நீதியரசர் சச்சி பொன்னம்பலத்தின் “சிறிலங்கா-தமிழர் தேசியப் பிரச்சினையும் தமிழர் விடுதலைப் போராட்டமும்” நூலிருந்து சில தரவுகள்சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்கா இரு தேச இனங்களின் இறைமைகளின் சமத்துவத்தை உறுதிப்படுத்தி நாட்டை பொருளாதார பெருவீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கான சில வரலாற்று வழிகாட்டல் ஈழத்தமிழர் இறைமையை இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனி 1796 இல் டச்சுக் காலனித்துவ அரசிடம் இருந்து கைப்பற்றி மதராசில் இருந்து ( இன்றைய சென்னை) தமிழகத்துடன் இணைந்ததாக முழு இலங்கையையும் 1802 வரை ஒரே சட்டத்தில் ஓரே நிதியுடன் ஆட்சிப்படுத்தியமை ஈழத்தமிழர் ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட வரலாற்றின் முதல் தொடக்கமாகவுள்ளது.
சேர். கியூ கிளக்கோன் (Sir Hugh Cleghorn) இலங்கைக்கான முதலாவது காலனித்துவ செயலாளர், தனது 1799ம் ஆண்டு ‘கிளக்கோன்’ அறிக்கையில், “இருதேச இனங்கள் இலங்கைத் தீவின் நிலத்தை இரண்டாகக் கூறுபோட்டுத் தமக்குள் வைத்துள்ளனர். தெற்கின் உட்பகுதியிலும் மேற்குப் பகுதியில் வளவை ஆறுமுதல் சிலாபம் வரையும் சிங்களவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.மலபார்காரர்கள் (தமிழர்களுக்கு அரபுநாட்டு வணி கர் அல்பரூனி அறிமுகம் செய்த சொல். தமிழையும் மலபார் மொழி என்றே அரபு நாட்டவர் வழி போர்த்துக்கேயர் முதல் முதற்கட்ட ஆங்கில ஆளுநர்களான சேர் றொபெர்ட் பிறவுணிங், சேர். எமேசன் ரெனென்ற் ஆகியோரும் பயன்படுத்தினர் என்பது முனைவர் காரைசுந்தரம்பிள்ளை அவர்களின் வடஇலங்கை நாட்டார் அரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முனைவர் பட்ட நூலில் 140வது பக்கத் தகவல் ) இலங்கையின் வடக்கு கிழக்கு மாவட்டங்களை தமதாகக் கொண்டிருக்கின்றனர். இந்த இருதேச இனங்களும் தங்களின் மதம், மொழி, நடத்தைகள் என்பவற்றில் முற்றிலும் வேறுபட்டவர்கள்.” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளமை. தமிழக – ஈழத்தமிழர்களை தமிழினத்தைக் குறிக்கும் மலபார்களாகவே கருதி 1796 முதல் 1802 வரை ஈழத்தையும் தமிழகத்தையும் ஒரே ஆட்சி அலகாக ஆட்சி செய்தமைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்துகிறது.
வடக்கின் நாகதீப ஆட்சி மேற்கில் சிலாபத்தில் இருந்து கிழக்கே திருகோணமலை வரை இருந்த ஆட்சிப்பிரதேசம் என கி.பி. 2ம் நூற்றாண்டின் யாத்திரிகரான பிலோமி (Ptolemy) குறித்தமை 1799 இலும் கிளக் கோனின் அறிக் கையிலும் உறுதியானது முக்கியமான விடயமாக உள்ளது.
சேனன் குடிக்கன் தமிழ் அரசர் ஆட்சிகள் கி.மு 177-155 இல் நிலவியமை பற்றிய குறிப்புக் களும் தமிழ் அரசன் எல்லாளன் அநுராதபுரத்தில் ஆட்சியினை கி;மு 145-101 வரை ஆட்சிப்படுத்திய வரலாற்றுக் குறிப்புக்களும். மகாவம்சத்தின் 24வது அதிகாரத்து சிங்கள அரசு குறித்த தொன்மத்திலும் கூட துட்டகைமுனு தனது தந்தைக்குப் போர் பிரகடனம் செய்தைக் கூறிய பொழுது அவர் மகாகங்க என அழைக்கப்பட்ட இன்றைய மகாவலி கங்கைக்கு அந்தப் புறத்தில் தமிழர்கள் ஆளட்டும் இந்தப் புறத்தில் நாங்கள் ஆளுவோம் எனச் சமரசம் செய்ய முயன்ற குறிப்புக்களும் கூடவே துட்டகைமுனு தென்கிழக்கில் மகியங்கனையை ஆண்ட சாத்தன் என்ற தமிழரசனை வென்று தொடர்ந்து 31 தமிழ்ச் சிற்றரசர்களை வென்று அநுராதபுரத்தில் எல்லாளனுடன் போருக்கு வந்தான் எனக் கூறியிருப்பதும் ஈழத்தமிழர்களின் இறைமையுள்ள தாயகமாக வடக்கு கிழக்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இருந்து வந்துள்ளமைக்கான மக்கள் வரலாற்று நினைவுகளாக உள்ளன.
ஆயினும் கி. பி 1214 முதல் கி.பி 1621 வரை 407 ஆண்டுகள் யாழ்ப்பாண அரசு ஈழத்தமிழர்களின் அரசாக சமகால வரலாற்றில் நிலைபெற்றிருந்து 1505இல் கோட்டே சிங்கள அரசில் போரத்துக்யேர் உடைந்த கப்பலைப் பழுதுபார்க்கக் கால்வைத்து கோட்டே அரசைக் கைப்பற்றிய பொழுது கோட்டே அரசன் விதியபண்டாராவுக்கு நல்லூரில் யாழ்ப்பாண அரசு அரசியல் புகலிடம் கொடுத்துப் பாதுகாத்ததும். அச்சமயம் விதியப்பண்டார வெடிமருந்து தயாரிப்பில் மரணம் அடைந்த பொழுது அவருக்கு பூதவராயர் நடுகல் கோயிலை அமைத்துத் தமிழர் பண்பாட்டு முறையில் வீர வணக்கத்தை யாழ்ப்பாண அரசு செய்தமை சிங்களவர்களுக்கான பாதுகாப்புத் தோழமையாக வும் யாழ்ப்பாண அரசு விளங்கியது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளாக உள்ளது.
வடஅமெரிக்க முஸ்லீம் யாத்திரிகரான இபின் பட்டுடா 1344 இல் யாழ்ப்பாண அரசரான ஆரியச் சக்கரவர்த்தியினைச் சந்தித்த பின்னர் அவருடைய அரண்மனையின் பிரமாண்டத்தையும் அனைத்துலக வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கப்பல் அணிகளின் பெருக்கத்தையும் அரசரின் அனைத்துலகத்தவரை வரவேற்று விருந்தளி த்து மதிப்பளிக்கும் பெரும்பண்பையும் வியந்து பாராட்டியமையும் இவ்விடத்தில் மீள்நினைவு படுத்தப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
மேலும் 1802 இல் நெதர்லாந்துடன் பிரித்தானியா செய்து கொண்ட அமீன்ஸ் உடன் படிக்கையின் படி (Treaty of Amiens, Holland) இலங்கைத் தீவு பிரித்தானியா முடிக்குரிய அரசாக மாற்றப்பட்டதன் பின்னர் அடுத்து வரும் 30 ஆண்டுகளும் பிரித்தானியா காலனித்துவ அரசாங்கம் ஈழத்தமிழர்களின் அரசுக்குரிய பகுதிகளையும் சிங்களவர்களின் அரசுக்குரிய பகுதிகளையும் தனித்தனியான அலகுகளாகவே ஆட்சிப்படுத்தினமை இலங்கைத் தீவில் இரு இறைமையுள்ள அரசுக்களை பிரித்தானியாகைப் பற்றியது என்பதற் கான வரலாற்றுச் சான்றாக உள்ளது.
இக்காலத்தில் 10.07. 1813இல் பிரித்தானியா தனது சிலோன் அரசாங்கத்தின் ஆட்சி மொழியான ஆங்கிலத்துடன் பயன்படுத்த வேண்டிய மொழிகள் குறித்து சிந்தித்த பொழுது அக்காலத்து தனியான யாழ்ப்பாணப் பட்டினத்துக்கும் கரையோரச் சிங்களப் பகுதிகளுக்கும் பிரித்தானியா ஆளு நராக இருந்த சேர். ரெபேர்ட் பிறவுணிங் அவர்கள் காலனித்துவச் செயலாளருக்கு அனுப்பிய நெறிப்படுத்தல் கடிதத்தில் “ தமிழ்மொழி போத்துக்கேயத்துடன் கலந்து எல்லா மாகாணங் களிலும் வழக்கில் உள்ளது.
புத்தளத்தில் இருந்து மட்டக்களப்பு அடங்கலாக வடக்கு முழுதும் தாய்மொழியாக உள்ளது. எனவே நான் தமிழ் மொழியையும் சிங்களத்துடன் சமமாகப் பயன் படுத்தம்படி ஆணைப்படுத்துவதை உங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகின்றேன். இதனை நீங்கள் எதிர்க்கமாட்டீர்கள் என எண்ணு கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தமை தமிழும் சிங்களமும் இலங்கைத் தீவு முழுவதும் மக்களின் வழக்கு மொழியாக இருந்தமைக்கான வரலாற்றுச் சான்றாக உள்ளது.
கடைசி நாலு அரசர்களையும் தமிழர் களாகவே கொண்டிருந்த கண்டி சிங்கள அரசை 1815இல் பிரித்தானிய காலனித்துவ அரசு கைப் பற்றியதன் பின்னர் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் வன்னித் தமிழரசின் கடைசி மன்னனான பண்டார வன்னியன் 31.10. 1832 இல் கற்சிலை மடுவில் உயிரிழந்த பின்னரே 1833இல் பிரித்தானியரால் தாம் விரும்பியவாறு தங்களின் சந்தை மற்றும் இராணுவ நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதுவரை இலங்கைத் தீவின் வரலாற்றில் என்றுமே இருந்திராத “சிலோன்” என்னும் செயற்கையான ஒற்றையாட்சி கொண்ட அரசு ஒன்றையும் செயற் கையான தேசியமான “சிலோனிஸ்” தேசியம் ஒன்றையும் பிரித்தானிய காலனித்துவ அரசால் தமிழ் சிங்கள மக்களின் விருப்பின்றி உருவாக்க முடிந்தது என்பதும் இலங்கை தீவின் வரலாறாக உள்ளது.
1833இல் பிரித்தானிய காலனித்துவ அரசாங் கம் கோல்புறூக் கமரோன் அரசியல் சீர்திருத்ததின் மூலம் பிரித்தானியர்களின் இலங்கைகான சட்டசபைக்கு சட்டவாக்கத்தில் நிர்வாகத்தில் பரிந்து ரைகள் வழங்குவதற்கு இலங்கையர்களை தாம் நியமனம் செய்து உள்நாட்டு மக்களை ஆட்சிப் படுத்தலை இலகுவாக்க முனைந்த பொழுது தமிழர்களின் தேச இனத்தன்மையையும் ( Tamil Nation), சிங்களவர்களின் தேச இனத்தன்மையையும் (Sinhala Nation) சமத்துவப்படுத்தி இரு தேச இனங்க ளில் இருந்தும் ஒவ்வொரு உறுப்பினர்களை நியமித்தமையும் வரலாறு.
கோல்புறூக் கமரோன் அரசியலமைப்பு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொழுது ஆறுமுகநாவலர்க்கு 11வயது. அடுத்த ஆண்டில் 1834இல் இவருடைய தந்தையார் பல கிறிஸ்தவ நாட்டுக் கூத்துக்களை தமிழ்ப்படுத்திய வகையில் கிறிஸ்தவர்களிடை பெற்ற மதிப்பின் பின்னணியில் பீற்றர் பார்சிவல் பாதிரியாரின் யாழ் வெல்சியன் மிசன் கல்லூரிக்கு (பின்னர் யாழ் மத்திய கல்லூரியாகியது) ஆங்கிலம் கற்கச் சென்று ஆங்கிலத்திலும் கிறிஸ்தவத்திலும் பழக்கப்படுகின்றார். 19 வயதில் தமிழ் ஆங்கில ஆசிரியராக மட்டுமல்லாது பீற்றர் பார்சிவல் பாதிரியாரின் தமிழ்ப் பண்டிதராகவும் பரிணாம டைந்து பைபிளின் தமிழ்மொழியாக்கக் குழுவி லும் பங்கேற்கின்றார்.
ஆயினும் 24 வயதில் அம்பலவாண முதலியாருடன் சென்னை சென்று அங்குள்ள பள்ளிகளைப் பார்வையிட்டதன் பின்னர் 1847டிசம்பர் 31ம் நாள் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் கிறிஸ்தவ மதத்தை எதிர்த்து முதன்முதலாகச் சைவப்பிரசங்கம் தொடங்கு கின்றார். இந்த கிறிஸ்தவ மத எதிர்ப்பை சைவப் பண்பாட்டு மீட்பாக முன்னெடுக்கத் தொடங்கிய ஆறுமுகநாவலர் 1879 மே மாதம் 22ம் திகதி பிரித்தானிய சட்டசபைப் பிரதி நிதியாக 1833 முதல் 1879 வரை இருந்த சேர். முத்துக்கமாரசுவாமி அவர்களின் இடத்துக்கு அவரின் உறவினரான சேர். பொன்னம்பலம் இராமநாதனை நியமிக்க வேண்டுமென மக்கள் மத்தியில் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் உரையாற்றிய பொழுது “தமிழரைத் தமிழர் அல்லாதவர் ஆளக்கூடாது” என்ற ஈழத்தமிழர் தேசியத்தன்மையை வெளிப் படுத்தினார். இதனாலேயே பேராசிரியரி கைலாசபதி அவர்கள் தனது பொதுவுடைமை நிலைப் பாட்டையும் கடந்து ஆறுமுகநாவலரைத் தமிழ்த் தேசியத்தின் தந்தையென வரைவுசெய்தார். இதனால் “பண்பாட்டு மீட்டுணர்வு” மூலம் பிரித்தானிய காலனித்துவத்துக்கு எதிரான விடுதலையை முன்னெடுக்கும் வழமை ஈழத்து அரசியலில் ஆரம்பமாகியது. இது சைவ வேளாள மேலாண்மை ஈழத்தமிழர் அரசியலில் வழக்கமாகவும் வழிசெய்தது.
ஆயினும் நாவலர் இந்து என்ற நிலையில் என்றுமே ஈழத்தமிழரை அடையாளப்படுத்தாது சைவர் என்ற நிலையிலேயே தனது பண்பாட்டு மீட்டு ணர்வை முன்னெடுத்தார். சைவசமயத்தைத் தமிழ்ச்சமயம் என்று அழைக்க வேண்டாம். சைவக்கோயில்களைத் தமிழ்க்கோயில்கள் என அழைக் காதீர்கள். சைவம் ஒரு மதம். தமிழ் ஒரு மொழி. சைவரல்லாதவர்களும் தமிழர்களாக உள்ளனர் என்ற தெளிவான வரையறைகளை நாவலர் தனது தேசியத்தை பண்பாட்டு மீட்டுணர்வால் கட்டமைத்த பொழுது ஏற்படுத்தினார். ஆனால் அநகாரிக்க தர்மபாலர் பௌத்தமும் சிங்களமும் சிங்கள தேசியத்தின் தன்மையெனச் சிங்கள பௌத்த பேரினவாதத்தை உருவாக்கியமையே இன்றுவரை இலங்கைத் தீவு சமுக பொருளாதார அரசியல் ஆன்மிகத் தளங்களில் சிங்கள இனவெறி மொழிவெறி தன்மையினை வெளிப்படுத்தி முழு இலங்கைத் தீவையும் அமைதியற்ற பொருளாதார வளர்ச்சியற்ற ஈழத்தமிழின அழிப்பால் ஈழத்தமிழர்களின் நிலத்தை வளத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சித்தளமாக மாற்றியுள்ளது.
பிரித்தானிய காலனித்துவ அரசால் உரு வாக்கப்பட்ட இந்தப் போக்குகளையும் அதன் விளைவுகளையும் இன்றைய சிறிலங்காவின் அரசத்தலைவர் அநுர குமர திசநாயக்கா உண்மையடனும் நேர்மையுடனும் உணர்ந்து இருதேச மக்களின் இறைமைகளும் சமமானதும் இலங்கையின் எல்லாக் குடிகளும் சமமான அரசியல் உரிமைகளை அனுபவிப்பது உறுதியானதுமான அரசியல் அமைப்பு மாற்றங்களை கொண்டுவந்து அனைவருக்குமான பாதுகாப்புடன் கூடிய அமைதியையும் வளரச்சிகளையும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உறுதியான செயற்பாட்டுடன் முன்னெடுக்க இந்த வரலாற்று மீள்வாசிப்பு உதவ வேண்டும். இதற்கு எந்த சோல்பரி அரசியல் அமைப்பு 1945 ஏப்ரலில் இன்றைய சிக்கல்களைதத் தோற்றுவித்ததோ அந்த சோல்பரி அரசியல் அமைப்பு அறிமுகம் செய்த சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையில் இருந்து வெளிவந்து சிறுபான்மை பெரும்பான்மை என்கின்ற பிரித்தானியக் காலனித்துவம் ஏற்படுத்திய வடிவங்களை விடுத்து இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகமும் மற்றைய பகுதிகளில் சிங்களவர்களின் வரலாற்றுத் தாயகமும் உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில் இருதேச மக்களதும் இறைமைகளைச் சமமாக மதித்து இலங்கையில் வர்த்தகத்தால் குடிகளாகவும் தொழில் பங்களிப்பால் குடிகளாகவும் உள்ள முஸ்லீம் மக்கள் மலையகத் தமிழ் மக்கள் அனைவரதும் அரசியல் உரிமைகளையும் உறுதி செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்கினாலேயே பாதுகாப்புடன் கூடிய அமைதி வாழ்வும் வளர்ச்சிகளும் இலங்கைத் தீவில் அனைத்து மக்களுக்கும் நடைமுறைச்சாத்தியமாகி நாட்டின் வங்குரோத்து நிலையும் மக்களின் வறுமையும் அறியாமையும் நீங்கும்.