சீனாவுடனான நட்புறவைத் தொடர்ந்தும் வளர்ப்பதிலேயே தனது அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது என்றும், இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா அளித்து வருகின்ற உறுதியானதும், நீண்டகால அடிப்படையிலானதுமான ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமும் சீனாவின் ஹார்பர் என்ஜினியரிங் கொழும்பு போர்ட்சிட்டி கம்பனியும் இணைந்து நிர்மாணித்துவரும் கொழும்பு துறைமுக நகரத்திற்கு சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட வேளையில் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவிற்கு நேர்காணலொன்றை வழங்கிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்திட்டத்திற்காக கடலிலிருந்து நிறப்பப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பு கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாக அன்றையதினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதையொட்டிய நிகழ்விற்காக அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த பிரதமருடன் கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் சியூயுவானும் ஏனைய அரசாங்க அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
‘சீனாவும், இலங்கையும் பலம் பொருந்திய நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்றன. இந்த நட்புறவு நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பிற்கு வலிமை வாய்ந்த அத்திவாரத்தை அமைத்திருக்கிறது. இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா வழங்கிவருகின்ற நீண்டகால ஆதரவையும், ஒத்துழைப்பையும் அரசாங்கம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. மண்டலமும், பாதையும் செயற்திட்டத்திலான இலங்கையின் பங்கேற்பு ஒரு கடன்பொறிக்குச் சமனானது என்று மேற்குலகின் சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. சீனாவின் ஜனாதிபதி சி ஜின் பிங்கின் பேரார்வம் மிக்க அந்த செயற்திட்டத்தில் இலங்கையின் பங்கேற்பை அவ்வாறு ஒரு கடன்பொறியாக நான் நினைக்கவில்லை.
‘அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்காகவும், ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பெறப்பட்ட கடன்களை இலங்கையினால் தெளிவாக மீளச்செலுத்த முடியும் என்று நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கிறது. ஆனால் நாம் அதை மீளக்கட்டியெழுப்பும் போது கடனை மீளச்செலுத்துவது ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதில்லை.
‘அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கை தொடர்பாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்தை ஊடகங்கள் சர்ச்சைக்குரியதாகப் பரபரப்பாக்கியிருக்கின்றன. உண்மையில் அவர் சீனாவுடனான அந்த உடன்படிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த பின்புலத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் ஊடகங்கள் அதுகுறித்து செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த உடன்படிக்கையினால் இலங்கையின் சுயாதிபத்தியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஜனாதிபதி அதனைக் கூறவில்லை. முன்றைய அரசாங்கத்தைப் போலன்றி எமது அரசு பொதுச்சொத்துக்களை தனியார் மயமாக்குவதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது என்ற அர்த்தத்திலேயே அவர் அவ்வாறு கூறினார்.
‘இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் நெருக்கமான நட்பு நாடுகள் என்ற வகையில் அவற்றை எமக்குள்ளேயே பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்.
இலங்கையில் ஒரு புதிய வர்த்தக மையமாக கொழும்புத் துறைமுக நகரம் தோன்றுவதை உறுதி செய்வதற்கு அந்தத் திட்டத்தை நிர்மாணிக்கும் சீனாவின் பணிகளுக்கு எனது அரசாங்கம் உறுதியான ஆதரவை வழங்கும். கொழும்பு துறைமுக நகரத்தின் முன்னுரிமைக் கொள்கைகளை அரசாங்க மட்டத்தில் துரிதப்படுத்தும் பணிகளை 2020 ஜனவரியிலிருந்து முன்னெடுக்கப்போவதாகவும் பிரதமர் ராஜபக்ஷ நேர்காணலில் தெரிவித்துள்ளார்.