சிறீலங்காவின் யாழ் நூலக எரிப்பு நாள்: உலக பண்பாட்டு இனஅழிப்பின் நாள் – சூ.யோ. பற்றிமாகரன்

273 Views

நாற்பது ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உலகு நீதி வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் நாள்:

1931ஆம் ஆண்டு காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கைக்குப் பொறுப்பாட்சியை வழங்கிய பொழுது, வாக்குரிமையைச் சரிவரப் பயன்படுத்துவதற்கு, ‘மக்களுக்கு அறிவூட்டல்’ என்னும் சனநாயகத்தை மக்கள் மயப்படுத்தும் உயர் நோக்கில் மதிப்புக்குரிய செல்லப்பா என்பவரால் 1934இல் உருவாக்கப்பட்டது யாழ்ப்பாண பொது நூலகம். இதனால் யாழ்ப்பாண நூலக எரிப்பு என்பது ஈழத் தமிழர்களின் சனநாயகப் பங்களிப்பை மாற்றுவதற்கான 50 ஆண்டுகால சிங்களத் தலைமைகளின் இனஒடுக்கல் அரசியல் செயற் திட்டத்தின் உச்சச் செயல் முறையாக, பண்பாட்டின அழிப்பாக, 01.06.1981 அன்று சிறீலங்காவால் முன்னெடுக்கப்பட்டது என்பது வரலாறு.

1959 முதல் யாழ் மாநகரசபையின் பொறுப்பில் 47 ஆண்டு காலமாகத் தெற்காசியாவில் ஈழத் தமிழின நாகரிகத்தின் அறிவு வங்கியாக, கல்விக்குப் பல வழிகளில் அளப்பரிய சேவை புரிந்து வந்த வரலாற்றுப் பெருமை யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கு உலக வரலாற்றில் உண்டு. எகிப்திய நாகரிகத்தின் அறிவு வங்கியாக விளங்கிய அலெக்சாந்திரியா நூலகம் எரிக்கப்பட்டதை எண்ணி இன்று வரை எகிப்தியர்கள் கண்ணீர் சிந்துவது போல, யாழ்ப்பாண நூலகம் சிறீலங்காவால் எரிக்கப்பட்டதை ஈழத் தமிழின நாகரிகத்தின் எரிப்பாக எண்ணி கடந்த 40 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

அதுவும் 22.05. 1972 முதல் தங்களை ஆளும் தகுதியை இழந்து படைபலம் கொண்டு தங்களின் அரசியல் பணிவைப் பெற்று வரும் சிறீலங்கா என்னும் அனைத்துலக சட்டங்களை மீறிய அரசின்,  அமைச்சர்களின் தலைமையிலான சிங்களப் படையினரால், கதவுகள் உடைக்கப்பட்டு, தளபாடங்கள் நொறுக்கப்பட்டு, நூல்கள் கிழித்து வீசப்பட்டு, 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் நள்ளிரவில் எரியூட்டப் பெற்று, யூன் மாதம் 01ஆம் திகதி அதிகாலையில் சாம்பல் மேடாக காட்சியளித்த யாழ். நூலகத்தின் கோலம் தந்த இதய வேதனையை, ஈழத்தமிழினம் என்றுமே மறக்காது.

1948ஆம் ஆண்டின் மனித உரிமைகள் சாசனத்தின் 27ஆவது பிரிவு “ஒவ்வொருவருக்கும் சுதந்திரமான முறையில், தனது சமூகத்தின் பண்பாட்டு வாழ்வில் பங்கேற்கவும், கலைகளில் மகிழவும், அறிவியலைப் பகிர்ந்து கொள்ளவும், அதன் பயன்களை அனுபவிக்கவும் உரிமை உண்டு” என மிகத்தெளிவாக வலியுறுத்துகிறது. 01.06.1981ஆம் ஆண்டின் சிறீலங்காவின் யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு என்பது மனித உரிமைகள் சாசனத்தின் 27ஆவது பிரிவுக்கு எதிராக ஈழத் தமிழினத்தின் மேல் சிறீலங்காவின் அமைச்சர்களாலேயே கட்டமைக்கப்பட்ட மனித உரிமைகளின் வன்முறையாக அமைந்து, உலகின் பண்பாட்டு இனஅழிப்பாக உலக வரலாற்றில் நிலைபெற்றுள்ளது.

இந்த பண்பாட்டு இன அழிப்பை சிறீலங்காவே செய்தது என்பதை உறதிப்படுத்தும் வகையில் சிறீலங்காவின் அன்றைய அமைச்சர்களான காமினி திசநாயக்கா, அத்துலத்முதலி, ஆகியோரே இதனைத் திட்டமிட்டு நடாத்தினர். இதனைச் சிறீலங்காவின் முன்னாள் அரச அதிபர் பிரேமதாசா 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புத்தளத்தில் உள்ள முஸ்லீம் கல்லூரியில், அத்துலத்முதலியும் காமினி திசநாயக்காவும் அரச அதிபர் பிரேமதாசாவினை பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனப் பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்திருந்த நேரத்தில், உரையாற்றுகையில் உறுதி செய்தார்.

“1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் நாட்டின் மற்றைய பகுதிகளில் இருந்தும் ஆட்களைத் திரட்டிக் கொண்டு வடக்கே சென்று வடக்கில் தேர்தலைக் குழப்பக் கூடிய செயல்களைத் திட்டமிட்ட வகையில் செய்தார்கள். அவர்களே இன்றும் குழப்பங்களைச் செய்கிறார்கள். நீங்கள் விலை மதிப்பற்ற யாழ்ப்பாண நூலகத்தை யார் எதிர்த்தார்களென அறிய விரும்பின் எங்களை எதிர்க்கும் இவர்களுடைய முகங்களையே நீங்கள் காண்பீர்கள்” என்பது அன்றைய சிறீலங்காவின் அரச அதிபர் ரணதுங்க பிரேமதாசா அவர்களின் யாழ்ப்பாண நூலக எரிப்புக் குறித்த பகிரங்க ஒப்புதலாக அமைந்தது.

அதே வேளை சிறீலங்காவின் மற்றொரு அமைச்சராக அன்று இருந்து, சிங்கள பௌத்த பேரின வாதத்தின் குரலாக, தமிழர்களின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவேன் எனக் கர்ச்சித்து, சிங்கள இனவெறியையே தனது அரசியல் கோட்பாடாகவே கொண்டு விளங்கிய சிறில் மத்தியூ, அவர்களுடன் காமினி திசநாயக்கா அவர்களும் யாழ்ப்பாணத்தில் அன்று தங்கியிருந்தார். இவர்களின் கூட்டுச் சதியாகவே, யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் தரையிறக்கப்பட்டிருந்த சிங்களப் படைகள், சிவில் உடையில்,  யாழ்ப்பாண பொது நூலகத்தை  எரித்தனர்.

Jaffna Public Library gutted June 1981 சிறீலங்காவின் யாழ் நூலக எரிப்பு நாள்: உலக பண்பாட்டு இனஅழிப்பின் நாள் - சூ.யோ. பற்றிமாகரன்

யாழ்ப்பாண நூலக எரிப்பு

  • தமிழரின் கல்வி வளர்ச்சியைத் தடுத்துத் தமிழரிடை வேலை வாய்ப்பின்மையையும், அறியாமையையும் உச்சப்படுத்தி அவர்களை சிறீலங்காவில் தங்கி வாழச் செய்வது
  • யாழ்ப்பாண நகரத்தில் தமிழரின் கடைகளை எரித்து, தமிழரின் சொத்துடைமையின் பாதுகாப்பு தங்களின் கையில் தங்கியுள்ளதென எச்சரித்து மக்களின் போராட்ட உணர்வை நசுக்குவது
  • அக்கால யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரான வெற்றிவேல் யோகேஸ்வரன் அவர்களின் வீட்டை எரித்து, அவரைக் கொலை செய்ய முயற்சித்ததின் வழி தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயற்பட இயலாதென உணர்த்தி சிங்களக் கட்சிகளைச் சார்ந்து வாழத் தூண்டுவது

என்ற மூன்று செய்திகளைப் பகிரங்கப்படுத்தியது. சுருக்கமாகச் சொன்னால் சிங்கள பௌத்த அடக்குமுறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தங்களின் தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளைப் பாதுகாக்க, இயல்பாகவே ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தக் கூடிய எதிர்ப்பை ஒடுக்குவதற்காக ஈழத் தமிழர்களை இனங்காணக் கூடிய அச்சத்துள் தனது படைவலிமை கொண்டு வாழவைக்கும் சிறீலங்கா அரச செயற்திட்டத்தின் அரச பயங்கரவாதச் செயலாகவே யாழ்ப்பாண நூலக எரிப்பும் நடாத்தப்பட்டது என்பதே வரலாறு வெளிப்படுத்தும் உண்மை.

அதனாலேயே சிறீலங்காவின் சிங்களத் தலைமைகள், யாழ்ப்பாணத்துள் ஊடுருவித் தாக்கும் சிங்கள பௌத்த பேரினவாத படை நடவடிக்கை ஒன்றாகவே இதனை மேற்கொண்டன.  யாழ்.துரையப்பா அரங்கத்தில் தரையிறக்கப்பட்டிருந்த சிங்களப் படையினர், தங்களை நெறிப்படுத்தி  வழிநடத்திய அமைச்சர்களுடைய கட்டளைகளுக்கும், வழிகாட்டலுக்கும் அமையவே இந்த இனஅழிப்புச் செயல்களை செய்தனர். அது மட்டுமல்ல தீயைக் கண்டு அதனை அணைக்க ஓடிய தமிழர்களை சீருடை அணிந்த பொலிசாரரே தாக்கித் தடுத்தனர். இதனைச் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றியாகவே சிங்கள பௌத்த மக்கள் முன் பரப்புரை செய்து மகிழ்ந்தனர். இதன்வழி இனங்களுக்கிடையிலான பகைமையையும், வெறுப்பையும் தூண்டிவிட்டனர். ஈழத் தமிழர்களை பகை நாடொன்றின் மக்களாகச் சிங்களவர்களால் துரத்தியடிக்கப்பட வேண்டியவர்களாக சிங்களத் தலைமைகள் சிங்கள மக்கள் முன் நிறுத்தினர்.

Jaffna public Library சிறீலங்காவின் யாழ் நூலக எரிப்பு நாள்: உலக பண்பாட்டு இனஅழிப்பின் நாள் - சூ.யோ. பற்றிமாகரன்

இதனை 1981ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார என்னும் சிறீலங்காப் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை உறுதி செய்தது.  “அவர்களுடைய தாயகம் இல்லாத இந்த நாட்டில் அவர்களுக்கு ஒதுக்கல்கள் நடைபெற்றால் ஏன் இங்கு வந்து சொல்ல வேண்டும். அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிப் போனால் ஒதுக்கல்கள் இருக்காதே. அங்குதான் உங்களுடைய கோவில்கள் உண்டு. உங்களின் கடவுள்கள் உண்டு. உங்களுடைய பண்பாடு, கல்வி, பல்கலைகழகங்கள் எல்லாமே உண்டு. அவர்களே உங்களுடைய விதியைத் தீர்மானிக்கும் உங்களுடைய எசமானர்கள். உறங்கிக் கொண்டிருக்கும் சிங்களவர்கள் விழித்தெழுந்து தமிழீழம் அமைப்பதைக் காண்பார்களானால் அமைதியாக இருக்க மாட்டார்கள். தமிழர்களுக்கு நான் கூறும் அறிவுரை உங்களின் சிங்களச் சகோதர்களைக் குழப்பி விழித்தெழ வைக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் தெரியும் சிங்கத்தைக் குழப்பினால் அது அமைதியாக இராது என” என்று பகிரங்கமாக இன வெறியுரையினை நிகழ்த்தினார்.

பாராளுமன்றத்தின் வழி  இனவெறி ஊட்டும் திட்டத்தின் வளர்ச்சியாகவே இரு ஆண்டுகளின் பின்னர் 1983ஆம் ஆண்டு ஆடி இனஅழிப்பை அதே சிறில்மத்தியூ தயாரித்துக் கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் அரச படைகளின் பாதுகாப்புடன் சிங்கள இனவெறியாளர்கள் வெற்றிகரமாக  நடாத்தி ஈழத் தமிழர்களின் தாயக எல்லைகளை சுட்டிக்காட்டி அங்கு செல்லுமாறு வடக்கு கிழக்குக்கு வெளியே இருந்த ஈழத் தமிழர்களை கொன்றழித்தும் சொத்துக்களை நாசமாக்கியும் விரட்டியடித்தனர்.

அகதிகளாக ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகங்களுக்கு வந்த வரலாற்றுக்கு ஊடாகத் தமிழீழத் தாயகம் என்னும் ஈழமக்களின் வரலாற்றுத் தாயகம் மீளவும் தனி அரசியல் அலகாக இயல்பாகவே மாறி, தங்களின் தன்னாட்சியிலேயே பாதுகாப்பான அமைதியினை ஈழமக்கள் பெறமுடியும் என்கிற எதார்த்த அரசியல் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் அவர்களின் வாழ்வின் அனுபவத்தால் தவிர்க்க முடியாத அரசியற் கோட்பாடாக உருவானது.

Public Library Jaffna சிறீலங்காவின் யாழ் நூலக எரிப்பு நாள்: உலக பண்பாட்டு இனஅழிப்பின் நாள் - சூ.யோ. பற்றிமாகரன்

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் தோன்றியதற்கான காரணிகளில் யாழ். நூலக எரிப்பும் முக்கியமான ஒன்று. ஆயினும் இன்று நாற்பது ஆண்டுகளாகியும் ஈழத்தமிழ் மக்களின் வெளியக தன்னாட்சி உரிமையினை உலகு ஏற்பதில் காட்டும் காலதாமதம் சிறீலங்காவுக்கு மேலும் மேலும் உற்சாகத்தை அளித்து வருகிறது.

கிட்லர் 2ஆவது உலகப் போரின் பொழுது ஒக்ஸ்வேர்ட் இலண்டனில் உள்ள நூலகங்கள் மேல் குண்டு வீசக் கூடாதென விடுத்த கட்டளையை நினைந்து, கிட்லர் கொடுங்கோன்மை சர்வாதிகாரத்தை விட மோசமான முறையில், தாங்கள் சிறீலங்காவின் இனத்துவச் சர்வாதிகார ஆட்சிக்குள் சிக்குண்டுள்ளதன் சான்றாகவே, ஈழத் தமிழர்களால் யாழ்ப்பாண நூலக எரிப்பு உலகின் முன்வைக்கப்படுகிறது. ஆனால் கிட்லரிசத்தை எதிர்க்கும் உலகு, யாழ்ப்பாண நூலக எரிப்பு என்னும் இனஅழிப்புக்கு உரிய நீதியை வழங்குவதில் காட்டிய – காட்டும் அலட்சியமே, ஈழத் தமிழின அழிப்புத் தினமான முள்ளிவாய்க்கால் உலகப் படுகொலை தினம் 18.05.2009 இல் வரலாற்றில் தோன்றவும், அன்று முதல் இன்று வரை அனைத்துலக சட்டங்களுக்கு மதிப்பளிக்காத மூர்க்கத் தனமான ஆட்சியாகச், சிறீலங்காவின் கொடுங் கோன்மைப் பாராளுமன்ற இராணுவ நிர்வாகச் சர்வாதிகார ஆட்சி, ஈழத் தமிழினத்தை இனஅழிப்பு செய்யவும், அனுமதிக்கிறது  என எண்ணி எண்ணி ஈழத்’தமிழர்கள் வேதனைப்படுகின்றனர்.

உலகின் இந்த அலட்சியப் போக்கை, யாழ்ப்பாண நூலக எரிப்பு என்னும் உலக பண்பாட்டு இனஅழிப்பு நாளான இன்று, உலகெங்கும் உள்ள தமிழர்கள், தாங்கள் வாழும் நாட்டின் மக்களுக்கும், அரசியல் தலைமைகளுக்கும், எடுத்துரைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் உலக அங்கீகரிப்பே சிறீலங்காவின் ஈழத் தமிழின அழிப்பை தடுப்பதற்கான ஒரே வழி, என்பதையும் இயலுமான வகைகளில் எல்லாம் எடுத்து விளக்கி, யாழ்ப்பாண நூலக எரிப்புக்கான நீதியை உலகு வழங்கச் செய்ய முயற்சிக்க உறுதி எடுத்தல் அவசியம்.

Leave a Reply