Tamil News
Home உலகச் செய்திகள் “சாத்தான்குளம் வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும்” – ஐ.நா. வலியுறுத்தல்

“சாத்தான்குளம் வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும்” – ஐ.நா. வலியுறுத்தல்

சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கருத்துத் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ்நாடு,தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி தங்களது கடையைக் கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை முதலில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அது தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

நியூயார்க்கில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதன் பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு மரணத்தையும், அதுசார்ந்த அனைத்து வழக்குகளையும், முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்தார்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version