சிவராமின் வெற்றிடம், எவராலும் இன்னும் நிரப்பப்படவில்லை-பா.அரியநேத்திரன்

195 Views

வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளரும், பிரபல சமூக சேவையாளரும், இலக்கியவாதியுமான தராகி என்று அழைக்கப்பட்ட டி.சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவு  நாள் மட்டக்களப்பில்  நினைவு கூரப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்  இன்று இந் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும்,மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தகாலத்தில் இரண்டு நிருவாக கட்டமைப்புக்கள் இருந்தன.  வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி,அரசாங்கத்தின் கட்டுப் பாட்டு பகுதி என இரண்டு பகுதிகள் காணப்பட்டது.

அப்போது தமிழர் தேசமெங்கும், தமிழ்மக்களுக்கு எதிராகவும் பல்வேறு இன்னல்கள் இடம்பெற்றது. இவ்வாறான உண்மையான சம்பவங்களை துணிச்சலுடன், உண்மையாக எழுதி தமிழ்மக்களின் ஏகோபித்த பிரச்சனைகளை உலகறியச் செய்தவர்.

IMG 20210429 WA0052 சிவராமின் வெற்றிடம், எவராலும் இன்னும் நிரப்பப்படவில்லை-பா.அரியநேத்திரன்

இவர் தமிழ்மொழியில் மாத்திரமன்றி ஆங்கில மொழிகளில் பல்வேறு உள்நாட்டு,வெளிநாட்டு பத்திரிகைகளில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை துப்புத்துலக்கி எழுதிவந்துள்ளார்.

இவ்வாறு தமிழ் சமூகத்தின்மீது திணிக்கப்பட்ட சம்பவங்களை தொடர்ச்சியாக எழுதி கிழக்கு மாகாணத்திலும், வடக்கு கிழக்கில் புகழ்பூத்த ஊடகவியலாளராகவும் செயற்பட்டதுடன் மட்டக்களப்பில் பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு இருக்கின்றது.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சரியாக 2005ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் உணவு விடுதியில் கடத்தப்பட்டு மறுநாளான இன்றையதினம் 29 திகதி காலை படுகொலை செய்யப்பட்டநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சிவராம் உட்பட இந்தநாட்டில் 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இன்று சிவராம் படுகொலை செய்யப்பட்டு 16ஆவது ஆண்டில் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். இதுவரையும் இந்தநாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான விசாரணையோ அல்லது நீதியோ கிடைக்காமல் அஞ்சலி செலுத்துகின்றோம்.

இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழர்களின் பிரச்சனை நாட்டுக்கு மட்டுமல்ல உலகிற்கே தெரிந்தவிடயமாகும்.  இவ்வாறு உலகறியச் செய்த புகழ்பூத்த ஊடகவியலாளர் சிவராமின் இடத்திற்கு இதுவரையும் எந்தவொரு ஊடகவியலாளரும் உருவாகவில்லை, உருவாக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. தற்போதும் சிவராமின் வெற்றிடம் ஊடகவியளர்களால் நிரப்பப்படவில்லை” என்றார்.

Leave a Reply