ஜனநாயக கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காத பயங்கரவாத தடைச் சட்டம் – துரைசாமி நடராஜா

இலங்கை அரசு பயங்கரவாத தடைச் சட்டத்தைதைப் பயன்படுத்தி கைது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகின்றமை தொடர்பில் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

 

இச்சட்டத்தின் ஊடாக நாட்டில் ஜனநாயகத்தையும், ஊழலற்ற அரசியல் கலாசாரத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரகலய போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அமுலாக்கலானது பல்வேறு பாதக விளைவுகளுக்கும் இட்டுச் சென்றுள்ளதாகவும் இச்சட்டமானது பெரும்பாலும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் உரியவாறு மதிப்பளிக்காத ஒரு சட்டமாகவே காணப்படுவதாக சர்வதேசமும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் 1979 ம் ஆண்டில் ஒரு தற்காலிக சட்டமாகவே கொண்டு வரப்பட்டது.ஆனால் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட இனத்துவ மோதல் காரணமாக அதனை அடக்குவதற்கு ஒரு நிரந்தரமான சட்டமாகவே இது இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை சமவாயங்களையும், சர்வதேச மனித உரிமை சட்டங்களையும் முற்றிலும் மறுதலிக்கின்ற ஒரு சட்டமாகவே காணப்படுகின்றது.

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத ஒரு கொடூரமான சட்டம் என்று இச்சட்டம் சித்திரிக்கப்படுவதும் தெரிந்த விடயமாகும். இச்சட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்ற நிலையில்.மக்களின் குரல்களை ஒடுக்குவதற்கும், அச்சுறுத்தி பணிய வைப்பதற்கும் பயங்கரவாத தடைச்சட்டம் துணைபோவதாக முன்வைப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் இச்சட்டமானது ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு சவாலாக விளங்குவதோடு மனித உரிமை முடக்கல்களுக்கும் அடித்தளமிடுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.இதில் உண்மைத்தன்மையும் இல்லாமலில்லை.இலங்கையில் அண்மையில் ராஜபக்சாக்களை அரசியலில் இருந்து விரட்டியடித்து நீதியானதும் நியாயமானதுமான அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் முனைப்பில் இளைஞர்கள் அணிதிரண்டு காலிமுகத்திடலில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.இப்போராட்டத்திற்கு தொடர்ச்சியாக மக்கள் ஆதரவு வலுப்பெற்ற நிலையில் ராஜபக்ஷாக்கள் அரசியலில் வலுவிழக்கும் நிலைமை மேலெழுந்தது.

சர்வதேச ரீதியில் இந்தப் போராட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.தற்போதைய  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது அரகலய போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவினையும் வெளிப்படுத்தி இருந்தார்.ரணில் ஜனாதிபதியாவதற்கும் அரகலயவே தோள் கொடுத்தது.

எனினும் அவர் ஜனாதிபதியான கையோடு பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குகின்ற அல்வது நசுக்குகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி இவர்கள் 90 நாட்கள் வரை தடுத்து வைக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த  வகையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்மதேரர் மற்றும் ஹசாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகிய மூவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.army jaffna ஜனநாயக கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காத பயங்கரவாத தடைச் சட்டம் - துரைசாமி நடராஜாஅநீதிக்கும், அத்துமீறல்களுக்கும் எதிராக குரல் கொடுக்கும் ஆளுமை படைத்தவர்களாக நாட்டு மக்கள் விளங்குவது ஒரு சிறப்பம்சமாகும்.இத்தகைய செல்நெறிகள் நாட்டில் ஜனநாயக தார்ப்பரியத்தின் இருப்பை உறுதி செய்வதாகவே அமையும்.எனினும் இத்தகைய குரல்களை பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி அடக்கி ஒடுக்க நினைப்பது எவ்விதத்திலும் நியாயமாகாது.

தேசிய பாதுகாப்பு சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் தனது கோர முகத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் இது தொடர்பான எதிர்ப்பலைகள் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மேலெழும்பி வருகின்றன.பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரயோகம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமான கரிசனையை வெளிப்படுத்தி இருக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய தகவல்கள் குறித்தும் நினைவூட்டல்கள் இடம்பெற்றுள்ளன.பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் மீள் அமுலாக்கம் செய்யப்பட்டமை விசனத்திற்குரிய ஒரு விடயமேயாகும் என்பதை மறுப்பதற்கில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகளை கேள்விக்குறியாக்கிவரும் நிலையில் இது மிகப்பெரும் தாக்க விளைவுகளுக்கு அடித்தளமாகலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.இந்நிலையில் உரிய அதிகாரிகள் அதன் பயன்பாட்டை இடைநிறுத்துவதற்கென்று தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்பது பிரித்தானியாவின் கோரிக்கையாக உள்ளது.

இலங்கையானது மாணவ செயற்பாட்டாளர்களை தடுத்து வைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றது.இச்சட்டமானது சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையதாக அமையவில்லை என்பதால் இதனை நீக்குமாறு நாலாபக்கமும் நெருக்கீடுகள் அதிகரித்து வருகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது இலங்கை அரசாங்கத்தின் புதிய செயற்பாடாக இருக்கின்றது.ஏற்கனவே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதும் உடனடியாக முழுமையாக நீக்கப்பட வேண்டியதுமான பயங்கரவாத தடைச் சட்டத்தை இவ்வாறு ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதானது அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்ட முறையில் மக்களின் கருத்துக்களை நசுக்குகின்றது என்பதற்கான சான்றாகும் என்ற கருத்துக்களுக்கும் குறைவில்லை.sl army ஜனநாயக கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காத பயங்கரவாத தடைச் சட்டம் - துரைசாமி நடராஜாபயங்கரவாத தடைச் சட்டம் இவ்வாறாக பலராலும் விமர்சிக்கப்படும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக ” தேசிய பாதுகாப்பு சட்டம்” விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசுதரப்பு செய்திகள் வலியுறுத்துகின்றன.பயங்கரவாத தடைச்சட்டத்தில் பரந்தளவிலான திருத்தங்களை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னர் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் கொழும்பிலுள்ள தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் ஆகியோரை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியும் அண்மையில் சந்தித்திருந்தார்.

இதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் விரிவான மீளாய்வை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறெனினும் பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில் இச்சட்டத்தை நீக்கி மனித உரிமைகளின் உறுதிப்பாட்டிற்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் வித்திடுவது மிகவும் அவசியமாகும் என்பதை மறந்து விடக்கூடாது.