எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சில சிறிய குழுக்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம், க.அருந்தவபாலன் தலைமையிலான குழு, சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி, இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து பிரிந்து ஜனநாயக தமிழ் அரசு கூட்டணியென்ற பெயரில் செயற்படும் சட்டத்தரணி கே.வி.தவராசா தரப்பினர் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிட கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும், சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி, அந்த கூட்டணியிலிருந்து விலகி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளது.
அதேபோன்று கே.வி.தவராசா தலைமையிலான குழு மற்றும் பொ.ஐங்கரநேசன் குழுவும், முன்னதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணைய தீர்மானித்திருந்தன.எனினும் அவர்கள் தற்போது கஜேந்திரக் குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த விடயத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும் இந்த தரப்புக்களுக்கும் இடையே ஆசன பங்கீடு தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.