ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழு, அதாவது பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரோமேனியா தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், சுவிற்சர்லாந்து, நோர்வே தூதரகங்கள் ஆகியவை கூட்டாகச் சேர்ந்து சிறிலங்காவில் இடம்பெற்று வரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையின் முஸ்லிம் சமூகத்தை நோக்கிய அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன், இந்த நடவடிக்கைகள் சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்கு தடங்கலாக அமைந்துள்ளதாகவும் நாம் கருதுகின்றோம். தப்பான எண்ணத்தை தோற்றுவிக்கும் உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிடுகின்றமை சகியாமையை தூண்டுவதாக அமைந்துள்ளன.
பிரதமருடன் 12.06 அன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது எமது கருத்துக்களை நாம் பகிர்ந்து கொண்டோம். அச்சந்தர்ப்பத்தில் வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கு எதிராகவும் மதங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் அமைப்பை நிறுவுவதிலும் அரசாங்கம் காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை நாம் வரவேற்றோம்.
சகல சமூகங்களிடையேயும் சமாதானத்தை பேணி நிலை நிறுத்துவது தொடர்பில் அனைத்து இலங்கையர்களுடனும் நாம் பக்கபலமாக உள்ளதுடன் சமய தலைவர்கள் மற்றும் இதர சமூக தலைவர்கள் அவர்களை வழிநடத்தி, வன்முறைகளுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
அனைவருக்கும் பொதுவான சட்டத்தின் கீழ் நம்பிக்கை அல்லது இன வேறுபாடின்றி பரஸ்பர மதிப்பு, சகிப்பு மற்றும் சமமாக நடத்தல் போன்றவற்றுக்கான நாட்டின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய சகல அரசியல் தலைவர்களையும் மீள உறுதி செய்யுமாறு நாம் கூட்டாக கோரிக்கை விடுக்கின்றோம்.