Home ஆய்வுகள் சர்வதேச விதவையர் தினம்: குடும்பத் தலைமை ஏற்ற பெண்களின் இன்னல் தீர்க்கும் தினமாக்க வேண்டும்...

சர்வதேச விதவையர் தினம்: குடும்பத் தலைமை ஏற்ற பெண்களின் இன்னல் தீர்க்கும் தினமாக்க வேண்டும் – பி.மாணிக்கவாசகம்

ஆண்டு தோறும் ஜுன் 23 ஆம் திகதி சர்வதேச விதவையர் தினம் உலகம் முழுதும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. ஆண் துணையற்று, தனிமையில் குடும்பப் பொறுப்புக்களைச் சுமக்கும், கணவனை இழந்த கைம்பெண்களாகிய விதவைகள் சமூக வாழ்க்கையில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விழிப்பூட்டுவதை இந்தத் தினம் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றது.

விதவைகள் குறித்து விழிப்பூட்டுவதுடன், அவர்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த சர்வதேச தினம் முற்படுகின்றது. அந்த வகையில் இந்த வருடம் ‘கண்ணுக்குத் தெரியாத பெண்கள் கண்ணுக்குத் தெரியாத இன்னல்கள்’ என்ற தொனிப் பொருளில் சர்வதேச விதவையர் தினம் அனுட்டிக்கப்பட்டது.

இந்த வருடத்திற்கான தொனிப் பொருளே பெண்களில் விதவைகள் என்ற வகையினர் சமூகத்திலும், நாடுகளிலும் இருக்கின்றார்கள் என்ற யதார்த்தம் ஏனையவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை. இன்னும் சரியாகத் தெரிய வரவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்தவதாக அமைந்திருக்கின்றது.

அது மட்டுமல்ல. அவர்கள் எதிர் நோக்கியிருக்கின்ற – அனுபவித்து வருகின்ற இன்னல்கள், துன்பங்கள், சிரமங்கள் என்பவையும், எனையவர்களின் கண்ணுக்குச் சரியாகப் புலப்படவில்லை என்ற உண்மையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஐ.நா மன்றத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விதவைகளுக்கான சர்வதேச தினம், கணவரை இழந்த பெண்களுக்கான தினமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும், ஆயுத முரண்பாடு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் பிறழ்ந்துள்ள சமூகங்களிலும், நாடுகளிலும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை கட்டுக்கு அடங்காமல் அதிகரித்திருக்கின்றன.

பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்கள் எனும் போது, ஐ.நாவினால் குறித்துக் கூறப்பட்டுள்ள கணவனை இழந்தவர்களாகிய விதவைகள் மட்டுமன்றி, கணவனைப் பிரிந்து குடும்பச் சுமையை ஏற்று நடத்த வேண்டிய கட்டாய நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பெண்களும் அதில் உள்ளடங்கி இருக்கின்றார்கள்.

இதனால் வளர்முக நாடுகளிலும், வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் உள்ள விதவைகளை மாத்திரம் குறிப்பிடுகின்ற சர்வதே விதவையர் தினம் என்பது, பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பப் பெண்களின் தினமாக அனுட்டிக்கப்பட வேண்டும். விதவைகளிலும் பார்க்க குடும்பச் சுமையைப் பொறுப்பேற்றுள்ள கணவனிடம் இருந்து வலிந்து பிரிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலைமைகள் மிக மோசமாக இருக்கின்றது. அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், இன்னல்களுக்கு அளவே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமைகள் மோசமாக உள்ளன.

Capture.JPG 2 5 சர்வதேச விதவையர் தினம்: குடும்பத் தலைமை ஏற்ற பெண்களின் இன்னல் தீர்க்கும் தினமாக்க வேண்டும் - பி.மாணிக்கவாசகம்உண்மையில் இந்த குடும்பப் பொறுப்புக்களை ஏற்றுள்ள குடும்பத் தலைவிகளான பெண்களின் உண்மையான நிலைமை என்ன என்பதை நோக்க வேண்டியது அவசியமாகின்றது.

நலிவடைந்த குடும்பங்கள்

இலங்கையின் முப்பது வருட கால யுத்தம் எண்ணற்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை உருவாக்கி விட்டிருக்கின்றது. குடும்பத்தின் உழைப்பாளியும் பாதுகாவலனுமாகிய கணவனை இழந்த குடும்பங்கள் இதில் முன்மை பெறுகின்றன. அதேவேளை யுத்த மோதல்களின் போது படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள், குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினால் படுகாயமடைந்து அவயவங்களை இழந்தும், படுகாயங்களின் போது முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு அவயவங்கள் செயலிழந்தும், பக்கவாதம் அல்லது முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டும் செயற்பட முடியாத நிலையில் உள்ள கணவன்மாரைக் கொண்ட குடும்பங்களும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாக மாறி இருக்கின்றன.

அதேவேளை, படையினரால் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கணவன்மாரையும், குடும்பத்தைத் தாங்கும் வகையில் உழைப்பாளிகளான மகன்மாரையும் இழந்த குடும்பங்களும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகி இருக்கின்றன. இதையும்விட விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் அல்லது அந்த அமைப்பிற்கு உதவி புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றியும், நீதி விசாரணைகளின்றியும் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் என்ற வகுப்பிற்குள் அடங்குகின்றன.

பொதுவாக ஆண் துணையற்ற குடும்பங்கள், தமிழ் சமூகக் கட்டமைப்பின் கீழ் நலிவடைந்த குடும்பங்களாகவே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள் பல்வேறு சிரமங்களுக்கும், கஸ்டங்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

மத ரீதியான மரபுகளும், சமூக, பொருளாதார, கலை கலாசார ரீதியிலான சிக்கல்களும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்களை சீரழிப்பவையாகத் திகழ்கின்றன. சமூகத்தில் வலிமை குறைந்தவர்களாகவும், ஆண் துணையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற சமூக, கலாசார பண்பாட்டுப் போக்கும், எழுத்தில் வடிக்கப்படாத கண்ணுக்குப் புலப்படாத மரபு ரீதியிலான சட்டதிட்டங்களைக் கொண்டுள்ள சமூகத் தளைகளும்  குடும்பங்களுக்குத் தலைமை தாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கின்ற பெண்களைப் பெரிதும் வாட்டுகின்றன.

உழைப்பாளியும் பாதுகாவலனுமாகிய கணவன்மார் செயல் வல்லமையுடன் திகழ்கின்ற குடும்பங்களில் கூட துடிப்பும் செயற்திறனும் கொண்ட பெண்கள் தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் பல்வேறு சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாக நேரிடுகின்றது. இந்த நிலையில் ஆண் துணையின்றி அல்லது செயல்வல்லமை குறைந்த கணவன்மாரைக் கொண்டிருக்கும் போது சமூகத்தில் அவர்களின் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

இருமடங்காகியுள்ள கடமைகளும் பொறுப்புக்களும்

பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள். அவர்கள் ஆண்களுடன் சம உரிமை உடையவர்களாக மதிக்கப்பட வேண்டும். ஆண்களுக்கு சமமாக மதிக்கப்பட வேண்டும். கௌரவமளிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் பெண் உரிமை நிலைமைகளில் பேசப்பட்டாலும், பெண்களுக்காகக் குரல் எழுப்பப்பட்டாலும் நடைமுறையில் பெண்கள் ஆண்களுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து கணிக்கப்படுகின்றார்கள்.

அரச தனியார் நிறுவனங்களின் தொழில் நிலைமைகளில் பெண்களும் ஆண்களும் சம சம்பள உரிமை உடையவர்களாகத் திகழ்ந்த போதிலும், தொழில் முன்னேற்ற வாய்ப்புக்களில் ஆணாதிக்கம் மேலோங்கிப் பெண்களை இரண்டாந்தர நிலைக்குத் தள்ளியிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.

தொழில் நிலையில் அதிகாரத்தில் இருக்கின்ற ஆண்கள் அனைவருமே பெண்களை சமமாகக் கருதிச் செயற்படுவதில்லை. பெரும்பாலானவர்கள் பெண்களைத் தமது கைப்பொம்மைகளாக வைத்து காரியமாற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இருக்கின்றார்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதுடன் நில்லாமல், அவர்களைத் தமது பாலியல் இச்சைகளுக்குப் பலியாக்கிக் கொள்வதிலும் அந்த ஆண்கள் பின்நிற்பதில்லை.

இத்தகைய தொழில் நிலைமைகளில் செயற் திறமையும், வல்லமையும் கொண்ட பெண்களும் சூழ்நிலைக் கைதிகளாகி துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது. தமக்கு எதிரான அடக்கு முறைகளையும், அநியாயங்கள் அட்டூழியங்களையும் மௌனமாக சகித்துக் கொள்கின்ற அவல நிலைமைக்கு அவர்கள் ஆளாகியிருக்க நேரிடுகின்றது.சமூகத்தின் உயர் மட்டம் மற்றும் நடுத்தர வகுப்புக்களைச் சேர்ந்த பெண்களிலும் பார்க்க வறிய நிலையில் குடும்பங்களுக்குத் தலைமை தாங்க வேண்டிய பெண்கள் அதிக துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். கணவனுடைய துணை இருக்கும்போது இந்தப் பெண்கள் வீட்டு நிர்வாகத்தைக் கவனிப்பதிலும், பிள்ளைகளையும் கணவனையும் பேணுவதிலும் வீட்டுச் சமையல் உள்ளிட்ட இல்ல முகாமைத்துவச் செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

கணவன் இல்லாத நிலையில் அல்லது செயற்பட முடியாத நிலையில் பராமரிக்க வேண்டிய தேவையுடைய கணவன்மாரைக் கொண்டிருக்கும் நிலையில் இந்தப் பெண்களின் கடமைகளும் பொறுப்புக்களும் இருமடங்கு, மும்மடங்காக அதிகரித்திருப்பதைக் காண முடிகின்றது.

வீட்டு நிர்வாகத்துடன் குடும்பத்தைக் கொண்டு நடத்துவதற்கான வருமானத்தைத் தேடவேண்டிய சுமையும் அவர்களை அழுத்துகின்றது. அதற்கு மேலாக அவர்கள் தங்களுடைய பிள்ளைகளைப் பேணுவதிலும் கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். வேலைக்குச் செல்லும்போது அல்லது சுயதொழில் முயற்சியாயின், தொழில் நிமித்தமாக சந்தை உட்பட வெளிக் காரியங்களைக் கவனிப்பதற்காக அவர்கள் அதிக நேரத்தைச் செலவிட நேரிடுகின்றது.

இத்தகைய சந்தர்ப்பங்களில் இந்தப் பெண்கள் தமது பிள்ளைகளைக் கண்காணித்து, அவர்களை சரியான வழியில் வழிநடத்திச் செல்வதும் இயலாத காரியமாகி விடுகின்றது. இதனால் தற்போதைய விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினால் உருவாகியுள்ள சமூக நெறிபிறழ்வு நிலையில், உரிய கண்காணிப்பும் வழிநடத்தலும் இன்றி பிள்ளைகள் தவறான வழிகளில் செல்வதற்குத் தூண்டப்படுகின்றார்கள். இதனால் பிள்ளைகள் வேண்டாத விவகாரங்களில் சிக்கி குடும்பப் பொறுப்புக்களில் சிக்கியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மேலும் மேலும் கஸ்டங்களையும், மன உளைச்சல்களையும் ஏற்படுத்தி விடுகின்றனர்.

இலங்கையில் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களாகிய தமிழர் தாயகப் பிரதேசத்தில் மாத்திரம் 90 ஆயிரம் விதவைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றது. இவர்கள் அனைவரும் சர்வதேச தினம் குறிப்பிடுகின்ற விதவைகளாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு மேலாக கணவனின் செயல் வல்லமையுடன் கூடிய, துணை இல்லாத பெண்களாகப் பலர் இருக்கின்றனர். அவர்கள் மீது வலிந்து சுமத்தப்பட்டுள்ள குடும்பப் பொறுப்பைச் சுமக்க முடியாமல் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி இருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவ்வாறு பெண்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உரிய சமூகப் பாதுகாப்பும் வாழ்வாதாரத் துணையும், பொருளாதார ரீதியிலான பாதுகாப்பும் இல்லாமல் இன்னலுற்றிருக்கின்ற நிலைமை உரிய முறையில் அடையாளம் காணப்படவில்லை என்றே கூற வேண்டும்.

ஆரோக்கியமற்ற சமூக உருவாக்க ஆபத்து

கணவனை இழந்தவர்கள், குடும்பப் பொறுப்பைச் சுமப்பவர்கள் என்ற ரீதியில் ஓர் அனுதாப அலையில் அவர்கள் சிக்கியிருக்கின்றார்களே தவிர அவர்கள் உண்மையான சமூக ரீதியிலும் அரசியல் வழிமுறையிலும் சரியாக அடையாளம் காணப்பட்டு அவர்களது அமைதியான வாழ்வுக்குரிய ஆதார கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வில்லை.

இந்தப் பெண்களுடைய பிரச்சினை வெறுமனே கணவனின் துணையில்லை என்ற குறுகிய வட்டத்திற்குள் அடக்கப்படக் கூடியதல்ல. அது சமூகக் கட்டமைப்பு சார்ந்தது. அது, அரசியல் ரீதியாகவும் சமூகப் பண்பாட்டு ரீதியாகவும் கட்டமைக்கப்பட்ட வழிமுறைகளின் மூலம் தீர்வு காணப்பட வேண்டியது.

அவர்களுக்கு வெறுமனே கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு போன்ற சாதாரண வாழ்வாதார உதவிகள் மட்டும் போதாது. அவர்களுக்கான வாழ்வாதாரம் என்பது நிலைத்து நிற்கத் தக்க உட்கட்டமைப்புக்களைக் கொண்ட வாழ்வாதார உதவிகளாகக் கட்டமைத்து வழங்கப்பட வேண்டும்.

கலை, கலாசார, பண்பாட்டு ரீதியாக சமூகத்தில் அவர்களின் அக வாழ்க்கையும், புற வாழ்க்கையும் பாதுகாப்புடன் அமைவதற்கான வழிமுறைகள் வகுத்துச் செயற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அவர்களது பிள்ளைகளின் ‘சிறுவர் பாதுகாப்பு நிலைமைகள்’ சட்ட ரீதியாக செயற்படு நிலையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

அவர்களுடைய கல்வி, எதிர்கால வாழ்க்கை என்பன தொடர்பிலும் நிரந்தரமான திட்ட வழிமுறைகளின் ஊடான வேலைத் திட்டங்கள் வகுத்து செயற்படுத்தப்பட வேண்டும்.

ஏனெனில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது குடும்பப் பொறுப்புக்களில் முக்கியமாகத் தமது பிள்ளைகளைக் கண்காணித்து பாதுகாப்பான முறையில் வளர்த்தெடுக்க முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இதனால் இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இளமையில் பெற வேண்டிய கல்விச் செல்வத்தைதைப் பெற முடியாமல் தீய வழிகளில் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறு உரிய வழி நடத்தலின்றி காணப்படுகின்ற சிறுவர்களையும், இளம்பராயத்தினரையும் கொள்ளையர்களும் சமூக விரோதிகளாகிய போதைப் பொருள் கடத்தல்காரர்களும் போதைப் பொருள் வியாபாரிகளும் தங்களுடைய தேவைகளுக்காக இலகுவாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களும் இளைஞர்களும் கொள்ளையர்களாக மாறுவதுடன் போதைப் பொருளுக்கு அடிமையாவதோடு, போதைப் பொருட்களை விநியோகிப்பவர்களுமாக சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலைமைகள் தமிழ் சமூகத்தை சமூக விரோதிகள் நிறைந்ததோர் ஆரோக்கியமற்ற சமூகமாக மாற்றுவதற்கே வழிசமைத்திருக்கின்றன. இற்த நிலைமை ஆபத்தானது. இதனை அனுமதிக்க முடியாது. அனுமதிக்கக் கூடாது. எனவே சர்வதேச விதவையர் தினத்தை அதன் வரையறைகள் எதுவாக இருந்த போதிலும், குடும்பப் பொறுப்புக்களை ஏற்று கண்ணுக்குத் தெரியாத வகையிலான இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்குமான ஆக்க பூர்வமான செயற் திட்டங்களை வகுத்துச் செயற்படுவதற்கு அதிகாரத்தில் உள்ள சம்பந்தப் பட்டவர்களும் சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்களும் முன்வர வேண்டும்.

 

 

Exit mobile version