கிழக்கில் தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் – கலையரசன்

சில முஸ்லிம் தலைவர்களால் முஸ்லிம் மக்கள் மேலும் அடிவாங்கும் நிலையிலேயே உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து பயணிக்க வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என்று செயற்படுகிறார்கள்.

இது இந்த பேரினவாத அரசு தற்காலத்தில் கையாளுகின்ற பிரித்தாளும் விடயங்களுக்குத் தீணி போடுகின்றதாகவே இருக்கின்றது. மேலும் முஸ்லிம் சமூகம் இன்னும் இன்னும் பல அடிகளை வாங்கக்கூடிய வகையிலேயே முஸ்லிம் அரசியலாளர்களின் செயற்பாடு அமைகின்றது.

வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது. ஆனால் சிறுபான்மைச் சமூகமாக இருக்கின்ற முஸ்லிம் அரசியலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களுடைய பூர்வீக பிரதேசங்களை கபளீகரம் செய்கின்ற விடயம் நீண்டகாலமாக அரங்கேறி வருகிறது. அந்த முன்னெடுப்பின் அங்கமாகவே கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் குறைப்பு விடயத்தினைப் பார்க்கின்றேன்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கடந்த 33 வருடங்களாக தனியான செயலகம் போன்று இயங்கி வருகிறது. அவ்வாறான வேளையில் முஸ்லிம் அரசியலாளர்கள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக தமிழர் பிரதேசங்களை கூறுபோட்டு கபளீகரம் செய்ய முற்படுகின்றனர். நிச்சயமாக இவ்வாறான செயற்பாடுகள் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலே தமிழ் – முஸ்லிம் உறவில் பாரிய ஒரு விரிசலை ஏற்படுத்தும்” என்றார்.