சீன பாதுகாப்பு அமைச்சர் வருகையும் மேற்கு நாடுகளின் காய் நகர்த்தலும் – அகிலன்

சீன பாதுகாப்புத்துறை  அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கே கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை ஆரம்பித்த போது, கொழும்பு அரசியலில் முக்கியமான ஒரு நகர்வு அன்று பகல் இடம்பெற்றது. கொழும்பிலுள்ள மேற்கு நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து, முக்கியமான பேச்சுக்களை நடத்தினார். சீனாவின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் கொழும்புவரும் நிலையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு தற்செயலானதாக இருக்க முடியாது என்பதே இராஜதந்திரிகளின் கருத்து. இதன்மூலம் முக்கியமான ஒரு செய்தியை மேற்கு நாடுகள் சொல்லி யிருப்பதாகவே தெரிகின்றது.

கொழும்புத் துறைமுக விவகாரம் அண்மைக்காலத்தில் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சீனாவின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த நவீன நகரை நிர்வகிப்பதற்கான பொறுப்பு கொழும்புத் துதறைமுக நகர ஆணைக் குழு என்ற ஒரு அமைப்பிடம் கையளிக்கப்படவுள்ளது. அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆணைக்குழு சீனர்களையே கொண்டிருக்கும் என்பதுடன், அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் – துறைமுக நகர் தனியான ஒரு நாட்டுக்குரிய அந்தஸ்த்துடன் செயற்பட முடியும் எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

ஒருவாரகாலமாக இந்தப் பிரச்சினை இலங்கை அரசியலை ஆட்டிப்படைத்துவரும் நிலையில்தான் சீனப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வந்தார். இந்த வருகை சர்ச்சைக்குரியதாக நோக்கப்பட்ட நிலையில்தான் சஜித் பிரேமதாச மேற்கு நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்தார். பல ஆயிரம் கோடி ரூபா செலவில் துறைமுக நகரத்தை கட்டியெழுப்பியிருக்கும் சீனா, இலங்கையோ அல்லது மற்றொரு நாடோ அதன் பலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், இதனை முறியடிப்பது எப்படி என்பதுதான் மேற்கு நாடுகளையும், இந்தியாவையும் இன்று குழப்பும் கேள்வி.

02 சீன பாதுகாப்பு அமைச்சர் வருகையும் மேற்கு நாடுகளின் காய் நகர்த்தலும் - அகிலன்

மேற்கு நாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பின்போது, கோட்டாபய ஆட்சியில் இடம்பெறும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் குறித்து சஜித் பிரேமதாச கூறியிருக்கின்றார். “மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு மிக மோசமான அடக்குமுறை ஆட்சியொன்றை முன்னெடுக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்துக்கு சவாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமையைப் பறிக்கும் அளவுக்கு அரச அடக்குமுறை கையாளப்படுகிறது” என சஜித் பிரேமதாச இதன் போது தூதுவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தார். கொரோனா விவகாரம் முதல், கொழும்புத் துறைமுக நகரம் வரையிலான பல விடயங்கள் இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டிருக்கின்றன.

சீனாவுடன் இலங்கை அதிகளவுக்கு நெருங்கிச் செல்லும் நிலையில், ஆட்சி மாற்றம் ஒன்றை நோக்கி மேற்கு நாடுகள் காய்நகர்த்துவதான கருத்து ஒன்றுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவிலேயே இதற்கான முயற்சியை மேற்கு நாடுகள் ஆரம்பித்து விட்டன. கொழும்புத் துறைமுக நகர் குறித்த சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற கட்டத்துக்கு மேற்கு நாடுகள் வந்துவிட்டன. அதன் ஒரு பகுதியாகவே எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு கருதப்படுகின்றது.

இந்தச் சந்திப்பு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு அங்கீகாரமாகவே கருதப்படுகின்றது. இரண்டு கட்டங்களாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. காலையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வரும் நாடுகளின் தூதுவர்கள் சஜித்தை சந்தித்தார்கள். மாலையில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற மேற்கு நாடுகளின் தூதுவர்கள் சஜித்தை சந்தித்தார்கள். இவ்வாறு மேற்கு நாடுகள் அனைத்தினதும் தூதுவர்கள் ஒரேயடியாக இலங்கைத் தலைவர் ஒருவரைச் சந்தித்திருப்பது இது முதல்முறையாக இருக்கலாம். இதன்மூலம் சஜித் பிரேமதாசவுக்கு இந்த நாடுகள் ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளன.

இதிலுள்ள இரண்டாவது முக்கிய அம்சம் என்னவென்றால், அவசர அவசரமாக இவ்வாறான ஒரு சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்திருக்க முடியாது. அனைத்துத் தூதுவர்களையும் இவ்வாறு திடீரென ஒன்றிணைப்பது இலகுவானதல்ல. அதனால், இதற்கான முதலாவது நகர்வு மேற்கு நாடுகளின் பக்கத்திலிருந்தே வந்திருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப் படுகின்றது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கு நாடுகள் சிலவற்றின் இராஜதந்திரிகள்தான் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்றே கருதப்படுகின்றது.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் இரவு வரவிருந்த நிலையில் – பகலில் இடம்பெற்ற இந்தச் சந்திப்புக்களின் மூலம் தெளிவான சில செய்திகள் கோட்டாபய ராஜபக்‌ச அரசுக்குச் சொல்லப்பட்டிருப்பதாகவே இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. அதில் முக்கியமானது சஜித் பிரேமதாசவுக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம்.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியையும், அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் முன்னிலைப்படுத்தியே மேற்கு நாடுகள் இலங்கை தொடர்பில் தமது நகர்வுகளை மேற்கொண்டன. 2015 இல் கூட இவ்வாறான ஒரு நிலைதான் இருந்தது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவார் என்பது உறுதியற்றதாக இருந்தமையால், மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், மேற்கு நாடுகளின் செல்லப்பிள்ளை ரணில்தான் என்ற ஒரு கருத்து தொடர்ந்தும் இருந்தது. இப்போது, சஜித் பிரேமதாசவில் தமக்குள்ள நம்பிக்கையை மேற்கு நாடுகள் இந்தச் சந்திப்பின் மூலமாகப் புலப்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது.

சஜித் பிரேமதாச நீண்டகாலமாக அரசியலில் இருந்தாலும், சர்வதேச உறவுகளை வளர்த்துக் கொள்வதில் அதிகளவுக்கு அக்கறை காட்டவில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்காமலும் இருந்திருக்கலாம். இப்போது ரணிலின் வீழ்ச்சிக்குப் பின்னர் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ள வேண்டிய தேவை சஜித்துக்கும் ஏற்பட்டது. மேற்கு நாடுகளுக்கும் ரணிலுக்கு மாற்றான ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருந்தது. இந்தப் பின்னணியில் சஜித் பிரேமதாசவை மேற்கு நாடுகள் அடையாளம் கண்டுள்ளன. இந்த வகையில் சஜித்தை முன்னிலைப்படுத்தி முக்கியமான காய் நகர்த்தல் ஒன்றை மேற்கு நாடுகள் செய்வதற்குத் தயாராகின்றன என்றே கொழும்பில் அவதானிகள் கருதுகின்றார்கள்.

சீனாவுடன் மேலும் நெருங்கிச் செல்லும் கோட்டாபய அரசுக்கு தெளிவான செய்திகள் சிலவற்றை இந்தச் சந்திப்பு கொடுத்திருக்கின்றது. எதிர்காலத்தில் இடம்பெறப் போகும் நகர்வுகளுக்கான ஒரு முன்னறிவிப்பாகவும் இந்தச் சந்திப்பைக் கருதமுடியும். இந்த நிலையில், கோட்டாபய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சீனாவின் பொறியிலிருந்து வெளிவரக்கூடிய நிலையில் அது இல்லை. கோட்டாபய அரசைப் பாதுகாப்பதற்கான நகர்வுகளை சீனா முன்னெடுக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். இது இலங்கையில் வல்லரசுகளின் போட்டிக்களம் ஒன்றை உருவாக்குவதாக அமையலாம்.

ஆனால், 2015 இல் மேற்கொண்டதைப்போல மற்றொரு ஆட்சிமாற்றம் சாத்தியமானதா என்ற கேள்வியும் உள்ளது.