது.
யுத்த காலத்தில் தமிழ் மக்களை பயங்கர வாதிகளாக காட்டி தெற்கில் இனவாதத்தினை விதைத்து தமது அரசியலை முன்னெடுத்தவர்கள் இன்று முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக காட்டி யும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தியும் தமது சிங்கள கடும் போக்குவாத அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதை காணமுடிகின்றது.
குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்த லில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டு கோத்தபாய ராஜபசாவை ஆட்சிக்கு கொண்டு வந்ததது போன்று கிழக்கில் மீண்டும் ஒரு இனக்கலவரம் அல்லது குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக் கப்படுகின்றதா என்ற சந்தேகம் இன்று பரவலாக ஏற்பட்டுவருகின்றது.
குறிப்பாக கிழக்கில் யுத்த காலத்தில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான படுகொலைகளை நடாத்தியும் தமிழ் ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை நடாத்தி தமிழ்-முஸ்லிம் மக்களிடையே உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தி அதன்மூலம் சிங்கள பேரினவாதம் தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றி வந்தது. ஆனாலும் யுத்தம் நிறை வடைந்த காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கமுடியாத நிலையில் குண்டுத் தாக்கு தல்களை நடாத்தி அதனை முஸ்லிம் சமூகம் மீது சுமத்தி சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் வாக்குகளை பெறுவதற்கு தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1990ஆம் ஆண்டு    ஜுலை மாதம் தொடக்கம் டிசம்பவர் மாதம் வரையில் அதிகளவான தமிழின படுகொலைகள் நடந்த காலப்பகுதியாகும். கூடுதலாக இக்காலப் பகுதியிலேயே சிறுபான்மை சமூகம் மீது வேட்டைகள் நடத்தப்பட்டு வந்தன. ஜூலை படுகொலை தொடக்கம் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத் தின் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் எண்ணிலடங்காத படுகொலைகள் நடைபெற்றுள்ளன.
இந்த படுகொலைகளை வைத்தே தெற்கில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசியல் முன்னெடுக்கப்பட்டதுடன் -முஸ்லீம் மக்கள் மத்தியிலும் பெரும்பான்மை கடும்போக்கு அரசு கள் வேரூரன்ற காரணமாக அமைந்தன. கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் இன்றைய காலத்தில் தெற்கில் முன் னெடுக்கப்படும் எந்த தேர்தலுக்கும் பலிகடா வாக்கப்படும் மாகாணமாக காணப்படுகின்றது.வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை மழுங்கடிப்பதற்காக தெற்கில் பேரின வாத சக்திகளினால் கிழக்கில் காலத்திற்கு காலம் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டே வருகின்றன.
இது தொடர்பில் கடந்த காலத்தில் பல தடவைகள் இது குறித்து நான் எழுதியிருக்கின்றேன்.  அவ்வாறானதொரு நிலைமையினை ஏற்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் கிழக்கில் தற்போது முன்னெடுக்கப் பட்டுவருவதை காணமுடிகின்றது.
குறிப்பாக ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் போன்றதொரு சம்பவம் அல்லது தமிழ் -முஸ்லீம் கலவரம் போன்ற விடயங்களை ஏற்படுத்தி தமது அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பேரினவாத சக்திகள் முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதற்கு துரப்பு சீட்டாக மட்டக்களப்பில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் முன்னாள் ஆயுதக் குழுவான பிள்ளையான் குழுவும் பயன்படுத்தப்படுகின்றதான தகவல்களும் வெளியாகி வரு கின்றது.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், கிழக்கில் பிள்ளையான் முன்னெடுக் கும் செயற்பாடுகள், ஆயுதங்களின் பரிமாற்றம் மற்றும் குண்டுத்தாக்குதல் நடாத்துவதற்கான ஆயத்தங்கள் மற்றும் ஆயுதங்கள் பரிமாற் றங்கள் குறித்தும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் போன்ற கருத்து களை வெளிப் படுத்தியிருந்தார். இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யினையும் முன் வைத்திருந்தார். ஆனால் இது வரையில் எந்த விசாரணையும் நடை பெற்றதாக நான் அறிய வில்லை.
இதேபோன்று மட்டக்களப்பு கரடிய னாறு காவல்துறைப்  பிரிவுக்குட்பட்ட பகுதி யிலிருந்து பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. இதுவரையில் மீட்கப்படாத வகையில் அதிகளவான வெடிபொருட்கள் இங்கு மீட்கப்பட்டிருந்தன.
சம நேரத்தில் காத்தான்குடி-மட்டக்களப்பு எல்லைப்பகுதியான பூநொச்சிமுனை பகுதியில் உள்ள வீடு ஒன்றின்மீது குண்டுத்தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. உள்ளூர் தயாரிப்பு குண்டு ஒன்றே இவ்வாறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் வேறு நபரால் நடாத்தப்பட்டதா அல்லது குறித்த வீட்டில் பரிசோதனையின்போது வெடிக்கப்பட்டதா என்பது தொடர்பிலான விசார ணைகள் இன்னும் முடியவில்லை. இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இரண்டு ரி.56துப்பாக்கியுடன் இஸ்லாமிய மௌ லவி ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்படுகின்றார்.
இவ்வாறான செயற்பாடுகளே எதிர் காலத்தில் கிழக்கிலோ அல்லது நாட்டின் வேறு பகுதிகளிலோ தாக்குதல்களை முன்னெடுப் பதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகின்றது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது குண்டுத்தாக்குதல் நடாத்துவது அல்லது இனக்கலவரங்களை நடாத்துவது போன்ற வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.இதற்காக பிள்ளையான் குழுவினை பயன்படுத் தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படு வதனை காணமுடிகின்றது.
இவ்வாறான நிலையில் கிழக்கில் தமிழ்-முஸ்லீம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி அதன்மூலம் சுய அரசியல் இலாபம் பெறும் வகையிலான செயற்பாடுகளை பிள்ளையான் -அதாவுல்லா போன்றவர்கள் முன்னெடுக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன. அண்மையில் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவில் பிள்ளையானின் கட்சியினால் நடாத்தப்பட்ட மகாநாட்டில் முற்றுமுழுதாக தமிழ் -முஸ்லீம் மக்களின் உறவுகளுக்கு எதிரான கருத்துகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் அதாவது தமிழர்களின் போராட்டத்திற்கு பின்னர் பிறந்த பிள்ளைகளிடம் முஸ்லீம்கள் தொடர்பான தவறான விதைப்புகள் பிள்ளையான் குழுவினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன.மறுபுறத்தில் அதாவுல்லா, ஹாரிஸ் போன்ற தீவிர இஸ்லாமிய செயற்பாட்டு அரசியல்வாதிகளினால் தமிழர்கள் தொடர்பில் முஸ்லீம்கள் மத்தியில் கடுமையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
உணர்ச்சி ரீதியான விடயங்கள் சமூகங்களுக்குள் ஊடுறுவி அவர்களை நிலைகுலையச் செய்யும் வகையிலான செயற்பாடுகள் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் இவர்களின் பருப்புகள் வேகாது என்ற கார ணத்தினால் அம்பாறை மாவட்டத்தில் இவை திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன.
இவற்றினை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளபோதிலும் அதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையானது கிழக்கில் உருவாகி யிருக்கும் இந்த சூழ்நிலைக்கு ஏதுவானதாக உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் பின் னர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இரண்டு தேர்தல்களையும் இலக்குவைத்து இனவாத ரீதியான செயற்பாடுகளை இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதமும் அதனுடன் இணைந்த புலனாய்வுக்கட்டமைப்புகளும் முயற்சிகளை முன்னெடுத்துவரும் நிலையில் தமிழ் தேசியம் சார்ந்த பரப்பில் செயற்படுவோர் வெறும் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்திற்குள் மட்டும் மூழ்கியுள்ளதுடன் எந்த சிங்கள ஜனாதிபதியை ஆதரிப்பது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலைமையும் காணப்படுகின்றது.
கிழக்கில் சிறுபான்மை சமூகங்கள் மத்தியிலும் ஏனைய பகுதிகளில் சிறுபான்மை சமூகங்களுக்கும் பெரும்பான்மையினங்களுக்கும் இடையிலும் இவ்வாறான மோதல் நிலைமைகள் ஏற்படுமானால் இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் மீண்டும் மிக மோசமான நிலைக்கு செல்லும் நிலைமைகள் ஏற்படும்.
எனவே இவற்றினை இனங்கண்டு தமிழ்-முஸ்லீம் உறவுகளை வலுப்படுத்தவும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதிகளின் திட்டங்களை முறியடிக்கவும் பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு அனைத்து இன மக்களும் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய காலமாகவுள்ளது. தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் தமக்குள்ள வேறு பாடுகளை களைந்து இந்த விடயத்தில் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும்.