சுதந்திர தின கொண்டாட்டம் – செலவு 200 மில்லியன் ரூபா 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் வருகை

இலங்கையின் சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்வுகள் காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

சுதந்திர தின விழாவிற்கு 3100இற்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான செலவு 200 மில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 75ஆவது சுதந்திர தினத்தை புறக்கணிப்பதாக கத்தோலிக்க திருச்சபை நேற்று  அறிவித்தது.

நாட்டின் அனைத்துத் துறைகளும் சீர்குலைந்துள்ள நிலையில், அதிக பணத்தை செலவு செய்து சுதந்திர தினத்தை கொண்டாடுவது வேடிக்கையான விடயம் என வைத்திய தொழில்சார் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பசிக்கு உணவும் நோய்க்கு மருந்தும் இல்லாத சூழ்நிலையில், அதிக பண செலவில் இவ்வாறான விழாவொன்றை நடத்துவதா என்பதனை தீர்மானிப்பதற்கு பொது அறிவு மாத்திரம் போதுமானது என குறித்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் குறித்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.