சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 7-ம் திகதி கொண்டாடப்படுகிறது. காவல்துறையினரிடையே சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், குற்றங்களை எதிர்த்துப் போராட ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும் இது ஒரு சிறந்த நாளாக அமையும்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச காவல்துறை ஒத்துழைப்புத் தினத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐநாவின் 195 உறுப்பு நாடுகளில் உள்ள மக்களின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டு ,த்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை சிறிலங்காவின் காவல்துறை என்றுமே தமிழர்களுக்கு சட்டத்தின் ஆட்சிக்கோ நீதியை மதித்தோ ஒத்துழைப்பு வழங்கியதில்லை. நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் சிறிலங்கா காவல்துறையின் அணுகுமுறைகளும் வார்த்தைப் பிரயோகங்களும் மனித உரிமை மீறல்களும் மிகவும் அருவெருக்கத்தக்க வகையிலேயேருந்தது. “அடோ பண்டி”, “பறத்தெமிலு” போன்ற வாய்கூசும் வார்த்தைகளால் இனவெறியைக் கக்கி தமிழர்களைத் திட்டியது இன்றும் எமது காதுகளில் ஒலித்துக்கொண்டு தான் உள்ளது. “காக்கி” நிற சீருடைகளைக் கண்டாலே அருவருப்பான உணர்வு ஏற்படும் வகையில் தான் சிறிலங்கா காவல்துறையின் அணுகுமுறைகள் இருந்தது.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு அமைய காவல்துறையினர் நேர்மையாகவும், மரியாதையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் எப்போதும் சட்டத்தை நிலைநிறுத்தி தமது கடமையைப் பாரபட்சம் இன்றி செய்யவேண்டும் மற்றும் அவர்கள் இனம், மதம் அல்லது சாதி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களின் உரிமைகளையும் நடுநிலையாக நின்று பாதுகாக்க வேண்டும். ஆனால் சிறிலங்காவில் காவல்துறையின் செயற்பாடுகள் இனத்துவேசம் மற்றும் மதவெறி கொண்டே செயற்பட்டு வருகிறது. மனிதாபிமானமற்ற ,ழிவான நடத்தையுடனேயே சிறிலங்கா காவல்துறை இன்றுவரை இயங்கி வருகிறது.
தன்னிச்சையான கைதுகள், சித்திரவதைகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் இலங்கை காவல்துறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா காவல்துறையின் அதிகார வரம்புமீறல்களை சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் ஆவணப்படுத்திக் கொண்டு தான் ,ருக்கின்றன. வழமைபோல சிறிலங்கா அரசும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துக்கொண்டு தான் இருக்கிறது.
சிறிலங்கா காவல்துறையில் ஊழல் நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முக்கிய பிரச்சினை. முக்கியமாக வடக்கு கிழக்கில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குதல், தமிழர்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுகள் இன்றுவரை உள்ளன.
1956ம் ஆண்டு காலிமுகத்திடல் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது தமிழ் அரசியல்வாதிகளை அடித்து நொருக்கியது, 1974ம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாடு படுகொலைகள், 1981ம் ஆண்டு தொன்மையான யாழ் நூல்நிலைய எரிப்பு உட்பட சிறிலங்கா காவல்துறை ஈழத்தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் சொல்லில் அடங்கா.
2015 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை காவல்துறையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்தது. சிறிலங்கா காவல்துறை ஈழத்தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக கண்டறிந்து விசேட அறிக்கையை ஐநா சபைக்குச் சமர்ப்பித்துள்ளார்.
சர்வதேச காவல்துறை ஒத்துழைப்பு தினம் காவல்துறையின் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதற்கும் காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஒரு வாய்ப்பான தினமாகும். சிங்கள அரச காவல்துறையின் அதிகார எல்லைமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரவும், அவர்களுக்கு நீதி கோரவும் ,ந்த நாளை மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-
ஸ்ரிவன் புஸ்பராஜா. க