சொந்த இராணுவத்தினராலையே  படுகொலை செய்யப்படும் மியான்மரிகள்- ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை

‘இராணுவம் மக்களைப் பாதுகாக்கும் என்றும் ஜனநாயகத்திற்காக பாடுபடும்’ என்றும் ஜெனெரல் மின் ஆங் ஹேலிங் கூறிய மறுநாளே, மியான்மரில் ஜனநாயகம் கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில்  இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  114 பேர்  பலியாகியுள்ளனர்.

தேர்தலில்  முறைகேடு நடந்ததாக குற்றம் சுமத்தி ஆங் சான் சூச்சி  உள்ளிட்ட தலைவர்களை கைது செய்த இராணுவம்  தன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடக்க அந்நாட்டு  இராணுவம் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது. 300-க்கும் மேற்பட்ட  நாட்டு குடிமக்களை சுட்டுக் கொன்றுள்ளது.

இந்தநிலையில் நேற்று யாங்கூன் உட்பட முக்கிய நகரங்களில் மக்கள் இராணுவத்திற்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தினர். மேலும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தை நசுக்குவதற்காக இராணுவமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 114 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில்,இராணுவ தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தற்போது  மியான்மர் நாட்டில் இராணுவத்தின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கும் சிஆர்பிஹெச் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.