‘சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்க முடியாது’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (12) செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மாறுப்பட்டதொரு இடதுசாரி கொள்கையை கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய இடதுசாரி கட்சிகளுக்கும் ஜே.வி.பிக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
‘சிங்கள தேசியத்துடன் இணைந்து போவதாக குறிப்பிடுகின்ற ஜே.வி.பி தங்களின் இடதுசாரி கொள்கையில் இருந்து விடுபட்டு செயற்படுகிறது’ என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘தற்போது அதனை வெளிப்படுத்தும் விதமாக லிபரல்வாத கொள்கையுடன் அநுரகுமார திசாநாயக்க செயற்படுகிறார்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாகவும் அதன் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
‘எவ்வாறாயினும், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் எந்த கட்சியுடன் இணைவது என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும்’ என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.