இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் – இந்திய பிரதமர் கருத்து

455 Views

இலங்கை தமிழர்கள் மீது என் அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஒரே இந்தியப் பிரதமர் நான்தான்.”என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நரேந்திரமோடி அங்கு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். தமிழர்கள் உரிமை தொடர்பில் நாங்கள் சிறீலங்கா அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் சமத்துவம் நீதி அமைதி கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தமிழ்சகோதரர்கள் சகோதரிகளின் நலன்கள் அபிலாசைகளை இந்திய அரசாங்கம் என்றும் கருத்தில் எடுத்துள்ளது என தெரிவித்துள்ள இந்திய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஒரேயொரு இந்திய பிரதமர் என்ற பெருமை தனக்குள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்காவில் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் நாங்கள் இலங்கை தமிழர்களின் நலன்களை உறுதி செய்துவருகின்றோம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களை விட எங்கள் அரசாஙகம் அதிக வளங்களை வழங்கியுள்ளது,வடகிழக்கில் இடம்பெயர்ந்தவர்களிற்கு 50.000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம்,மலையகத்தில் 40,000 வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் உரிமை குறித்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர்மீனவர்களின் உரிமையுடன் கூடிய நலன்களை மத்திய அரசாங்கம் எப்போதும் பாதுகாக்கும் என தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் அவர்கள் கைது செய்யப்ட்டபோதெல்லாம் அவர்கள் கூடிய விரைவில் விடுதலை செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனது பதவிக்காலத்தில் 16,000 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்திய மீனவர்கள் எவரும்இலங்கை சிறையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இலங்கையில் உள்ள மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply