சுவிற்சலாந்திலும் கொரோனா வைரஸ்? நிலைமைகளை எதிர்கொள்ள முழுவீச்சில் நடவடிக்கை

சுவிற்சலாந்து நாட்டில் சூரிச் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தில் நெருக்கடி மேலாண்மை பிரிவின் தலைவர் பற்றிக் மாத்தீஸ் தெரிவித்துள்ளார்.

ஆசிய சுற்றுலாப் பயணிகளின் அதிகமாக வருவகையால் இந்த தொற்றுநோய் இங்கும் பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார்.

ஆசியாவிலிருந்து சுவிற்சலாந்திற்கு குழுச் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்யும் முகவர்களுடன் தாங்கள் தொடர்பு கொண்டுள்ளதாகவும், ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நூறுவீத தடுப்பு நடவடிக்கையென்பது சாத்தியமற்றது எனவும் மோசமான சூழ்நிலைக்கு சுவிட்சலாந்து நன்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட நோயாளர்களை அனுமதிக்கக்கூடிய பெரிய மருத்துவமனைகள் தங்களிடம் உள்ளன எனவும் மாத்திஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள சுவிட்சலாந்து நன்கு தயாராக இருப்பதாகவும், இந்த தொற்று நோயைத் தடுக்கும் சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் சுவிஸ் உள்துறை அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் சீனாவின் எல்லைகளைக் கடந்தும் விரைவாகப் பரவிவருகிறது, இது உலகளாவிய நோய்த் தொற்று பற்றிய கவலையை எழுப்பியுள்ளது . உலகளவில் இப்போது 2,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், சீனாவில் 56 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர்.