சீனாவுடன் இராணுவக் கூட்டணி சாத்தியமே – ரஷ்ய அதிபர்

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகள் பதற்றமாக இருக்கும் இவ்வேளையில் சீனாவும் ரஷ்யாவும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன.

அணு ஆயுதங்களை வைத்திருப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தம் அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேசி வருகின்றன. இதேவேளை பல நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை கொள்கை நிபுணர்களுடன் வீடியோ ஒன்றுகூடல் முறையில் ரஷ்ய அதிபர் புடின் கலந்துரையாடினார். அப்போது அவர், “சீனா மற்றும் ரஷ்யா இடையே இராணுவ ரீதியிலான உறவு உள்ளது. சீன இராணுவத்தின் வலிமையை அதிகரிக்க அது உதவியுள்ளது. அதே நேரத்தில், சீனாவுடன் இராணுவக் கூட்டணி வைப்பதற்கு தற்போது அவசியமில்லை. ஆனால் எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை நீடிக்க விரும்புகிறோம். ஆனால் அதில் இறுதி முடிவை அமெரிக்கா தான் எடுக்க வேண்டும். சீனாவுடன் இராணுவக் கூட்டணி அமைப்பது, தற்போதைக்கு அவசியமில்லை. ஆனால் எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம்.” என்று கூறினார்.

ரஷ்ய அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.