Tamil News
Home உலகச் செய்திகள் சீனாவின் அழுத்தத்தால் மூடப்பட்ட Apple Daily பத்திரிகை நிறுவனம்

சீனாவின் அழுத்தத்தால் மூடப்பட்ட Apple Daily பத்திரிகை நிறுவனம்

“மழையில் கண்ணீரோடு பிரியாவிடை கொடுத்த ஹாங்காங் மக்கள்” என்கிற தலைப்பில் Apple Daily பத்திரிகை தன் வாசகர்களுக்கு நன்றி கூறியுள்ளது.

ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை பிரசுரிக்கும் பத்திரிகையான Apple Daily  பத்திரிகையின் கடைசி பதிப்பை படமெடுக்க ஆயிரக்கணக்கானோர் ஹொங்கொங் நகரில் குவிந்தனர். இந்த பத்திரிகை 26 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சேவையை நேற்று நிறுத்திக் கொண்டது. இதன் கடைசி பிரதிகள் நேற்று வெளியான நிலையில், அவற்றின் எண்ணிக்கை 10 இலட்சத்தைக் கடந்துள்ளது.

சீன அரசுக்கு எதிராக வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்து கட்டுரைகளை வெளியிட்டு வருவதாக கூறி Apple Daily-யின் ஐந்து ஆசிரியர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹொங்கொங் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த பத்திரிகையின்  சொத்துக்களும் முடக்கப்பட்டன. இதையடுத்து செய்தித்தாள் அச்சிடுவதை நிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்தது.

 Apple Daily நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ‘சீன கம்யூனிஸ்ட் அரசின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பார்த்து அஞ்ச மாட்டோம்.எனினும் நாளிதழ் வெளியிடுவதை ஜூன் 24 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளோம். இணைய சேவையில் செய்தித்தாளை தினமும் படிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அழுத்தத்தினால் மூடப்படும் இந்தப் பத்திரிகை, ஹொங்கொங்கின் பத்திரிகை சுதந்திரத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version