செம்மணி மனித புதைக்குழிக்கு நீதிக் கோரி கனேடிய தமிழர் பேரவை இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும், அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும் கனேடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அத்துடன் செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி இடம்பெறும் ‘அணையா தீபம்’ போராட்டத்திற்கும் கனேடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடபகுதியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் சமீபத்தில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையுடனும் கவலையுடனும் இந்த கடிதத்தை எழுதுகின்றோம் என்று அந்த அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் உட்பட பலரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் சமூகத்தினை மீண்டும் உலுக்கியுள்ளது.  “இது தனிப்பட்ட ஒரு சம்பவம் இல்லை. மாறாக பல தசாப்த காலமாக காணாமல் போதல், அரச பயங்கரவாதம், பதில்கள் இன்றி பொறுப்புக்கூறல் இன்றி தமிழ் குடும்பங்கள் அனுபவித்து வரும் துயரங்கள் ஏற்றுக்கொள்ளப்படாமை ஆகியவற்றின் துயரம் மிகுந்த பாரம்பரியமாகும்’ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 வருடங்களாக செம்மணி தமிழ் சமூகத்தின் கூட்டு மனப்பான்மையை கடுமையாக பாதித்து வந்துள்ளது. இந்த பகுதி நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள், படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுகள், இரகசியமாக உடல்கள் புதைக்கப்படுதல் ஆகியவற்றுடன் நீண்டகாலமாக தொடர்புபட்ட பகுதியாகும்.
அதன் மோசமான தன்மை குறித்து தெரிந்திருந்தாலும் சிறிய பகுதியே தோண்டப்பட்டுள்ளது.
மேலும் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் உரிய காரணங்கள் தெரிவிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டன என்று கனேடிய தமிழர் பேரவை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மன்னார், கொக்குதொடுவாய், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் முழுமையாக தோண்டப்படாததும், தெளிவற்ற விசாரணைகளும், தமிழ் மக்களின் நம்பிக்கைகளை மோசமாக பாதித்துள்ளன.
நீதியை உறுதி செய்வதற்காக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இந்த சமீபத்தைய கண்டுபிடிப்பு உண்மைக்கான மற்றுமொரு வாய்ப்பு தவறவிடப்படுதலாக அமையும் என்று கனேடிய தமிழர் பேரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.