Home ஆய்வுகள் சிதைக்கப்படும் இருப்பு – துரைசாமி நடராஜா

சிதைக்கப்படும் இருப்பு – துரைசாமி நடராஜா

1 சிதைக்கப்படும் இருப்பு - துரைசாமி நடராஜாபெருந்தோட்ட  மக்கள் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை இல்லாத சமூகமாக இருந்துவரும் நிலையில் அம்மக்களின் இது தொடர்பான கனவு மெய்ப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.இதனிடையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்விடயத்தில் கவனம் செலுத்தியுள்ள நிலையில் இம்மாதத்தில் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் சாத்தியமாகுமென்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.இது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் என்ற வகையில் இதனைச் சாத்தியப்படுத்த சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு சமூகம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அச்சமூகத்தின் உரிமைகளை உரியவாறு உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.இல்லையேல் அச்சமூகத்தின் அபிவிருத்தி தடைப்படுவதோடு, ஏனைய சமூகங்களுக்கும் இச்சமூகத்திற்கும் இடையிலான விரிசல் நிலை அதிகரித்துக் கொண்டே செல்லும்.இதன் பாதக விளைவுகள் அதிகமாகும். இந்நிலையில் மலையக பெருந்தோட்ட சமூகம் இந்நாட்டிற்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்துள்ளபோதும் இன்னும் கூட பல்வேறு உரிமைகள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் நாட்கூலிகளாக வாழ்க்கையை கொண்டு நடாத்துவது வருந்தத்தக்க விடயமாகும்.

அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாத நிலையில் இம்மக்கள் அவலவாழ்க்கை வாழ்வது சகலரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மலையக அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களை வலியுறுத்தி அவ்வப்போது சிற்சில உரிமைகளை பெற்றுக் கொடுத்து வருகின்றபோதும் அவை பூரணத்துவம் மிக்கதாக அமையவில்லை. ஆட்சியாளர்கள் இம்மக்களுக்கு அள்ளிக் கொடுக்காவிடினும் கிள்ளிக் கொடுப்பதற்கும் தயாராக இல்லை. அவ்வாறே ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுப்பதாக இல்லை’ என்பதற்கேற்ப ஆட்சியாளர்கள் ஒரு சில வேளை இம்மக்களுக்கு சில உரிமைகளை வழங்க முன்வருகின்றபோதும் இனவாதிகள் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது கடந்தகால வரலாறாகும்.

காணிசீர்திருத்தச் சட்டம்

தேர்தல் காலங்களில் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளில் கவனம் செலுத்தும் பெரும்பான்மை கட்சிகள் பின்னர் இம்மக்களின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டாகும்.இக்குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலும் இல்லை.பெரும்பான்மை அரசியல்வாதிகள் கூட இக்குற்றச்சாட்டின் நியாயத்தன்மையைப் புரிந்து கொண்டு கருத்து வெளியிட்டு வருகின்றனர். ‘தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு செய்துவரும் தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

200 வருடங்கள் கடந்தும் அவர்களுக்கு சொந்தமாக வீடோ அல்லது காணியோ இல்லை.மரணித்தால் அடக்கம் செய்வதற்கு மயானமும் இல்லை’ என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் அண்மையில் நியாயப்படுத்தி பேசியிருந்தமையும் இங்கு நினைவுகூறத்தக்கதாகும்.

இதேவேளை ‘இலங்கை நாடானது அதன் 75% மக்களான சிங்களவர்களுக்கே சொந்தமானது.சிறுபான்மையினர் எங்களுடன் இந்த நாட்டில் வாழலாம்.ஆனால் அவர்கள் உரிமைகள் என்ற அடிப்படையில் சாத்தியமற்ற எதனையும் கோரிக்கையாக முன்வைக்க முடியாது ‘ என்றவாறு இனரீதியான கருத்துக்களும் கடந்தகாலத்தில் வெளிப்படுத்தப்பட்டிருந்தமையும் தெரிந்ததேயாகும

எவ்வாறெனினும் உரிமைகள் வரிசையில் மலையக மக்களின் காணியுரிமை குறித்தும் நீண்ட காலமாகவே குரலெழுப்பப்பட்டு வருகின்றது. காணியுரிமை நடவடிக்கைகளிலும் இனவாதம் தலைவிரித்தாடுவது புதிய விடயமல்ல. இலங்கையில் விவசாய நிலமற்ற குடியானவர்கள் பெருமளவினராகக் காணப்படுவதுடன், இதற்காக மேற்கொள்ளப்பட்ட வரண்ட வலயக் குடியேற்றங்கள் போதியளவு விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

எனவே நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதல், அதன்மூலம் நிலவுரிமை பெற்ற விவசாயிகள் சிறந்த முறையில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்நிலங்களில் உற்பத்தித்திறனை அதிகரிக்க வழிசெய்தல் என்ற நோக்கங்களின் அடிப்படையில் நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதற்கேற்ப 1972 இல் கொண்டுவரப்பட்ட காணி உச்ச வரம்பு சட்டமும், அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் தேயிலைக் காணிகளின் உடைமைகளில் பாரிய மாற்றங்களுக்கு வித்திட்டன. இச்சட்டத்தின் கீழ் இலங்கையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் காணிகளின் உடைமைகளுக்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டது.

இதன்படி நெற்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 10 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியுடைமைகளும், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 20 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியார் உடைமைகளும் நிலச்சீர்திருத்த ஆணைக்குழுவினரால் சுவீகரிக்கப்பட்டன. 1972 இல் பெருந்தோட்டக் காணிகளில் சிறிய பகுதியினை மட்டுமே சுவீகரிக்க முடிந்தது. எனினும் 1972 இனை தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தேயிலைக் காணிகளைப் பொறுத்தவரையில் மேலும் 13,862 ஹெக்டேயர் காணிகள் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டன.1975 ம் ஆண்டு காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவின் இரண்டாவது நடவடிக்கையின்போது பெரும்பாலான பெருந்தோட்டக்காணிகள் சுவீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோரிக்கை புறக்கணிப்பு

இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகள் பெரும்பான்மையினருக்கே பகிர்ந்தளிக்கப்பட்டவரலாறு கசப்பானதாகும். 1980 இல் பயனற்ற தேயிலைக் காணிகள் என சுமார் 10,000 ஹெக்டேயர் காணிகள் கம்பளை, கண்டி, உலப்பனை, கடுகண்ணாவை பகுதியில் இனங்கானப்பட்டன. இந்நிலத்தை மாற்றுப்பயிர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.உலக வங்கியும் இத்திட்டத்திற்கு அனுசரணையாக இருந்ததுடன் இத்திட்டத்தின் கீழ் ஏலக்காய்,கராம்பு போன்ற வாசனைப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் திட்டமிட்டு சுவீகரிக்கப்பட்ட தேயிலைக் காணிகளை காணியற்ற கிராமிய மக்களுக்கு பகிர்ந்தளித்தனர்.

இந்நிலையில் தோட்டத்தில் வேலைசெய்யும் இந்திய வம்சாவளியினருக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு கிராமிய மக்கள் மட்டுமே காணிவழங்கலில் உள்ளீர்க்கப்பட்டனர்.மலையக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து திட்டமிடப்பட்ட அடிப்படையில் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் துணைபோயின.

நாட்டில் பெருந்தோட்ட தேயிலை விளைநிலங்கள் அபிவிருத்தி என்னும் போர்வையில் சுவீகரிக்கப்பட்ட வரலாறுகளும் அதிகமுள்ளன. இதனால் மலையக மக்களின் இருப்பு சிதைக்கப்பட்டதோடு அரசியல் உள்ளிட்ட பல துறைகளிலும் அவர்கள் பாதிப்பை எதிர்நோக்க வேண்டியேற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நட்சா திட்டம், மகாவலி குடியேற்றம்,தோட்டக் கொத்தணி முறை, திட்டமிடப்பட்ட குடியேற்றம் (1972,1975,1977 ம் ஆண்டுகளில் தீவிரமாக இடம்பெற்றது) என்பன மலையக மக்களின் பலத்தைக் குறைக்கும் முயற்சியேயாகும்.

திட்டமிடப்பட்ட குடியேற்றங்களுக்கு துணைபோகும் வகையில் நிலச்சீர்திருத்தங்கள், பன்முகப்படுத்தல், தோட்டப்புற கிராமப்புற ஒருங்கிணைப்பு என்ற பெயர்களில் 77 ம் ஆண்டு 81 ம் ஆண்டு 83 ம் ஆண்டுகளில் பரவலாக இனக்கலவரங்கள் ஏற்பட்டது.இந்த இனக்கலவரங்கள் மலையக மக்களை பெரிதும் பாதித்தது. இத்தகைய நிலைமைகளினால் பெருந்தோட்டங்கள் வீழ்ச்சியுற்ற அதேவேளை சிறுதோட்டங்கள் நாட்டில் எழுச்சி பெற்றதையும் அவதானிக்க முடிந்தது. இதற்கேற்ப 1983 இல் இலங்கையின் மொத்த தேயிலை நிலப்பரப்பில் 75,769 ஹெக்டேயராக சிற்றுடைமைகளின் பரப்பு காணப்பட்டது.

இது மொத்த தேயிலை நிலப்பரப்பின் 36 வீதமாகும். 1994 இல் 76,569 ஹெக்டேயராகவும், 2005 இல் 118,274 ஹெக்டேயராகவும், 2014 இல் 132,335 ஹெக்டேயராகவும்  சிறறுடைமைகளின் பரப்பு படிப்படியாக அதிகரித்த போக்கினை வெளிப்படுத்தியது. பெருந்தோட்டக் காணிகளின் சுவீகரிப்பு உள்ளிட்ட பல நிலைமைகள் தேயிலைப் பெருந்தோட்டங்களில் பதிவுசெய்துள்ள தொழிலாளர் எண்ணிக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 1980 இல் 541,971 தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களில் பதிவுசெய்து கொண்டிருந்தனர்.2000 மாம் ஆண்டில் இது 277,886 ஆகவும்,2015 இல் 158,322 ஆகவும் காணப்பட்டது. சமகாலத்தில் சுமார் 130,000 இற்கும் குறைவான தொழிலாளர்களே தோட்டங்களில் தொழில்புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட ஜனாதிபதி செயலணி

இந்திய வம்சாவளியினருக்கு தங்கியிருக்கும் வீடு, காணி என்பவற்றுக்கு உரித்துரிமை உண்டென திரும்பத்திரும்ப பரம்பரையாக வாக்களிக்கப்பட்டது.இது இன்றும் நிறைவேற்றப்படாதுள்ளது.இச்சமூகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சமூகங்களின் பாரபட்சத்துக்கும் உள்ளாகியுள்ளது.இச்சூழ்நிலையும், இப்பாரபட்சத்தை நீக்குவதற்கு அரசு முயலாமையும் தோட்டங்களுக்கு வெளியே இந்திய வம்சாவளியினர் சுதந்திரமாக தனது வதிவிடங்களை தேடிக்கொள்ள முடியாமல் செய்துள்ளன.பெருந்தோட்டங்களில் காணியுரிமையும் நிலப்பயன்பாடும் தெளிவாக பௌதீக ரீதியாக ஒரு  இன பாரபட்சத்தை காட்டி நிற்கின்றது என்றும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே மலையக மக்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய 10 பேர்ச் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் உறுதியளித்திருந்தார். மேலும் மலையக மக்கள் தமது காணிகளில் தேயிலையை பயிரிட்டு அவற்றை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கக் கூடிய வகையில் பெருந்தோட்டத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதேவேளை ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்படும் விசேட ஜனாதிபதி செயலணியின் ஊடாக பெருந்தோட்ட மக்களின் பொருளாதார சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமை மாத்திரமின்றி பயிர்ச்செய்கை, வீட்டு உறுதி சிறுதோட்ட உரிமை என்பவற்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சஜித் முன்னதாக தெரிவித்திருந்தார்.

காணியுரிமையானது சமுதாயங்களில் மக்களுக்கு அந்தஸ்து, அதிகாரம், செல்வாக்கு என்பவற்றை அளிக்கின்றது.நிலமற்ற ஏழைக் குடியானவர்கள் நிலவுடைமையைப் பெறுவதன் மூலம் சமூக அந்தஸ்தினைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.இது சமூகத்தில் சமத்துவத்தினை வளர்க்க உதவியாய் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. காணியுரிமை என்பது பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் மறுக்கப்பட்ட ஒன்றாகவே தொடர்ச்சியாக இருந்துவரும் நிலையில் இம்மக்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்கும் முனைப்புகளும் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றன.இந்தவகையில் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் இம் மாதத்தில் சாத்தியமாகும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமையும் இங்கு நோக்கத்தக்கதாகும். இதன் வெற்றிக்கு அனைவரும் அரசியல் தொழிற்சங்க பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.

Exit mobile version